August 26, 2019
  • August 26, 2019
Breaking News
November 17, 2018

திமிரு புடிச்சவன் விமர்சனம்

By 0 388 Views

ஒரு நடிகனின் பரிணாமத்தில் காக்கிச் சட்டை போட்டால்தான் அவர் முழுமையான நடிகனாகிறார் என்பது சினிமா சித்தாந்தம். அந்த வகையில் நடிகராகிவிட்ட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் இந்தப் படத்தில் காக்கிச்சட்டை போட்டுக்கொண்டு ‘தி கம்ப்ளீட் ஆக்டர்’ ஆகி விட்டார்.

ஆனால், வழக்கமான போலீஸ் கதைகள் தவிர்த்து இதில் ஒரு முக்கியமான சமூகப்பிரச்சினையை அவர் கையில் கொடுத்து “அட…” போட வைக்கிறார் இயக்குநர் கணேஷா.

சமீப காலங்களில் நடந்த வன்கொடுமைக் குற்றங்களில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் இளம் வயது குற்றவாளிகள்தான். இது ஏதோ இயல்பாக நடந்துவிட்ட செயல் என்று யாரும் நினைத்து விட வேண்டியதில்லை. எப்படி பிச்சையெடுக்கும் தொழிலுக்காக குழந்தைகள் கடத்தப்படுகின்றனரோ அப்படியே வாழ்க்கையில் தவறிய இப்படியான இளம் வயது சிறுவர்களை சில சமூக விரோதிகள் குற்றவாளிகள் ஆக்குகின்றனர்.

அதில் அவர்களுக்கு என்ன பலன் என்றால் கொலை, பாலியல் வன்கொடுமை இப்படி எந்தக் கொடிய குற்றங்களில் ஈடுபட்டாலும் சிறுவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவதில்லை. மாறாக சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டு எளிதாக அவர்கள் வெளியே வந்துவிடும் அளவில் சட்டம் இருக்கிறது. இதைப் பயன்படுத்திதான் நாடெங்கும் இப்படி சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்த கிரைம் கதைக்குள் விஜய் ஆண்டனியின் பிராண்ட் ஆன ஃபேமிலி சென்டிமென்ட்டையும் கலந்து ஒரு பொறுப்பான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

விருதுநகரில் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் பெற்றோரில்லாத விஜய் ஆண்டனி அவர்கள் இல்லாத குறை தெரியாமல் தன் தம்பியை வளர்த்து வருகிறார். ஆனால், அவன் பொறுப்பற்றவனாகவே வளர்கிறான். தன் தம்பிக்காகவே கல்லூரிப்படிப்பையும் அவனிடம் சவால்விட்டு முடிக்கிறார். ஆனால், என்ன செய்தும் அவன் திருந்தாமல் சென்னை சென்று ரவுடியாகிறான்.

அவனைத்தேடி சென்னை வரும் விஜய் ஆண்டனி தம்பியைச் சந்தித்தாரா, திருத்தினாரா என்பதெல்லாம் படத்தில் பார்த்து உணர்ந்தால் நலம்.

என்ன வேடம் என்றாலும் தனக்கென இருக்கும் அமைதியான நடிப்பிலேயே திருப்திப்படும் விஜய் ஆண்டனி இந்தப் படத்திலும் அப்படியே. என்றாலும் காக்கிச்சட்டை மாட்டிக்கொண்டதால் அங்கங்கே சிங்கமாக கர்ஜிப்பது அவரிடமிருந்து வந்திருக்கும் புது ஐட்டம். கூடவே ஆக்‌ஷனிலும் ஜமாய்த்திருக்கிறார்.

ஆனாலும் இயக்குநர் எதிர்பார்த்தது அவரிடம் கிடைக்கவில்லயோ என்னவோ, “என்ன சார்… எல்லாத்துக்கும் ஒரே ரியாக்‌ஷன் கொடுக்கிறீங்க..?” என்று அவருக்கு எதிரான வசனம் கொடுத்துக் கலாய்த்திருக்கிறார்.

அமைதியாக, அழகாக இதுவரை நாம் பார்த்த நிவேதா பெத்துராஜுக்கு இதில் கலந்து கட்டி… வசனத்தில் பொளந்து கட்டி கலாய்க்கிற வேடம். ரொமான்ஸ் விஷயத்தில் கற்பாறையாக இருக்கும் விஜய் ஆண்டனியைக் கரைத்துக் காதலை வர வைப்பதற்குள் அவர் படும்பாடு… உஸ்ஸ்ஸ்…!

‘நான் கடவுள்’ படத்தில் பெயர் தெரியாமலிருந்த மொட்ட ராஜேந்திரனுக்கு பாலா கொடுத்த விலாசம் போல சிறுவர்களைத் தவறான பாதைக்குள் இழுத்துச் செல்லும் வில்லனாக பல படங்களில் அடியாள் கேரக்டர்களில் வந்த ‘தீனா’ இதில் அடையாளப் பட்டிருக்கிறார். விஜய் ஆண்டனியுடன் போட்ட சவாலுக்காக மீசையை எடுக்க நேர, அதற்கும் ஒரு சமூக லாஜிக் வேண்டி பெற்ற அப்பனையே போட்டுத்தள்ளி அவர் மீசையை எடுப்பது ‘டெரர்’. ஆனால், அந்த வீரியத்துக்குத் தோதாக இல்லாமல் அவரது ஒட்டுமீசை உறுத்துகிறது.

அதேபோல் சிறிய கேரக்டர்களில் வந்த சம்பத்ராமுக்கும் அடையாளம் சொல்கிற அளவில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் வேடம் தரப்பட்டிருக்கிறது. வன்முறைப் பாதைக்குப் போன இளைஞர்களின் பெற்றோரில் சு.செந்தில்குமரன் கவனிக்க வைக்கிறார். விஜய் ஆண்டனி கொடுத்த தைரியத்தில் கோயில் குருக்களாக இருக்கும் அவர் குத்துவாளைத் தூக்கும் அளவுக்கு ரௌத்திரம் பழகுவது ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவும், இசையும் ஒன்றொடொன்று கலந்து நின்றிருக்கின்றன. ‘நக… நக… நக…’ காதுகளுக்குள் குடியேறி விட்டது..!

ஆனால், டைட்டில் சொல்வதுபோல் படத்தில் எங்கேயும் விஜய் ஆண்டனி திமிருடன் நடந்து கொள்ளவேயில்லையே..? நியாயமாகவும், பாசமாகவும்தானே நடக்கிறார்..? அவர் படமென்றால் நெகடிவ் சென்டிமென்ட் டைட்டில் வேண்டுமென்பதற்காக வைத்தார்களா..?

திமிரு புடிச்சவன் – ‘தில்’லான காவல்காரன்..!