வங்கிகளைக் கொள்ளையடிக்கும் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் வங்கிகள் பொதுமக்களை எப்படி கொள்ளை அடிக்கின்றன என்று சொல்லி இருக்கும் படம் இது. அதை அஜித் இருக்கும் தைரியத்தில் துணிவுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் எச். வினோத்.
கெட்டப் அளவில் படத்துக்குப் படம் வித்தியாசப்படுத்திக் கொண்டு நடித்து வருகிறார் அஜித். ஆரம்பத்தில் இந்தப் பட கெட்டப் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் படத்தில் பார்க்கும்போது, இது ‘வேற லெவலில்’ இருக்கிறது.
இந்தியத் திரையுலகில் முதன் முதலில் ஒரு ஹீரோ சால்ட் அன்டு பெப்பர் லுக்கில் திரையில் தோன்ற முடியும் என்று நிரூபித்தவர் அஜித். அதற்குப் பின்தான் பல ஹீரோக்களுக்கும் அந்தத் ‘துணிவு’ வந்தது.
ஆனால் அவரிடம் இப்போது பெப்பர் முழுதும் காணாமல் போய் முழுவதும் சால்ட்டாகவே மாறிப் போனாலும் ‘டார்க் டெவில்’ என்ற பாத்திரத்தில் ‘ஒயிட் டெவிலா’க வந்து ரசிக்க வைப்பது அவரது பலம்.
இடையில் சில படங்களாக ரொம்பவே சீரியஸாக நடித்துக் கொண்டிருந்தவர், இந்தப் படத்தில் செம கூலாக வந்திருக்கிறார்.
ஒரு கொள்ளைக் கும்பல் பெரிய திட்டம் போட்டு மக்கள் நெரிசல் மிகுந்த சாலையில் இருக்கும் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க முயல அந்த வங்கிக்குள் இருக்கும் அஜித், அவர்களையெல்லாம் தவிடு பொடியாக்கி மண்டியிட வைக்கிறார். உள்ளே இருந்தவர்கள் அவரை ‘ஆபத் பாந்தவனாக’ பார்க்க, அவரோ, “நானும் கொள்ளை அடிக்க வந்தவன்தான்…” என்று ‘ஆபத்து பாண்டியனா’கும் போது எதிர்பார்ப்பு பற்றிக்கொள்கிறது.
அவர்கள் தேடி வந்த ஐநூறு கோடி ரூபாய்க்கு பதில் அந்த வங்கியில் 25 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பதாக அஜித் அவிழ்த்து விடும் போது இன்னும் வேகமடைகிறது திரைக்கதை.
அவரது செயல்களைப் பார்த்து வங்கி ஊழியர் பிரேம், “மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்கிறீங்களே… உங்களுக்கு வெட்கமா இல்லையா..?” என்று கேட்க… கோபமடைவார் அஜித் என்று பார்த்தால் சின்ன புன்னகையுடன் “இல்லை..!” என்று தன் வேலையைத் தொடர்வது அழகு.
கடைசிக் காட்சியில் வங்கியின் சேர்மனையும், அவரது கூட்டாளிகளான பங்குச்சந்தை மோசடிப் பேர்வழிகளையும் உட்கார வைத்து லைவ் டெலிகாஸ்ட்டாக அவர்கள் எப்படி எல்லாம் மோசடி செய்தார்கள் என்பதை மக்களிடம் அஜித் விளக்கும் காட்சிகள் கல…கல…
பொதுமக்கள் ஒவ்வொருவருமே ஏதாவது ஒரு விஷயத்தில் வங்கிகளால் வஞ்சிக்கப்பட்டு இருப்பார்கள். அதனால் மக்களின் பணத்தை சூறையாடியவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு லத்திச்சார்ஜும் கொடுத்து உண்மைகளைக் கக்க வைக்கும் காட்சியில் தியேட்டரே கைத்தட்டுகிறது.
இவ்வளவு ரசிக்கத்தக்க விஷயங்கள் படத்தில் இருந்தும்…
பல லாஜிக் விஷயங்களை எச். வினோத் கோட்டை விட்டு இருப்பதைத்தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மக்களின் பிரச்சினைக்காக என்னதான் அஜித் வங்கிகளைத் தோலுரித்தாலும் அவரும் காசு வாங்கிக்கொண்டு எதையும் செய்யும் ஒரு ‘தாதா’தான் என்ற அளவில் அவர் இந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவது ஒட்டவே இல்லை.
இந்தப்படம் முழுவதும் வங்கிக்குள் சுடப்படும் துப்பாக்கி குண்டுகளின் எண்ணிக்கை ஒரு நாட்டின் எல்லையில் நடக்கும் போரை விட அதிகமாக இருக்கலாம்.
அதேபோல் அஜித் ஹீரோ என்பதற்காக அவர் மீது ஒரு துப்பாக்கி குண்டு கூட படவில்லை என்றாலும், அவ்வளவு சுடப்பட்டு… ராக்கெட் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் அந்த வங்கிக்குள் இருந்த பொதுமக்களில் 30, 40 பேராவது கொல்லப் பட்டிருப்பார்கள்.
வங்கி மற்றும் பங்குச்சந்தை மோசடிப் பேர்வழிகளை பொதுமக்களிடம் அடையாளம் காட்டும் அஜித், அதற்குப் பின்னால் இருந்து செயல்படும் முதலமைச்சரையோ, மத்திய அமைச்சரையோ ஒரு கேள்வி கூட கேட்காததும், அதைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதும் சறுக்கல்.
அதேபோல் வங்கியில் இருக்கும் பணம் தனக்கு வேண்டும் என்பதற்காக ஒரு மத்திய அமைச்சர் உள்ளே சிக்கிக் கொண்டிருக்கும் பொது மக்களைப் பற்றி எந்த கவலையும் படாமல் கமாண்டோக்களை அனுப்பி வங்கியை தகர்க்கச் செய்வது ஜனநாயக நாட்டில் சாத்தியமே இல்லை. அதுவும் அத்தனை ஊடகங்களும் அங்கே குவிந்திருக்கும் போது அப்படி ஒரு உத்தரவிடவே முடியாது.
அதேபோல் போலீஸ் கமிஷனராக வரும் சமுத்திரக்கனி ‘ரெம்ப’ நல்லவராக இருந்தாலும் அரசியல்வாதிகளின் சூதுவாதுகளைப் பற்றி எதுவுமே தெரியாத அப்பாவியாக இருப்பார் என்பதையும் நம்புவதற்கு இல்லை.
மத்திய தீவிரவாத தடுப்பு படை கமாண்டோக்கள் ஆர்டர் சகிதம் வங்கிக்குள் நுழைய முற்படும்போது சூப்பர் மார்க்கெட் செக்யூரிட்டி போல் அவர்கள் முன்னால் கைகளை அகல விரித்து, “என்னைத் தாண்டி யாரும் உள்ளே போக முடியாது…” என்று சமுத்திரக்கனி தடுத்துக் கொண்டிருப்பது ‘சோட்டா பீம்’ காமெடி..!
படத்தில் அஜித்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் கான்ஸ்டபிள் மகாநதி சங்கரையும், பணத்துக்காக எந்த வேலையும் செய்யக்கூடிய மீடியாக்காரர் மோகன சுந்தரத்தையும் ரசிக்க முடிகிறது.
ஹாஃப் பீட் பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த மஞ்சு வாரியரை நிஜ warrior ஆக இதில் நம்ப வைத்து இருப்பதைப் பாராட்டலாம்.
அதேநேரம் அதிரிபுதிரியாக அறிமுகமாகும் வில்லன் ‘ஜான் கோக்கனை ‘ கிளைமாக்ஸில் வைத்து ‘ஜான் கோக்கு மாக்கானா’க மாற்றிக் காமெடி பண்ண வைத்திருப்பதை ரசிக்க முடியவில்லை.
இந்த லாஜிக் ஓட்டைகளை பெருமளவு மறைத்து இசையமைப்பாளர் ஜிப்ரானும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும் பரபரப்பை ஏற்படுத்தி ஒரு ஆங்கிலப் பட மேஜிக்கை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
வங்கிகளின் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தை பரிவர்த்தனைகள் எல்லாமே மோசடிகள் என்கிற தோரணையில் மெசேஜ் சொல்லப்பட்டு இருப்பதும் நம்பும்படி இல்லை.
தமிழ் படத்துக்கு இவ்வளவு போதும் என்று நினைத்து விட்டார்கள் போலிருக்கிறது.
வங்கி மோசடிகளை அஜித் தோலுரிப்பதைப் போல் பண்டிகைப் படங்களுக்கு சிறப்புக் காட்சிகள் வைத்து 1000, 2000, 3000 என்று வசூலிக்கும் தியேட்டர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இந்த முறைகேட்டில் பங்கெடுத்த அத்தனை பேரையும் மகாநதி சங்கரை விட்டு லத்தியால் நாலு சாத்து சாத்தினால் சினிமா ரசிகர்கள் சார்பாக அதைக் கொண்டாடலாம்தான்..!
துணிவு – மெசேஜ் மங்காத்தா..!