1986ம் ஆண்டு வெளியான Top Gun படத்தின் சீக்குவல் 36 ஆண்டுகள் கழித்து இப்போது வெளிவந்திருப்பது ஆச்சரியமில்லை. அந்த முதல் படத்தில் நடித்த ஹீரோவான டாம் குரூஸ் 36 வருடங்கள் கழித்து இதிலும் ஹீரோவாக நடித்து இருப்பதுதான் ஆகப் பெருமையான விஷயம்.
ஹாலிவுட்டில் இன்னும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்து குறையாமல் இருக்கும் டாம் குரூஸ் இந்தப்படத்திலும் முந்தைய படத்தை போலவே அசகாய விமானியாக நடித்திருக்கிறார்.
அவரது பீட் மேவரிக் மிச்சல் என்ற பாத்திரம் அரிதானது. எந்த வரைமுறைக்குள்ளும் விதிக்குள்ளும் தன்னை அடக்கிக் கொள்ளாமல் பீறிட்டு வருகிற திறமையை கொண்ட அவரது பாத்திரம் இன்றைய ஆக்ஷன் நாயகர்களுக்கு எல்லாம் முதன்மையானது. ஆனால் ராணுவ கட்டுப்பாட்டின் படி விதிகளுக்கு உட்பட்டுதான் எந்த திறமையையும் வெளிக்காட்ட முடியும் என்பதால் இவரது திறமை ஒவ்வொரு கணத்திலும் நிராகரிக்கப்பட்டு கொண்டே வந்திருக்கிறது.
இந்த இரண்டாவது பாகத்திலும் அவர் விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டிருக்க இத்தனை வருட அனுபவத்தில் அவருக்கு உயர் பதவிகள் எதுவும் கிடைக்கப் பெறாமலேயே கடற்படையில் விமான கேப்டன் ஆகவே இருக்கிறார். இப்போதும் தன் நிலையில் இருந்து மாறாமல் நவீன ரக விமானம் ஒன்றை விதிகளுக்கு மீறிய வேகத்தில் ஓட்டி உயரதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாகிறார்.
ஆனாலும் அவர் திறமை மீது அதிக நம்பிக்கை கொண்ட ஐஸ் என்ற பாத்திரத்தில் வரும் வால் கில்மர் அவரை முக்கியமான பணிக்கு தயாராக இருக்கும் டாப் கன்னின் இளைய விமானிகள் குழுவிறகு பயிற்சி தர அனுப்புகிறார்.
எதிரி நாட்டில் நிர்மாணிக்கப்பட இருக்கும் அணு உலை ஒன்றே அழிக்க அவர்களுக்கு பயிற்சி தருகிறார் டாம் குரூஸ். அதிலும் நிச்சயிக்கப்பட்ட வேகத்துக்கு அதிகமாகவே அவர் பயிற்சி தருவது பிரச்சனையாக அதை அவர் எப்படி எதிர்கொண்டு முடிக்கிறார் என்பதே இந்த பாகத்தின் கதை.
எத்தனை வயதானாலும் ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோக்களில் நான்தான் ‘தல ‘ என்று இன்னும் ஒரு முறை இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார் டாம் குரூஸ். அறுபத்தி ஒரு வயதில் சற்றும் இளமை குன்றாமல் இத்தனை விருவிருப்பான படத்தில் எப்படி அவர் நடித்திருக்கிறார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த ஆக்ஷன் கதைக்குள் நட்பு,காதல், துரோகம், குரோதம், சென்டிமென்ட் என்று அத்தனை உணர்ச்சிகளையும் கலந்து ஒரு கமர்சியல் பேக்கேஜில் நமக்கு தந்திருக்கிறார் இயக்குனர் ஜோசப் கோசின்ஸ்கி.
டாம் குரூஸ்க்கும் அவருடைய இறந்துபோன நண்பனின் மகனான ரூஸ்டர் என்றழைக்கப்படும் லெப்டினன்ட் பிராட்லி பிராட்ஷா (மைல்ஸ் டெல்லர்) வுக்குமான விரோதம் எப்படி கடைசியில் மாறி பந்தமாக மாறுகிறது என்பது படத்தின் அற்புதமான பகுதி.
படம் முழுதும் உருமும் போர் விமானங்களின் ஓசை நம் காதுகளுக்குள்ளேயே இருக்கிறது. அதில் ஒளிப்பதிவாளரின் திறமை நம்மை வியக்க வைக்கிறது.
டாம் க்ரூஸ் உடன் படத்தில் மைல்ஸ் டெல்லர், ஜெனிபர் கோனெல்லி, ஜோன் ஹாம், க்லென் பாவெல், லீவிஸ் புல்மென், சார்லஸ் பார்னெல், பாஷீர் சலஹுதீன், மோனிகா பார்பரோ, ஜே எல்லீஸ், டானி ராமிரெஸ், க்ரெக் டார்சான் டேவிஸ், எட் ஹாரிஸ் மற்றும் வால் கில்மர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவும், இசையும் வேற லெவல். மூன்றாவது பாகம் தயாரிக்கப்பட் டாலும் அது எத்தனை ஆண்டுகள் பிடித்தாலும் அதிலும் டாம் குரூஸ் நாயகன் ஆனால் ஆச்சரியப் பட வேண்டாம்.
அவரது டிசைன் அப்படி..!
– வேணுஜி