மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி. வி. தினகரன் இன்று பேசியதிலிருந்து –
ஆதாரங்கள் இல்லாமல் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர முடியாது. அமைச்சர் வேலுமணி மீதான குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அது போல முதல் அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் மீதும் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன.
இப்போது மின்துறை அமைச்சரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அவர் மின்சாரத்துறைக்கு அமைச்சராக இல்லை. மின்வெட்டுத்துறைக்கு அமைச்சராக இருக்கிறார்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு ஏற்பட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இப்போதும் தமிழகம் முழுவதும் மின்வெட்டு நடைபெற்று வருவதால் இந்த ஆட்சி முடிவின் அறிகுறியாக இந்த மின்வெட்டு இருக்கிறது.
தமிழகத்தில் எத்தனையோ சாலைகள் போக்குவரத்து நெருக்கடியில் உள்ளன. அவற்றை சரி செய்யாமல் இயற்கை வளங்களை அழித்து 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? இப்போது 8 வழி சாலை திட்டத்தை 6 வழிச்சாலையாக மாற்ற உள்ளதாக தெரிகிறது. அதுவும் கண்டிப்பாக நிறைவேறாது.
விரைவில் நடைபெற உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வேட்பாளர்களை நிறுத்தும்.எங்கள் வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அமோக வெற்றி பெறுவோம். 2 தொகுதிகளிலும் எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.
இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலம் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்..!”