உண்மைக் கதைகள் படமாக்கப்படும்போது அதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் ஆந்திராவில் 2018 இல் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை இது.
ஆந்திராவைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேர் குஜராத் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சற்று வழி மாறி பாகிஸ்தான் கடல் பரப்புக்குள் சென்றதால் அங்கே சிறை பிடிக்கப்பட்டு 13 மாதங்கள் பாகிஸ்தான் சிறையில் கழித்தனர் அந்த சம்பவத்தைதான் இதில் ஒரு காதல் கதை கலந்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சந்து மொண்டேட்டி.
படத்தில் இந்தக் கதை இரண்டாம் பாதியில் தான் வருகிறது முதல் பாதியில் முழுக்க முழுக்க இதயத்தை வருடும் ஒரு காதல் கதையைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
நீரில் ஒன்பது மாதங்கள், நிலத்தில் மீதி 3 மாதங்கள் என்று வாழ்ந்து வரும் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் நாயகன் நாக சைதன்யா. அவரது காலம் சென்ற அப்பாவைப் போலவே இவரும் ஆற்றல் மிக்கவராகவும் மீனவர் நலனில் அக்கறை காட்டுபவராகவும் இருப்பதால் அப்பா வகித்து வந்த தண்டேல் என்ற பொறுப்பு இவருக்கும் கிடைக்கிறது.
தண்டேல் என்றால் தலைவன் என்பதுதான் பொருள்.
நாக சைதன்யாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சாய் பல்லவிக்குமான காதல் ஊரறிந்தது. ஒன்பது மாதங்கள் சாய் பல்லவியைப் பிரிந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற தவிப்பு நீங்க, மீதி மூன்று மாதங்களை அவருடனே கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நாக சைதன்யா.
9 மாதங்கள் துணையைப் பிரிந்து இருப்பது என்பது எத்தனை பெரிய துன்பம் என்பதை பிற பாத்திரங்கள் வாயிலாகவும் அப்படி செல்லும்போது ஏற்படும் விபத்துகளில் சிலர் இறப்பதையும் கண்ணுறும் சாய் பல்லவி, இனி நாக சைதன்யாவைக் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார்.
ஆனால் அவர் வார்த்தையை மீறி கடலுக்குள் செல்கிறார் நாக சைதன்யா. அதனால் அவருடன் இனி பேசுவதில்லை என்று முடிவு எடுக்கும் சாய் பல்லவியின் போக்கு கடலுக்குள் இருக்கும் நாக சைதன்யாவை ரொம்பவே பாதிக்கிறது. அத்துடன் சாய் பல்லவிக்கு கருணாகரனுடன் திருமணமும் நிச்சயிக்கப்படுகிறது.
இந்நிலையில் புயலில் சிக்கி வழி மாறிப்போய் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கராச்சி சிறையில் அடைக்கப்படுகிறார் நாக சைதன்யா. அவர் எப்படி மீண்டு வந்தார்… அதில் சாய் பல்லவியின் பங்கு என்ன, கருணாகரனுடன் சாய்பல்லவிக்கு திருமணம் நடந்ததா என்பதெல்லாம் விறுவிறுப்பான பின் பாதி.
பாத்திரம் அறிந்து சரியான அளவு கோலில் நடித்திருக்கிறார் நாக சைதன்யா. அவரது இளமையும் வேகமும் இந்தப் பாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறது. சாய் பல்லவியின் சொல்லை மீறி போக முடியாமலும் அதே நேரத்தில் தன் தலைமையில் மீன் வேட்டைக்கு புறப்படும் குழுவினருடன் செல்ல முடியாமலும் ரயில்வே ஸ்டேஷனில் அவர் தவிக்கும் நடிப்பு அற்புதம்.
சாய் பல்லவியின் நடிப்பு பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவரைப் பெண்களுக்கான தண்டேல் என்றால் மிகப் பொருத்தமாக இருக்கும். ஆனால் தோற்றத்தில் அந்த மீனவக் குப்பத்துக்கும் அவருக்கும், அவர் தந்தையான பிரித்விராஜுக்கும் சம்பந்தம் இல்லாதது போலவே தோன்றுகிறது.
இவர்களுடன் கருணாகரன், பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி உள்ளிட்டவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஷியாம் தத்தின் ஒளிப்பதிவு அசத்தல். கதை நடக்கும் ஸ்ரீ காக்குளம் கிராமத்தையும், குஜராத்தின் மீன்பிடி துறையையும் அற்புதமாக திரைக்குள் கொண்டு வந்திருக்கிறார். அத்துடன் புயலில் படகுகள் சிக்கும் காட்சிகளும் அபாரம்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் அமைந்த பாடல்களில் இன்னும் துள்ளல் எதிர்பார்க்கிறோம். பின்னணி இசையில் அவர் மீட்டும் வயலின் சத்தம் நம் காதுகளுக்குள் அப்படியே நிற்கிறது.
நவீன் நூலியின் எடிட்டிங்கும் படத்தின் வேகத்துக்கு உறுதுணை புரிகிறது.
காதலனைப் பிரிந்த காதலி படும் பாட்டை இதைவிட பல மடங்கு சில படங்களில் பார்த்திருந்தாலும் உண்மைக் கதை என்கிற அளவில் இது நம் உணர்வுகளுடன் கலந்து விடுகிறது.
மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கு எந்த அவசியமும் இல்லாவிட்டாலும் ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.
தண்டேல் – காதலி சொல்லைத் தட்டாதே..!
– வேணுஜி