October 20, 2020
  • October 20, 2020
Breaking News
March 2, 2019

திருமணம் திரைப்பட விமர்சனம்

By 0 736 Views

தமிழ் சினிமாவில் சேரன் படங்களுக்கு என்று தனியிடம் உண்டு. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் எப்படிப் பட்டதென்று வரும் காலத்துக்குச் சொல்லும் வரலாறாய் அமைவது அவரது படங்களின் தனிச்சிறப்பு.

அப்படி காலம் காலமாய் நம்மிடையே நிலவி வரும் ‘திருமணம்’ என்ற இருமனம் இணையும் சடங்குகள் சரியாகத்தான் நடைபெறுகின்றனவா என்று ஒரு உரைகல்லாக இந்தப்படத்தைத் தந்திருக்கிறார்.

இருக்கிறதோ இல்லையோ பிடிக்கிறதோ இல்லையோ ஊருக்காக உறவுக்காகவென்று மகளின் திருமணத்தை ஊரறிய நடத்தி கடைசிக்காலம் வரை கடனாளியாக தவிக்கும் எத்தனையோ பெற்றோரை நாம் அறிவோம். அப்படித் திருமணம் செய்திவைத்த ஜோடிகளாவது மகிழ்ச்சியாக வாழ்ந்தார்களா என்றால அதுவும் இல்லை. அந்த அவலம் அடுத்த தலைமுறையிலாவது மாற வேண்டுமென்று காலங்கள் கடந்தும் யாரும் ஊதாத ஒரு சங்கை ஊதி விட்டிருக்கிறார் சேரன்.

இதில் காதல் ஜோடிகளாக உமாபதி ராமையாவும், காவ்யாயும் வருகிறார்கள். இருவரும் காதலித்தாலும் குடும்பம் அனுமதித்து நடத்தப்படும் திருமணமே சரியானது என்று முடிவெடுத்து வீட்டில் சொல்ல காவ்யாவின் அண்ணன் சேரனும், உமாபதியின் அக்கா சுகன்யாவும் ஒத்துக்கொண்டு எப்படி இந்தத் திருமணத்தை நடத்தி முடிக்கிறார்கள் என்பதுதான் கதை.

ஜாதி, தகுதி, மதம், பிளாஷ்பேக் பழிவாங்கல் என்று எத்தனையோ காரணிகள் வழக்கமான திருமணத் தடைகளாக சினிமாவில் இருந்தாலும் இதில் சேரன் சொல்லியிருக்கும் பிரச்சினைகள் புதியவை – மட்டுமல்லாமல் அன்றாடம் நம் கண்முன்னே நிகழ்பவை.

ஜமீன் குடும்ப வாரிசின் திருமணம் இப்படித்தான் நடக்க வேண்டுமென்ற சுகன்யாவின் எதிர்பார்ப்பும், அள்ளிவீசி பணத்தைச் செலவழிக்காமல் அடக்கி வாசிக்க வெண்டுமென்று விரும்பும் சேரனின் எண்ணமும் ஒத்துப்போனதா என்பது சுவாரஸ்ய நகர்த்தல்களின் முடிவு.

அன்பும், கண்டிப்பும் ஒருங்கே அமையப்பெற்ற அண்ணனாக சேரன் மிகப்பொருத்தம். எங்கே என்ன உணர்வுகளைக் காட்ட வேண்டுமென்று அளவெடுத்து நடித்திருக்கிறார். வருமான வரித்துறையில் வேலை பார்க்கும் அவர் திருமணம் பேச வந்த முதல் நாளிலேயே சுகன்யா குடும்பத்தை வருமான வரி கட்டச்சொல்லி நோட்டீஸ் அனுப்பச் செய்வது அவர் வீசும் முதல் குண்டு. அப்படியே கல்யாண சாப்பாட்டுக்கு பக்கத்து ஓட்டலில் டோக்கன் வாங்கிக் கொடுக்கலாம் என்று ஆலோசனை சொல்வது வரை அவரது அதகள ஆக்‌ஷன் நீள்வது ரசிக்க வைக்கும் காட்சியமைப்பு.

அவருக்கு நேரெதிராக சிந்திக்கும் சுகன்யாயும் சரியான தேர்வு. மினுமினுப்பான தோற்றத்திலாகட்டும், மிடுக்கான தோரணையிலாகட்டும் ஜமீன் வாரிசாக துல்லியமாகப் பொருந்துகிறார் சுகன்யா. சேரனின் நடவடிக்கைகள் மீது கோபம் இருந்தாலும் காவ்யாதான் தன் தம்பிக்கான ஜோடி என்று அவர் முடிவு செய்வதும், அதுவும் முடியாமல் போன நிலையில் வேறு பெண் பார்க்க முனைவதும் தம்பி மீதான அக்கறை என்பது தெளிவு.

இரு வீட்டுப் பெரிசுகளாக சேரன் பக்கம் தம்பி ராமையாவும், சுகன்யா பக்கம் எம்.எஸ்.பாஸ்கரும் அலப்பறை செய்கிறார்கள். சிரிக்க வைக்கக் கூடிய அவர்கள் இருவரும் இதில் கொஞ்சம் சீரியஸான வேடமேற்றிருக்கிறார்கள். ஆனால், தங்கள் பிளாஷ்பேக் பரிமாறிக் கொள்ளும் காட்சியில் அவ்வளவு அழுதிருக்க வேண்டுமா தெரியவில்லை.

இளம் ஜோடிகளான உமாபதியும், காவ்யாவும் நடிகர்களாகத் தோன்றாமல் நம் வீட்டுப் பிள்ளைகள் போல் தெரிவது படத்துக்கு பலம் சேர்க்கிறது. உமாபதியின் நடனத் திறமைக்கும், காவ்யாவின் நாட்டியத் திறமைக்கும் சரியான இட ஒதுக்கீடு தந்து அவர்களின் திறமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார் சேரன்.

பணக்காரர்களின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் ஏழையின் மனசாட்சியாக வரும் சுகன்யா வீட்டு டிரைவர் பாலசரவணன் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பானவை.

அதேபோல் விரல் தாண்டிய வீக்கம் என்னவாகும் என்பதை சேரனின் மேலதிகாரியாக வரும் ஜெயப்பிரகாஷ் பாத்திரம் உணர்த்துகிறது. சத்தமில்லாமல் வந்து போயிருக்கிறார் மனோபாலா.

திருமணச் செலவுகளை திருத்தி எழுதும் இந்த முயற்சியில் அங்கங்கே இயற்கை விவசாயத்தின் அவசியம், வெளிநாட்டில் டாலரில் சம்பாதித்த இளைஞர்கள் எல்லாம் இப்போது இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்பியிருக்கும் ஆரோக்கியமான நகர்வு, வருமான வரி கட்ட வேண்டியதன் அவசியம், கந்துவட்டிக் கொடுமை என்று சமூகத்தின் இன்றைய அடையாளங்களையெல்லாம் துருத்தாமல் பொருத்தியிருக்கும் சேரனின் சமூக அக்கறையையும் கைத்தட்டிப் பாராட்ட வேண்டும்.

விரும்பிய பெண் கிடைக்கவில்லையென்றால் டாஸ்மாக்கில் சரக்கடிக்கச் சொல்லித்தரும் படங்களுக்கு மத்தியில் மன மாற்றத்துக்காக இயற்கை விவசாயம் செய்யப்போகும் ஹீரோவை அடையாளப்படுத்தியிருக்கும் சேரனை அந்தக் காரணத்துக்ககாவே ஓங்கிப் பாராட்டலாம்.

என்ன ஒன்று வழக்கமான சேரன் படங்களில் பாட்டுகள் பலகாலம் கேட்பவையாக இருக்கும். இதில் அப்படி இல்லாமல் பாடல்கள் இடையூறாக இருக்கின்றன. இசையமைப்பளர் சித்தார்த் விபின் இந்த வாய்ப்பை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

சேரனின் நாடி பிடித்து வைத்திருக்கும் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் தன் பங்களிப்பில் பளிச்சிடுகிறார். ஆனால், மூவர் வாழும் சுகன்யா வீடு ஒரு திருமண மண்டபம் போலிருப்பதையாவது அவர்கள் ஜமீன் குடும்ப வாரிசென்பதால் ஒத்துக் கொள்ளலாம். ஆனால், மாதச்சம்பளம் வாங்கும் சேரனின் வீடும் கோடீஸ்வர வீடு போலிருப்பது சினிமா பார்க்கும் மாயையை ஏற்படுத்துகிறது.

கடைசியில் தங்கை கல்யாணத்துக்கு பரிசாக முப்பத்தைந்து லட்சங்களை அள்ளிக்கொடுக்கும் சேரனுக்கு அவர் வருமானம் குறித்து அவர் துறையிலிருந்தே நோட்டீஸ் வராதாவென்று கேள்வியும் எழுகிறது.

இப்படியான சில குறைகள் இருந்தாலும் சேரன் சொல்ல வந்த கருத்துக்கு அவை எந்த ஊறும் விளைவிக்கவில்லையென்பது படைப்பாளிக்கான வெற்றி.

இளைஞர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்பதுபோன்ற மாயையை ஏற்படுத்தும் தற்கால சினிமாக்களுக்கு மத்தியில் அவர்களின் மேன்மையைப் போற்றியதற்காகவே இளைய சமுதாயம் சேரனுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். கிளைமாக்ஸில் திருமணம் குறித்து அவர் பேசும் வசனம் ஒவ்வொன்றும் தேர்ந்த அனுபவ முத்திரைகள்..!

திருமணத்தைத் திருத்தி எழுதி விட்டார் சேரன் – திருந்துவது அவரவர் பொறுப்பு..!

– வேணுஜி