பாத்திரங்களுக்கேற்ற பொருத்தமான நடிக, நடிகையர் அமைந்து விட்டாலே படம் பாதி வெற்றி அடைந்து விடும். அந்த வகையில் தாத்தா பாரதிராஜா அவரது மகன் பிரகாஷ்ராஜ், பேரன் தனுஷ் என்ற மூன்று தலைமுறை நடிகர்களைத் தேர்ந்தெடுத்ததிலேயே படத்தின் வெற்றி பாதி உறுதியாகி விட்டது.
அத்துடன் தனுஷின் தோழியாக நித்யா மேனனும், இடையில் வந்து போகும் இரண்டு கேமியோ பாத்திரங்களுக்கு ராஷி கண்ணா பிரியா பவானி சங்கர் வருவதும் படம் முழுவதும் பளிச் பளிச்சென்று நட்சத்திரங்கள் ஜொலிப்பாக ஆகி இருக்கிறது.
அதேபோல் நட்பும் காதலும் எந்தக் காலத்திலும் அழியாத சக்திகள். அப்படி தன்னுடன் சிறுவயதில் இருந்து நட்புடன் பழகி வரும் நித்யா மேனனிடம் தனுஷ் காதலைக் கண்டுபிடிக்கும் இந்த லைன் பலமுறை நாம் படங்களில் பார்த்து பழக்கப்பட்டதுதான் என்றாலும் அதை திரைமொழியாக சொல்வதில் சுவாரஸ்யப் படுத்தி இருக்கிறார் மித்ரன்.ஆர்.ஜவகர்.
அப்பாவுக்கு ஆகாத கேரக்டர் ஒன்றும் தனுசுக்கு புதிதில்லை. என்றாலும் கூட இந்தப் படத்தில் அப்பா பிரகாஷ்ராஜுடன் அவர் முரண் படுவதற்கு காரணம் வேறாக இருக்கிறது. தன் அம்மாவும், தங்கையும் இறந்து போனதற்கு அவரும் ஒரு காரணம் என்று புரிந்து கொண்டிருக்கும் தனுஷ் அவருடன் பேசாமல் இருக்கிறார்.
கல்லூரிப் படிப்பையும் பாதியில் விட்டு விட்டு உணவு சப்ளை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவருக்கு இருக்கும் இரண்டு சந்தோஷங்கள் தாத்தா பாரதிராஜாவும் தோழி நித்யா மேனனும்.
ஆனாலும் கல்லூரி தோழி ராஷி கண்ணா மீது ஒரு காதலும் கிராமத்தில் பிரியா பவானி சங்கர் மீது இன்னொரு காதலும் தனுசுக்கு வந்து போக இரண்டும் பலனளிக்காத அவர் என்ன செய்தார் என்பதுதான் இந்தப் படத்தின் மீதிக் கதை.
இதுபோன்ற கேரக்டர்கள் தனுஷை பொருத்தவரையில் சட்டையை கழற்றி மாட்டுவது போலத்தான். வெகு இலகுவாகவும் இயல்பாகவும் இந்த பாத்திரத்தை கடந்திருக்கிறார் என்றாலும் நித்யா மேனனிடம் காதலை கண்டுபிடிக்கும் அவருடைய நடிப்பில் தேசிய விருதுத் தரம். ஒரு சர்வதேச ஹீரோவாக வளர்ந்து கொண்டு இருந்தாலும் ‘பழம் ‘ என்ற இந்த கேரக்டரில் நடித்திருப்பது அவரது நடிப்புக்கான ‘ பலம்..!’
இப்படி ஒரு நடிகருடன் ஈடு கொடுத்து நடிப்பதே பெரிய வேலை என்று இருக்க தனுஷை விட ஒரு படி மேலே போய் நடித்திருப்பதுதான் நித்யா மேனனை இந்த பாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு மிஸ்.மேனன் தந்திருக்கும் பரிசு. தோழனின் ஆசைப்படியே அவன் காதலிக்கும் பெண்களுக்கெல்லாம் தூது போய்விட்டு எதுவும் பலிக்காத நிலையில் தன் காதலையும் சொல்ல முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பும், கடைசிக் குமுறலும் அற்புதம்.
தன் காதல் அனுபவங்களை பாரதிராஜா தனுஷிடம் சொல்லும் தருணங்களில் தியேட்டர் தீப்பற்றிக் கொள்கிறது.
எந்தப் பாத்திரத்திலும் அதன் வடிவத்துக்கு மாறிவிடும் தண்ணீர் போல எப்படிப்பட்ட பாத்திரம் கிடைத்தாலும் அந்தப் பாத்திரமாகவே மாறிப் போகும் பிரகாஷ்ராஜ் அப்படி ஒரு தந்தையாக வந்து இந்த படத்தில் நடிப்பில் பரவசப்படுத்தி இருக்கிறார். பக்கவாதம் வந்த நிலையில் தன் சூழலை தனுஷிடம் அவர் விளக்கும் காட்சி அதில் ஹைலைட்.
ஓங்குதாங்கான ராஷி கண்ணாவும் பிரியா பவானி சங்கரும் காதலை மறுதலிப்பதில் தன் ஹீரோயிசம் ஒன்றும் குறைந்து விடாது என்று அதற்கு ஒத்துக் கொண்டிருக்கும் தனுஷைப் பாராட்டலாம்.
தன் இறுக்கமான பொழுதுகளில் எல்லாம் அவர் இளையராஜாவின் படம் முன்னால் உட்கார்ந்து ஞானியின் பாடல்களை மனதுக்குள் கேட்பது நமக்கு கிடைத்த வரம். இருந்தாலும் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத்தான் என்பது காலத்தின் கட்டாயம்.
அந்த தாய்க்கிழவி பாடலும் அதற்கு தனுஷ் போட்ட குத்தும் அபாரம். ஆனால் ஒரு மாஸ் ஹீரோ நடிக்கும் படத்தில் ஒப்புக்காவது ஒன்று இரண்டு சண்டைக் காட்சிகள் வைத்திருக்க வேண்டாமா இயக்குனர்..?
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு வாழ்வின் நிகழ்வுகளை திருவிழா தருணங்களாக்கியிருக்கிறது.
எல்லா வருடங்களிலும் அதே 365 நாள்தான், அதே கிழமைகள்தான், அதே மாதங்கள்தான் என்றாலும் புது கேலண்டர் கையில் கிடைக்கும் போது ஒரு பரவசம் தோன்றும் இல்லையா அப்படித்தான் இந்த படமும் தெரிந்த களம் என்றாலும் திறமையான திரைகதையால் சுவாரஸ்யப் படுத்தியிருக்கிறது.
திருச்சிற்றம்பலம் – காதல் பாலில் விழுந்த ஞானப் ‘பழம்..!’