ஆற்றில் இறங்கி அத்தனைத் துணிகளையும் அடித்துத் துவைப்பது போல, ஒரே படத்துக்குள் எல்லா சமூக அவலங்களையும் போட்டுத் துவைத்து விட வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார் இயக்குனர் அறிவழகன் முருகேசன்.
அதற்குத் தோதாக கதை நாயகன் குணா பாபு சினிமா இயக்குனராகும் ஆசை உள்ள குறும்பட இயக்குனர் என்கிற லைனை எடுத்துக்கொண்டு அவர் தயாரிப்பாளரிடம் கதை சொல்லப் போவது போல் கதையை அமைத்திருக்கிறார்.
அவர் எடுக்கும் குறும்படங்களில் நடிப்பதற்கு நடிகர்கள் வேறு யாருமில்லை – அவரைச் சுற்றி இருக்கும் உறவுகளும், நண்பர்களும்தான்.
அப்படி அவர் கதை சொல்லச் சொல்ல அந்தக் கதை படமாகவே விரிகிறது. முதல் கதை நன்றாக இல்லை என்று புரொடியூசர் சொல்ல உடனே அடுத்த கதைக்குத் தாவுகிறார்.
இதனால் பல சமூக அவலங்களையும் அவரால் தொட்டுச் செல்ல முடிகிறது.
அப்படி குணா பாபு சொல்லும் ஒரு கதையில்தான் ‘அங்காடித்தெரு’ மகேஷ் ஒரு பாத்திரத்தில் வருகிறார். கல்வியின் பெருமையை உயர்த்த உதவுகிறது அவரது பாத்திரம். அதேபோல் சமூக வலைதளங்களில் இளைஞர்கள் நேரத்தை செலவிட்டு வாழ்க்கையை எடுத்துக் கொள்ளக்கடாது என்கிற அறிவுரையும் அவரால் சொல்லப்படுகிறது.
குணா பாபு, கே.எம்.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதா பாத்திரங்களுக்கு தங்களால் முடிந்தவரை நியாயம் செய்திருக்கிறார்கள்.
தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் ஒளிப்பதிவில் காட்சிகள் இயல்பாய் நகர்கின்றன.
சாய் சுந்தர் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பட்ஜெட்டுக்குத் தக்கவாறு ஒலிக்கிறது.
சமூகப் பிரச்சினைகளை படம் அலசினாலும் பட்ஜெட் காரணமாக காட்சிகள் நாடகத்தனமாய் நகர்கின்றன.
அத்துடன் எல்லா பிரச்சனைகளையும் இந்தப் படத்திலேயே சொல்லி விட வேண்டும் என்று எல்லாவற்றையும் சொல்லி இருப்பதால் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கிறது.
படத்தில் முதல் பாதி தரும் திருப்தியை இரண்டாவது பாதி தர தவறுகிறது. அதில் கவனம் செலுத்தி இருந்தால் எடுத்துக் கொண்ட முயற்சி நிறைவு பெற்றிருக்கும்.
இருந்தாலும் கல்வியின் பெருமை, இளைஞர்களின் எதிர்காலம் குறித்த கவலை என்கிற விஷயங்களை தொட்டுச் சென்று இருக்கும் இந்த படம் பெரிய படங்கள் செய்ய முயற்சிக்காததை செய்து அதிகம் பாராட்ட வைக்கிறது.
‘ தடை அதை உடை ‘ – பயிற்சி தேவைப்படும் முயற்சி..!
– வேணுஜி
.