January 25, 2026
  • January 25, 2026
Breaking News
January 25, 2026

வங்காள விரிகுடா திரைப்பட விமர்சனம்

By 0 12 Views

ஒரு திரைப்படத்தில் ஒருவரே பல பொறுப்புகளை ஏற்பது நாம் அறிந்த விஷயம்தான். அந்த வகையில் டி ராஜேந்தர் அதிகபட்ச பொறுப்புகளை இதுவரை ஏற்றிருந்தார். 

இப்போது அவரது வழியில்… ஆனால் அவரைக் காட்டிலும் அதிகமான பொறுப்புகளை இந்தப் படத்தில் ஏற்றிருக்கிறார் குகன் சக்கரவர்த்தியார்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிப்பு, இசை, பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடனம், ஸ்டண்ட், கலை இயக்கம், பின்னணி பாடகர், உடை அலங்காரம், சிகை அலங்காரம், ஒப்பனை, வெளிப்புற படப்பிடிப்பு தள நிர்வாகி, புரொடக்க்ஷன் டிசைனர், டைட்டிலிங் உள்ளிட்டு ஒரு படத்தின் 21 பொறுப்புகளை குகன் சக்கரவர்த்தியாரே ஏற்று இந்த படத்தைத் தன் தோளில்… அல்ல அல்ல, தலையில் தாங்கி முடித்து திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

அந்தத் திறமைக்கே முதலில் பாராட்டுகள்..!

இதில் எந்த விஷயத்தைப் பாராட்டினாலும் அது அவருக்குதான் போய் சேரும்… எந்த விஷயத்தைக் குறை சொன்னாலும் அதுவும் அவரைத்தான் சேரும் என்கிற அளவில் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். 

தூத்துக்குடியைச் சேர்ந்த அவர் அண்ணாச்சி என்று அழைக்கப்படுகிறார். சொத்து சுகம் எல்லாம் இருந்தும் காதல் கைகூடாமல் போய் ஒரு இளம் பெண்ணை அவசரத் திருமணம் செய்து அவளுடனும் வாழ முடியாத நிலையில் ஒருநாள் வங்காள விரிகுடா கடற்கரையில் படுத்திருக்கும் போது முன்னாள் காதலி தற்கொலை செய்து கொள்ள அங்கு வருகிறார். 

அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்து விஷயத்தைக் கேட்கும்போது அவரும் மன வாழ்க்கையில் கணவனால் பாதிக்கப்பட்டு இருப்பது புரிகிறது. எனவே பிரச்சனைக்கு காரணமான அவளது கணவனை தீர்த்து கட்டுகிறார்.

ஆனால் அங்கிருந்துதான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. இறந்து போனவர் தொலைபேசி வழியாகவும், நேரிலும் வந்து பயமுறுத்த குகன் அதை எப்படி சமாளிக்கிறார், அதன் முடிவு என்ன ஆனது, அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணுடன் வாழ்ந்தாரா அல்லது காதலியுடன் வாழ்ந்தாரா என்பது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் மீதிப் படம் பதில் சொல்கிறது. 

அழகான முக வெட்டு, அற்புதமான உடற்கட்டு, போதுமான உயரம், மாநிறம் என்று 90களின் ஹீரோக்கள் எவருக்கும் குறைவில்லாத அளவில் கவனத்தைக் கவர்கிறார் குகன் சக்கரவர்த்தியார். 

இதை வைத்துக்கொண்டு சரியான ஒரு இயக்குனரைப் பிடித்திருந்தால் தமிழில் தவிர்க்க முடியாத ஹீரோ ஆகியிருப்பார். 

ஆனால் எல்லாவற்றையும் தன் தலையில் போட்டுக் கொண்டதில் இயக்கத்தில் சரியான கவனம் செலுத்த முடியாமல் போயிருக்கிறது. 

நடிப்பிலும் தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார். சரியான இயக்குனர் கையில் சிக்காததால் எந்த இடத்தில் எந்த அளவுக்கு நடிக்க வேண்டும் என்பதில் மட்டும் அவருக்கு ஒரு அளவுகோல் தேவைப்படுகிறது. 

கதைப்படி இரண்டு நாயகிகள். அவர்களுடன் மேலும் இரண்டு துணைப் பாத்திரங்கள் என்று படம் முழுவதும் கலர்ஃபுல்லான அழகிகள் பவனி வருகிறார்கள். 

எல்லோரும் புதுமுகங்கள் என்று இருக்க, அனுபவ நடிகர்களான வையாபுரி, வாசு விக்ரம், பொன்னம்பலம் போன்றோரின் ஒத்துழைப்புடன் இந்தக் கதையை சொல்லி இருக்கிறார். 

பாடல்கள் குறிப்பிடத்திருந்தவையாக இருக்கின்றன. அதற்கான இசையும் சபாஷ் ரகம்.

அந்த வகையில் டி ஆர் போன்று பலதரப்பட்ட இசையில் வரும் பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. 

பெரும்பாலும் படத்தில் வெள்ளை வேட்டி  அணிந்து வரும் குகன் அதற்கு சம்பந்தமே இல்லாமல் சாக்ஸ் போட்டு கருப்பு ஷூவுடன் வருகிறார். சட்டைக்கு மேலே கலர் கலராக கையில்லாத ஜாக்கெட்டும் அணிந்து வருகிறார். இது என்ன விதமான உடையலங்காரம் என்று தெரியவில்லை. 

சண்டைக் காட்சிகள் விறுவிறுப்புடன் இருக்கின்றன. 

ஒரு கட்டத்தில் ஆவிகள் உலவும் அமானுஷ்ய கதை போல் திரும்பும் திரைக்கதை சரியான லாஜிக்குடன் மர்ம முடிச்சை அவிழ்க்கிறது.

ஆனால், இந்தப் படத்துக்கு ஏன் வங்காள விரிகுடா என்ற பெயர் வைத்தார் என்று யாரும் கேட்டு விடக்கூடாது என்பதற்காக கதைக்கே சம்பந்தம் இல்லாமல் கடைசியில் அப்துல் கலாமின் மரணத்தை நேரடி காட்சிகளாக காட்டி அவர் வழியில் இவரும் தொடர்வதாக கதை முடிகிறது. (அத்தனை கொலைகள் செய்துவிட்டா..?)

அத்துடன் தமிழகத்தின் பெருந்தலைவர்கள் அத்தனை பேரும் வங்காள விரிகுடா கடற்கரையில்தான் மீளாத் துயில் கொண்டிருக்கிறார்கள் என்பதால் மெரினா கடற்கரையை ‘திராவிடக் கடற்கரை’ என்ற பெயர் மாற்றம் செய்யும்படி தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்து படத்தை முடிக்கிறார்.

அதுதான் திட்டம் என்றால் அதையொட்டியே ஒரு கதை எழுதி இருக்கலாம். 

வங்காள விரிகுடா – எத்தனை பொறுப்புடா..?

– வேணுஜி