October 18, 2025
  • October 18, 2025
Breaking News
April 24, 2025

வல்லமை திரைப்பட விமர்சனம்

By 0 353 Views

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று ஒரு பழமொழி உண்டு. அதை மெய்ப்பிக்கும் தாவீது – கோலியாத் கதை நாம் சிறுவயதிலேயே அறிந்து வைத்திருப்பதுதான். எதிரி எவ்வளவு வலிமையானவனாகவும், நாம் எவ்வளவு பலவீனமானவனாக இருந்தாலும் திட்டமிட்டு புத்திசாலித்தனமாக செயல்பட்டால் அவனை வீழ்த்தலாம் என்பதை அடிநாதமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை இது.

மனைவியை இழந்து ஒரே மகளுடன் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து போஸ்டர் ஒட்டும் வேலையில் இருக்கிறார் நாயகன் பிரேம்ஜி. ஒட்டும் போஸ்டரை விட பலவீனமாக இருக்கும் அவர்தான் பலம் பொருந்திய எதிரியை வீழ்த்த முடிவு எடுக்கிறார். அது எப்படி என்பதுதான் கதை.

நடப்பதற்குக் கூட தெம்பில்லாமல் இருக்கும் பிரேம்ஜி, நடிப்பில் பலவீனமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். சொல்லப் போனால் பலவீனமான அந்தக் கேரக்டருக்கு பிரேம்ஜியின் உடல் தன்மையே பலமாக அமைந்திருக்கிறது. 

மகளுக்கு நேர்ந்த பாலியல் துன்பத்துக்காக அவர்தான் அதிகமாக பதட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லாமல் மகளின் பதட்டத்தையும் குறைத்து சரியாக காய் நகர்த்தி அமைதியாக எப்படி வென்றார் என்பதை சொல்லி இருக்கும் இயக்குனர் கருப்பையா முருகனின் தைரியத்துக்கும் பாராட்டுக்கள்.

பிரேம்ஜியின் மகளாக நடித்திருக்கும் திவதர்ஷினியின் தோற்றமும் நடிப்பும் நம் பரிதாபத்தை சம்பாதித்துக் கொள்கிறது. தனக்குத தொல்லை கொடுத்தவன் தண்டனை பெற்றே ஆக வேண்டும் என்று அந்தச் சிறுமி பொருமுவதில் இருந்தே அவள் வேதனை நமக்குப் புரிகிறது.

அதேபோல், சி ஆர் ரஜித்தின் வில்லத்தனம் நம்மை வெறுக்க வைப்பதிலிருந்தே அவர் பாஸ் மார்க் வாங்கிவிட்டதையும் புரிந்து கொள்ளலாம்.

பெரும்பாலும் படிப்பறிவு இல்லாத குடும்பப் பெண்ணாகவே நாம் பார்த்த தீபா சங்கரை இதில் மருத்துவராகப் பார்ப்பதற்கு ஆறுதலாக இருக்கிறது. நல்ல நடிகையான அவரும் தன் பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். 

இவர்களைத் தவிர காவல் ஆய்வாளராக வரும் முத்துராமன், போலீஸ் கான்ஸ்டபிளாகவரும் சூப்பர்குட் சுப்ரமணி, வில்லனின் கார் டிரைவராக வரும் சுப்பிரமணியன் மாதவன், பெட்ரோல் திருடன் பாபுவாக வரும் விது, அரசுப் பள்ளி பியூனாக போராளி திலீபன் உள்ளிட்ட  அனைவரும் தங்கள் பாத்திரங்களைத் தூக்கிப் பிடித்திருக்கிறார்கள்.

படத்தின் தன்மைக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ப இசையமைப்பாளர் ஜி.கே.வி, ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமி, எடிட்டர் சி கணேஷ் குமார் உள்ளிட்ட. கலைஞர்கள் தங்கள் பங்களிப்பை த் தந்திருக்கிறார்கள்.

இதுபோன்ற சின்னப் படங்களில் பெரிய கருத்துக்களைச் சொல்ல முடிவு எடுக்கும் போது அதை சுவாரசியம் குறையாமல் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் இது போன்ற படங்களைக் கொண்டாட முடியும். 

வல்லமை – துணிந்தவனுக்குக் கல்லும் ஆயுதம்..!

– வேணுஜி