கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று பெங்களூரு வந்தார்.
விமான நிலையத்தில் அவரை மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா உள்பட பலர் வரவேற்றனர்.
அங்கு நடந்த பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதில் இருந்து…
“அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன உறவு உள்ளது என பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டேன். கேள்வி கேட்டதற்காக என்னை மக்களவை எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தனர்.
பா.ஜ.க.வின் ஊழல்களைப் பற்றி நான் பாராளுமன்றத்தில் பேசும்போது மைக்கை அணைத்து விடுகின்றனர். பிரதமர் மோடி அதானிக்கு முழுமனதுடன் உதவி செய்து வருகிறார். உதவி பேராசிரியர், பொறியாளர் நியமனத்தில் பா.ஜ.க. லஞ்சம் பெற்றுள்ளது.
கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு செய்யும் அனைத்து பணிகளுக்கும் 40 சதவீத கமிஷன் வாங்கியுள்ளது. இதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். 40 சதவீத கமிஷன் பற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் இதுவரை பதில் வரவில்லை.
நாங்கள் முழு மனதுடன் கர்நாடகா மக்களுக்கு உதவி செய்வோம். மோடியால் பல ஆயிரம் கோடியை அதானிக்கு கொடுக்க முடியும்போது, எங்களாலும் மக்களுக்கு தரமுடியும்.
அதானிக்கு ஷெல் நிறுவனம் இருப்பதாக நான் பாராளுமன்றத்தில் கூறினேன். மேலும் 20,000 கோடி யாருக்கு சொந்தம் என்று கேள்வி எழுப்பினேன். வரலாற்றில் முதல்முறையாக பா.ஜ.க. அரசு பாராளுமன்ற அவையை செயல்பட விடவில்லை..!”
மேற்கண்டவாறு ராகுல் காந்தி பேசினார்.