பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று பிற்பகலில் சென்னை வந்தடைந்தார்.
ஐதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு மதியம் 2.45 மணி அளவில் வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமரை நேரில் வரவேற்றனர். மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து, ஹெலிகாப்டரில் நேப்பியர் பாலம் அருகில் உள்ள அடையாறு ஐ.என்.எஸ். வளாகத்துக்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்றார்.
அங்கு சென்னையிலிருந்து கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலினுள் சென்று பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் பார்வையிட்டனர். அப்போது மத்திய மந்திரிகள் அஷ்வினி வைஷ்ணவ், எல்.முருகன், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
பின்னர் பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர்மோடி பங்கேற்றார்.
அந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடிக்கு நன்றி. மாநில அரசுக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு தரும்போதுதான் நாடு வளர்ச்சி அடையும்.
மத்தியில் கூட்டாட்சி இருக்க வேண்டும் என்றால் மாநிலத்தில் சுயாட்சி இருக்க வேண்டும். வந்தே பாரத் ரெயிலில் பயணிகள் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். சென்னையிலிருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரெயில் சேவை தேவை.
இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமான தமிழகத்துக்கு தேவையான போதிய ரெயில்வே திட்டங்கள் வழங்கப்படவில்லை. மக்களுக்கு நெருக்கமாக மாநிலங்கள் தான் இருக்கிறது. மக்களின் தேவையை மாநில அரசுதான் நிறைவேற்ற முடியும் என தெரிவித்தார்.