கிராமத்துக் கதை என்று நாம் அறிந்து வைத்திருக்கும் கதைகள் ஒரு ரகம். இதில் இன்னொரு பரிணாமத்தில் கதை சொல்லி இருக்கிறார்கள்.
அதுவே இந்த படத்தைப் பிற படங்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டி இருக்கிறது.
அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் இளவரசவும், தம்பி ராமையாவும் ஏகத்துக்கு பகையாளிகளாக இருக்கிறார்கள். தம்பி ராமையாவின் மகள் யாரோ ஒருவனைக் காதலிப்பதாக இளவரசு தவறாக புரிந்து கொண்டு ஊருக்கு சொன்னதில் அந்தப்பெண் பஞ்சாயத்து போர்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
இதனால் களை இழந்து போகும் தம்பி ராமையாவின் குடும்பத்தில் அவரது தந்தை மரணப்படுக்கையில் கிடக்கிறார்.
இந்நிலையில் இளவரசுவன் மகள் பிரார்த்தனா நாதனுக்கு மறுநாள் காலையில் திருமணம் என்கிற நிலையில் உறவினர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இதைப் பார்த்து வயிறு எரியும் தம்பி ராமையா வின் தந்தை துரதிஷ்டவசமாக அன்று இரவே இறந்து போக, அதை தன் அதிர்ஷ்டமாக நினைத்து இளவரசுவை பழிவாங்க நினைக்கிறார். மறுநாள் காலையில் இளவரசுவின் மகள் திருமணம் நடைபெறும் அதே நேரத்தில் தன் தந்தையின் சவத்தை எடுப்பதாக உறுதி கொள்கிறார்.
பக்கத்துப் பக்கத்து வீடுகளில் ஒரு வீட்டில் கல்யாணமும் இன்னொரு வீட்டில் இறுதிச் சடங்கும் எப்படி நடைபெற முடியும் என்கிற சிக்கலில் மாட்டிக் கொள்வது, அந்த கிராமத்தின் இளம் பஞ்சாயத்து தலைவரான தம்பி ஜீவா.
இதுதான் இந்தப் படத்தின் அடிநாதம். ஆனால் நாயகன் ஜீவா என்று இருக்க இந்த இரண்டு குடும்பங்களின் பிரச்சினையையும் எப்படி தனி ஒருவனாக சமாளிக்கிறார் என்பதுதான் முழுப் படமும்.
உண்மையிலேயே இப்படி பஞ்சாயத்து தலைவர்கள் நடந்து கொள்கிறார்களா என்று நமக்கு தெரியாது. ஆனால் ஜீவா அதற்கு ஒரு நல்ல உதாரண புருஷனாகத் தெரிகிறார்.
அந்த ஊர் மக்கள் ஒரு வகையான கோக்கு மாக்கானவர்கள் என்பதை புரிந்து வைத்திருக்கும் அவர் இந்த இரண்டு பிரச்சனைகளையும் ஒருசேர சமாளித்து அந்த இரவுக்குள் தீர்வு காண நினைப்பது சரியான சவால்.
குற்றமற்ற ஜீவாவின் முகம் இந்த பாத்திரத்திற்கு மிகவும் துணை புரிகிறது. மணப்பெண் பிரார்த்தனாவுக்கு உடன்பிறவா அண்ணனாக பரிசு எல்லாம் கொடுத்து அந்த திருமணத்தை சிறப்புற நடத்த அவர் முடிவு எடுப்பதும் அதே வேளையில் தம்பி ராமையா வீட்டில் பிணம் விழுவதும்… இது போதாது என்று இந்த பிரச்சனைகளை வைத்து வரப்போகும் தேர்தலில் கொஞ்சம் ஓட்டுகளை அள்ள நினைக்கும் எதிர்பார்ட்டி ஜென்சன் திவாகரின் சிண்டு முடிக்கும் வேலைகளையும் அட்டகாசமாக சமாளிக்கும் ஜீவாவுக்கு அவரது கேரியரில் இது ஒரு புது ஐட்டம்.
வாய் சண்டை கைச்சண்டை ஆகி, கைச்சண்டை ஆயுதச் சண்டையாக மாறி ஒட்டுமொத்த கிராமத்தின் தேவைக்கும் ஒரு ஆப்பு வைக்கும் இடத்தில் சிரிக்கிறாரே ஒரு சிரிப்பு அதற்கு ஆயிரம் அர்த்தங்கள்.
மணப்பெண்ணாக வரும் பிரார்த்தனா நாதன், இயல்பான கிராமத்து அழகு எதார்த்தமான நடிப்பு என்று கவனத்தை கவருகிறார்.
பகையாளிகள் இளவரசு மற்றும் தம்பி ராமையா அடிக்கும் லூட்டிகள்தான் படம் நெடுக. அவர்கள் சீரியஸாக செய்யும் அத்தனை விஷயங்களும் நமக்கு சிரிப்பை வரவழைப்பது திரைக்கதையின் வெற்றி.
சின்ன கேப் கிடைத்தாலும் அதில் ஜீவாவுக்கு ஒரு ஆப்பை செருகிவிட வேண்டும் என்று திரியும் ஜென்சன் திவாகர் கதாநாயக ஆசையும் கால்ஷீட் சம்பளமும் கொள்ளாமல் இருந்தால் யோகி பாபு விட்ட இடத்தை நிரப்ப முடியும்.
இவர்களுடன் சர்ஜின் குமார், ஜெய்வந்த், ராஜேஷ் பாண்டியன், அமித் மோகன், சுபாஷ் கண்ணன், சரத், சாவித்ரி ஆகியோர் அந்தந்த பாத்திரங்களாக மாறி ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
இயல்பான கதை ஓட்டத்துக்கு உதவியிருக்கும் ஒளிப்பதிவாளர் பப்ளு அஜுவின் பணி பாராட்டுக்குரியது.
இது மாதிரியும் இல்லாமல் படத்துக்கு தேவையான இசையை தந்திருக்கிறார் விஷ்ணு விஜய்.
இதையெல்லாம் கூட கதையாக்க முடியுமா என்கிற விதத்தில் சுவாரசியமாக திரை கதையை எழுதி இருக்கிறார்கள் சஞ்சோ ஜோசப், நிதிஷ் சகாதேவ் மற்றும் அனுராஜ்.ஓ.பி.
ஆனால் படத்தின் மையப்புள்ளியில் நடக்கும் தவறு இளவரசு செய்ததாக இருக்க படம் முழுவதும் தம்பி ராமையாவையே குற்றவாளி போல சித்தரித்துக் கொண்டு செல்வதும், அநியாயமாக மகளை இழந்தவர் கடைசியில் தந்தை சிதைக்கு தீ மூட்டவும் முடியாமல் போலீஸ் கஸ்டடியில் செல்வதும் நியாயமாகத் தெரியவில்லை.
இயல்பான இயக்கத்தில் மனம் கவர்ந்திருக்கிறார் இயக்குநர் நித்திஷ் சகாதேவ்.
வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் ஹீரோக்கள் எல்லாம் இவரைப் போன்ற இயக்குனர்களை பிடித்து தங்களுக்கு ஒரு ரீ என்ட்ரி கிடைக்க வழி தேடலாம்.
இந்த பொங்கலுக்கு கொண்டாட இந்த படத்தை விட்டால் வேறு வழி இல்லை..!
தலைவர் தம்பி தலைமையில் – சிரித்து ரசித்து விட்டு வரலாம்..!
– வேணுஜி
ரேட்டிங் 3.5/5