சென்னை-மதுரை இடையே ரெயில்களில் கடும் இட நெரிசல் நிலவுகிறது. பகலில் குருவாயூர், வைகை ஆகிய 2 ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்நிலையில் ஐ.சி.எப்பில் தயராஜ ‘தேஜஸ்’ ரயில் பெட்டிகளைக் கொண்ட அதிநவீன ரயில் சென்னை – மதுரை இடையே பயணிகவிருப்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.
முதலாவது தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு மும்பையை தலையிடமாகக் கொண்டு செயல்படும் மேற்கு ரெயில்வேக்கு வழங்கப்பட்டது. இந்த தேஜஸ் ரெயில் மும்பை-கோவா இடையே கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து 2-வது தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட ஐ.சி.எப், இந்தப் பணி முடிந்ததைத் தொடர்ந்து நேற்று நாட்டுக்கு அவற்றை அர்ப்பணித்தது. ஐ.சி.எப். பொது மேலாளர் சுதான்சி கொடியசைத்து அந்த ரயிலைத் தொடங்கி வைத்தார்.
இதில் சுவையான தகவல் என்னவென்றால் நேற்று நாட்டுக்கு அர்ப்பணிகப்பட்ட 2-வது ‘தேஜஸ்’ ரெயில் பெட்டிகளை வடக்கு ரெயில்வேக்கு கொடுக்க ஆலோசிக்கப்பட்டு வந்தது. ஆனால் தெற்கு ரெயில்வேயில் சென்னை-மதுரை இடையே கூடுதல் ரெயில்கள் தேவைப்படுவதாலும், இந்த வழித்தடம் இரட்டை ரெயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளதாலும் தேவையை கருத்தில் கொண்டு தற்போது தெற்கு ரெயில்வேக்கு ‘தேஜஸ்’ ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த தேஜஸ் ரெயில் சென்னை-மதுரை இடையே பகல் நேர ரெயிலாக இயக்கப்படும். இன்னும் ஒரு வாரத்தில் ரெயில் ஓடத் தொடங்கும். முதலில் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயக்கப்படும், விரைவில் இயக்கப்படும் தேதி அறிவிக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
முழுவதும் ஏ.சி. வசதி கொண்ட இந்த ரயிலில் 23 சேர் கார்களுடன் உயர் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு உள்ளன. கண்களுக்குக் குளிர்ச்சியூட் டும் எல்.இ.டி. விளக்குகளுடன் ஜி.பி.எஸ். கருவி, வை-பை வசதி, சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா, தானியங்கி கதவுகள், கம்ப்யூட்டர்களுக்கு தேவையான சார்ஜிங் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த தேஜஸ் ரெயில் சென்னை-மதுரை இடையான 497 கி.மீ. பயண தூரத்தை 7 மணி நேரத்தில் சென்றடையும். இப்போது வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை செல்ல 8 மணி நேரமும், பாண்டியன் எக்ஸ்பிரஸ் 9 மணி நேரமும் எடுத்துக் கொள்கிறது.
தேஜஸ் ரெயில் காலை 6 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதியம் 1 மணிக்கு மதுரை போய்ச்சேரும்.
வழக்கமான ரெயில் பெட்டிகளில் 78 இருக்கைகள் இடம் பெற்று இருக்கும். இந்த தேஜஸ் ரெயிலில் 56 இருக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளதால் நெருக்கடி இல்லாமல் அமர்ந்து பயணம் செய்யலாம்.
தேஜஸ் ரெயில் கட்டணம் சதாப்தி ரெயில் கட்டணத்தை விட 20 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் இன்னும் கட்டணம் முடிவு செய்யப்படவில்லை.