November 21, 2024
  • November 21, 2024
Breaking News
February 5, 2019

திருமுருகன் காந்தி பாராட்டில் விஜய்சேதுபதி

By 0 882 Views
மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன்  ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையில் நடந்தது.
 
அவ்விழாவில் விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி பிரேம்குமார்  , இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணீதரன், பி எஸ் மித்ரன், லெனின் பாரதி மற்றும் சமூக போரளியும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
 
திருமுருகன் காந்தி பேசியதிலிருந்து…
 
“இந்த வெற்றிவிழாவிற்குஇயக்குநர் பிரேம்குமார் ஏன் எனக்கு அழைப்பு விடுத்தார் என்று தற்போது வரை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் நாங்கள் சனிக்கிழமை ராஜபக்சேவிற்கு கருப்புகொடி காட்ட வேண்டும். ஞாயிற்றுக் கிழமை மோடிக்கு கருப்பு கொடி காட்டவேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் சூழலில் 96 படத்தின் நூறாவது நாள் விழாவில் என்னை கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். எங்களுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. 
 
என்னுடைய தோழர்களின் வேண்டுகோளுக்கிணங்க, சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் நான் பார்த்த முதல் திரைப்படம் 96.படம் அற்புதமாக இருந்தது. ஆனால்இந்த படத்தில் இன்னும் சில விசயங்கள் சொல்லியிருக்கலாம் என்று எனக்கு தோன்றியது.
 
காதல் என்பது ஒரு அற்புதமான விசயம். இன்று நாம் பல செய்திகளை கேள்விப்படுகிறோம். பார்க்கிறோம். காதலித்த பெண்ணையே கொலை செய்து விடுகிறார்கள். ஆசிட் வீசுகிறார்கள். காதலித்த பெண்ணை எப்படி அப்படி செய்ய முடியும்.?எங்கே கோளாறு இருக்கிறது என்பதை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம். இது போன்ற தகவல்கள் ஊடகங்களில்அதிகமாக வெளியாகும் சமயத்தில், எப்படி காதலை கொண்டாடுவது, எப்படி பெண்களைக் கொண்டாடுவது, எப்படி இயற்கையை கொண்டாடுவது போன்றவற்றை பேசும் 96 படம் வெளியாகியிருக்கிறது.  
 
Vijay sethupathy, Trisha

Vijay sethupathy, Trisha

படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனத்தைப்போல் ‘காதல் என்பது காலத்துடன் பிணைத்துக் கொண்டிருக்கிறது. காதல் என்பது காலத்தின்இனிமை, காதல் என்பது நேசத்துடன் கூடிய ஒரு உணர்வு.

 
படத்தில் நிகழ்காலம் முழுவதும் இரவிலும், கடந்த காலம் முழுவதும் பகலிலும் நடைபெறும் காட்சிகளாக இடம்பெற்றிருக்கும். இதுவும்நன்றாக இருந்தது. காதல் என்பது ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ முடிவதில்லை அதையும் கடந்து அன்பு என்பது இயற்கையை நேசிக்கவேண்டும் என்பதை சொல்லியிருக்கிறார். அதை படத்தின் முதல் பாடலிலேயேதெளிவாக சொல்கிறார் இயக்குநர்.
 
காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றால்அந்த ஆண் வெறுப்புக்கு ஆளாகாமல், வன்மத்திற்கு இடம் கொடுக்காமல் இயற்கையை நேசிப்பவராக, பேரன்பு மிக்கவராக மாறுவதை அந்த முதல் பாடல் எடுத்துக்காட்டும் போது நாமும் மாறிவிடுகிறோம்.
 
அண்மைக்காலத்தில் எனக்கு பிடித்த நடிகராக விஜய்சேதுபதி இருக்கிறார்.இதைத்தான்ஒரு பேட்டியிலும் சொன்னேன். இதற்கு என்ன காரணம் என்றால் இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக அவர் இருக்கிறார். இன்றைய சம கால இளைஞர்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளையெல்லாம் சந்திக்கிறார்களோ  எதையெல்லாம் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு எதுவெல்லாம் மேனரிஸமாக இருக்கிறதோ, எதெல்லாம் கனவாக இருக்கிறதோ அதையெல்லாம் திரையில் பிரதிபலிப்பவராக விஜய்சேதுபதி இருக்கிறார்.  இப்படிபட்ட ஒரு கலைஞனாகத்தான் விஜய்சேதுபதியை இந்த தருணத்தில் நான் பார்க்கிறேன். 
 
இன்றைய சினிமாவில் வரக்கூடிய ஹீரோக்கள் எல்லாம் சூப்பர் ஹியூமனாகவேஇருக்கிறார்கள். ஆனால் விஜய் சேதுபதி நம்மைப் போன்ற சாதாரண மனிதராக திரையில் தோன்றுகிறார். அதனாலேயே அனைவராலும் நேசிக்கக்கூடிய கலைஞராக முடிகிறது. தற்போது மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இவர்களை போன்றவர்களால்தான் மக்களிடத்தில் எளிதாக சென்றடைய இயலுகிறது.
 
திரிஷாவும் அற்புதமாக நடித்திருந்தார். இயக்குநருக்கும் என்னுடைய வாழ்த்துகள்..!