January 23, 2025
  • January 23, 2025
Breaking News
January 23, 2025

வல்லான் திரைப்பட விமர்சனம்

By 0 30 Views

‘வல்லவன் ‘ என்ற தலைப்பு வைத்தாயிற்று. ‘வல்லவனுக்கு வல்லவனு’ம் ஏற்கனவே வைத்தாயிற்று- வேறு என்னதான் செய்வார்கள் இயக்குனர்கள்..? அதனால் இந்தப் படத்துக்கு இப்படி ஒரு தலைப்பு பிடித்திருக்கிறார் இயக்குனர் இயக்குனர் வி.ஆர்.மணி சேயோன்.

ஆனால், தலைப்பு புரிகிறது அல்லவா..? அதே  வல்லவன்தான். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் காவல்துறையைச் சேர்ந்த சுந்தர் சி. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையிலும் எப்படித் துப்பறிந்து காவல்துறைக்குப் பெயர் வாங்கி தருகிறார் என்கிற லைன்தான்.

காவல் துறையில் இருந்தாலும் தன்யா ஹோப்புடன் திருமண நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், தன்யா காணாமல் போக அது பற்றிப் புகார் செய்யும் போது, தவறாக பேசும் மேல் அதிகாரியை அடித்து விடும் சுந்தர்.சி அதற்காகத்தான் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்.

ஆனாலும், தொழிலதிபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட, அந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறைக்கு துப்பு கிடைக்காமல் போலவே சுந்தர் சி .யை நாடுகிறார் மேலதிகாரி.

தொழிலதிபர் கொலை வழக்கில் விசாரணை மேற்கொள்கிறார் சுந்தர்.சி. ஆனால், மேலும் சில கொலைகள் நடந்து மேலும் சிக்கலாகிறது விசாரணை. 

கடைசியில் மர்ம முடிச்சுகளை சுந்தர்.சி அவிழ்த்தாரா, தன்யா ஹோப் என்ன ஆனார் என்ற கேள்விகளுக்கு மீதிப்படம் பதில் சொல்கிறது.

இயக்குனராக சுந்தர்.சி வெற்றி பெற்ற ‘மத கஜ ராஜா’ இன்னும் ஓடிக்கொண்டிருக்க, இதில் நாயகனாகி இருக்கிறார் அவர்.

தன் வழக்கப்படியே அவர் இதிலும் சீரியஸ், ஆக்ஷன் என்று நடித்திருந்தாலும், நடிப்பைக் காட்டியும் ஆக வேண்டிய அவசியத்தை உணர்ந்து தன்யா ஹோப் கொலை செய்யப்பட்டதாக நம்பும் இடத்தில் ஒரே ஷாட்டில் அழுது அரற்றி நடித்திருக்கிறார்.

தன்யா ஹோப் அழகு பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஆனால், அவருக்கும் அவர் அழகு, இளமைக்கும் வேலை குறைவாகவே இருக்கிறது.

அவர் விட்ட குறையை ஹெபா பட்டேல் தொட்டு கதைக்கும் உதவி இருக்கிறார். சாந்தினி தமிழரசனுக்கு நேர்ந்த சோகம் பரிதாபமானது.

இவர்களுடன் இறந்த தொழிலதிபராக நடித்திருக்கும் கமல் காமராஜ், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிராமி வெங்கடாசலம், அருள் டி.சங்கர், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிக, நடிகையர்களும் திரைக்கதையை நகர்த்த துணை செய்கிறார்கள்.

வணிகத் தேவைகளைப் புரிந்து ஒளிப்பதிவாளர் மணி பெருமாளின் கேமரா சுழன்று சுழன்று காட்சிப் படுத்தி இருக்கிறது. 

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் தேவையை நிறைவு செய்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் வி.ஆர்.மணி சேயோன், நான் லீனியர் முறையில் திரைக்கதையை எழுதி இருக்கிறார். அதனால், பல கேள்விகளை அங்கங்கே வைத்து ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லி முடிக்கிறார்.

ஒரு கிரைம் த்ரில்லர் கதைக்குள் சுந்தர்.சி, தன்யா ஹோப்புடனான காதல் காட்சிகள் இனிமை சேர்க்கின்றன.

வல்லான் – கூடவே நல்லான்..!

 – வேணுஜி

.