படிக்கிற வயதில் படிக்காமல், இன்ன பிற வேலைகள் எல்லாம் செய்தால் என்ன ஆகும் என்று சொல்ல வந்திருக்கும் இன்னொரு படம். அதை ஒரு முன்னணி கமர்ஷியல் ஹீரோவுக்குரிய திரைக்கதை உத்தியான சண்டை, பாட்டு, சண்டை, பாட்டு என்று அடுக்கி ஒரு உணர்ச்சி மயமான கிளைமாக்ஸ் வைத்து முடித்திருக்கிறார் இயக்குநர் ஓ.ராஜா கஜினி.
ஆனால், இதில் நடித்திருப்பதோ புதுமுகம் ரோஷன் சுபாஷ். ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கான திரைக்கதைக்கு ஒரு புதுமுகம் தாங்கியிருப்பதே பெரிய விஷயம். அந்த வகையில் ரோஷன் ஒரு நல்வரவு..!
காதல்தான் களம். சதா ரகளை செய்துகொண்டே இருக்கும் கல்லூரி மாணவராக இருக்கும் ரோஷன் கல்லூரியில் என்ன பிரச்சினை என்றாலும் தட்டிக் கேட்பவர். அந்த காரணத்துக்காகவே அவர் மாணவர் தலைவராகவும் இருக்கிறார். அவருக்கும் இன்னொரு கல்லூரி மாணவியான ஹிரோஷினியைக் காதலிக்கிறார். அந்தக் காதல் என்ன ஆனது என்பதுதான் கிளைமாக்ஸ்.
புதுமுகம் ரோஷன் களையான முகத்துடனும், அளவான உடற்கட்டுடனும் தோற்றமளிக்கிறார். நடிப்பிலும் தவறென்று சொல்ல முடியாத அளவில் அழகாக உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகளுக்கான நடனங்களில் தேர்ச்சியுடன் தெரிகிறார். இனி நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து அனுபவம் பெற்றால் முன்னணி ஹீரோவாக வலம் வரக்கூடிய சாத்தியம் தெரிகிறது.
ஹிரோஷினி அழகு பொம்மையாக வருகிறார். அதற்கு மேல் அவரிடம் எதையும் எதிர்பார்க்க முடியவில்லை. ஆனால், கிளமாக்ஸில் ஹீரோவின் நிலை கண்டு அழுது அரற்றி நடித்து கவனம் ஈர்க்கிறார்.
இதுவரை ஹீரோயினாக நாம் பார்த்து வந்திருக்கும் (வெயில்) பிரியங்காவுக்கு இதில் சற்றே முதிர்ச்சியான கல்லூரி பேராசிரியை வேடம். வாய்ப்பு வந்தவரை ஓகே என்று அவரும் ஒத்துக்கொண்டு நடித்திருக்கிறார்.
மதுசூதனராவ், வேலராமமூர்த்தி, சுலக்ஷனா, இமான் அண்ணாச்சி என்று அறிந்த முகங்கள் அவரவர் வேலையை சரியாகப் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். புதிய முகங்களில் ஹீரோவுக்கு அடுத்து ரவிஷங்கர் கவனம் ஈர்க்கிறார். அவர் ஒரு நல்ல வில்லனாக வலம் வர வாய்ப்புண்டு.
ஹாலிக் பிரபுவின் ஒளிப்பதிவு சண்டைக்காட்சிகளில் சுழன்றடித்திருக்கிறது. எ.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.
பெண்கள் மீதே ஆசிட் அடிக்கும் கலாச்சாரத்தை மாற்றி இதில் ஆண் மீது ஆசிட் அடித்திருப்பது புதுமையா தெரியவில்லை. ஆனால், அதில் பாதிக்கப்பட்ட ஒப்பனை நன்று.
ஹீரோவை சுடும் பாவனையில் ஹீரோயின் விரல்களை சொடுக்குவதும், அதைத் தன் இதயத்தால் தாங்கும் பாவனையில் ஹீரோ இதயம் போன்று விரல்களால் காட்டுவதுமாக வளர்ந்த காதல் அதன் உண்மையான கோரத்துடன் முடிவது கனம்.
விஜய், ஜூனியர் என்டிஆர் எல்லாம் இப்படி மாணவர்களாக அறிமுகம் ஆகித்தான் புகழடைந்தார்கள் என்று கணக்குப் போட்டு ரோஷனை இப்படி இறக்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது.
அது சரிதானா என்பதைக் காலம் அவர்களுக்கு உணர்த்தும்..!