நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் நடப்பது இயல்பு. ஆனால் அதுவே திட்டமிட்டு நடந்தால்..? கேட்கவே கொடூரமாக இருக்கிறது இல்லையா..? அப்படி ஜோடிக்கப்பட்ட ஒரு விபத்தின் மூலம் நம்மை பதைபதைப்புக்கு உள்ளாக்கி படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குனர் அருண் வசீகரன்.
அடுத்த காட்சியில் பத்திரிகையாளராக வரும் நாயகி த்ரிஷா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கன்னியாகுமரி நோக்கிச் செல்ல முடிவெடுக்க, நமது பதற்றம் இன்னும் அதிகரிக்கிறது.
எதிர்பார்த்தது போலவே திரிஷா செல்லும் காரும் விபத்துக்குள்ளாகி கணவரும், குழந்தையும் கொல்லப்படுகிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாத பரிதவிப்பில் இருக்கும் திரிஷா, அந்தக் குறிப்பிட்ட இடத்தில் பல விபத்துகள் நடப்பதை அறிகிறார்.
எனவே அவரது பத்திரிகையாளர் மூளை சுறுசுறுப்படைந்து அதைப்பற்றி ஆராய ஆரம்பிக்க, அடுத்தடுத்து என்ன ஆனது என்பது மீதிக் கதை.
நாயகர்களுக்கு எத்தனை வயதானாலும் அவர்களைக் கொண்டாடுகிறோம், அந்த வகையில் அப்படி ஒரு நாயகியைக் கொண்டாட வேண்டும் என்றால் அது த்ரிஷாதான். பல வருடங்களாக அவரை நாம் பார்த்து வந்தாலும் ஒரு புதுமுக நாயகி போலவே இளமை மற்றும் வசீகரத்துடன் பிரெஷ் ஆகத் தெரிகிறார் த்ரிஷ்.
அவர் இதன் பின்னணியை ஆராய்ந்து கண்டுபிடிப்பதற்குள் நமக்கு யார் இதையெல்லாம் செய்கிறார்கள் என்ற உண்மையைப் போட்டு உடைத்து விடுகிறார் இயக்குனர்.
இந்த இரண்டு விஷயங்களுக்கும் சம்பந்தமில்லாமல் நடிகர் ஷபீரின் ஒரு பரிதாபமான வாழ்க்கை காட்டப்படுகிறது. நன்றாக படித்து ஆசிரியராக இருந்தும் அப்பா வேலராமமூர்த்தியின் இரண்டாவது தாரத்துக்கு பிறந்தவர் என்பதால் சமூகத்தில் இழித்துரைக்கப்படுகிறார் ஷபீர்.
அவர் படிப்புக்காக வாங்கிய கடன்களைக் கட்ட முடியாத நிலையில் மேல ராமமூர்த்தி இறந்து போக, எவ்வளவு அவமானப்பட முடியுமோ அத்தனை அவமானங்களையும் தாங்கி சமூகத்தின் கண்களில் இருந்து மறைந்து வாழ்கிறார் அவர்.
இந்த மூன்று இழைகளின் சங்கமம்தான் இந்தப் படத்தின் முழு கதை.
சார்பட்டா பரம்பரை படத்திலேயே ஷபீரின் அற்புத ஆற்றலைப் பார்த்து வியந்து இருக்கிறோம். இந்தப் படத்திலும் அவரது நடிப்புக்குத் தீனி போடும் விதத்தில் கூனிக்குறுகி நடிக்கும் போதும் சரி, விரைத்து வீரிட்டுக் கிளம்பும்போதும் சரி அவர் பாணி தனியாகவும் இயல்பாகவும் இருக்கிறது.
திரிஷாவின் புலனாய்வுக்கு உடன் வரும் தோழியாக மியா ஜார்ஜ் நடித்திருக்கிறார் அவரது நடிப்பும், அழகும் கூட மங்காமல் ஒளிர்வது ஆச்சரியப்படுத்துகிறது.
என்னதான் இது ‘ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்ட்’ என்றாலும் வில்லன் கூட்டத்தை சந்திக்கப் போகும் அத்துவான காட்டுக்கு கூட த்ரிஷாவும், வயசாளி போலீஸ்காரர் எம்.எஸ்.பாஸ்கரும் தனியாக சென்று கொண்டிருப்பதைக் கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை.
அதிலும் வில்லன் கோஷ்டி கொடூரமான கொலைகாரர்களாக இருக்க அவர்களின் தலைவி ஆண்களையே அடித்துக் கொல்லும் அராஜகப் பேர்வழியாக இருக்கிறார்.
நெடுஞ்சாலை போலவே மிக நீண்ட கதையாகச் செல்லும் இந்த ரோட், அங்கங்கே திருப்பங்களைக் கொண்டிருப்பதோடு லாஜிக் மீறல் என்ற ஸ்பீட் பிரேக்கர்களையும் கொண்டிருக்கிறது.
ஒரு நல்ல ஆனால், சின்ன கேரக்டர் என்றால் சந்தோஷ பிரதாப்பைக் கூப்பிடுவது வாடிக்கையாகி விட்டது. அதேபோல் தான் விவேக் பிரசன்னாவும்.
ஒளிப்பதிவும், இசையும் படத்தின் தரத்தை தூக்கிப் பிடித்திருக்கின்றன.
தி ரோட் – மரண பய(ண)ம்..!