உலகெங்கும் சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாமல் அதன் நேரடிப் போட்டியாக தயாரிக்கப்பட்டு வருகின்றன வெப் சீரிஸ்கள். குறைந்தபட்சம் 8 பகுதிகளாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த வெப்சீரிஸ்களுக்கு பார்வையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருக்கிறது.
இரண்டரை மணி நேரத்தில் சொல்லப்படும் ஒரு கதையை விட கிட்டத்தட்ட அதே கதையை ஆறு மணி நேரத்திற்கு சொல்லும்போது காரண காரியங்களுடன் துல்லியமாக அந்த கதையை கொண்டு போய் சேர்க்க முடிகிறது. இந்நிலையில் ஓடிடி தள வரிசையில் இந்தியாவில் முதல்வரிசையில் இருக்கும் அமேசான் பிரைம் தங்களது முதல் சீரிஸான ‘சுழல் ‘ என்ற வெப் சீரிசை தயாரித்து அளித்திருக்கிறது.
பிரபல இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி இந்த வெப்சீரிஸ் ஸ்கிரிப்டை எழுதி முடிக்க நான்கு பகுதிகளை இயக்குனர் பிரம்மாவும் மீதி நான்கு பகுதிகளை அனுசரணும் இயக்கி முடித்து இருக்கின்றனர்.
வாழ்க்கையே ஒரு சூழலுக்குள் சிக்கிய துரும்பு போல தான் என்றாலும் ஒவ்வொருவர வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான சூழல் என்னும் சுழலுக்குள் சிக்கி தவிக்கின்றனர். இந்த கருத்தை ஒரு சஸ்பென்ஸ் கலந்த மர்மத் தொடராக அளித்திருக்கின்றனர் புஷ்கர் காயத்ரி.
மேற்கு மலைத் தொடர்ச்சியில் சாம்பலூர் என்னும் மலை கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கதை விரிகிறது. அங்கிருக்கும் தொழிற்சாலையில் தொழிற்சங்க தலைவராக இருக்கிறார் ஆர் பார்த்திபன். தொழிற்சாலையின் முதலாளியாக புதிதாக பொறுப்பேற்ற கொண்டிருக்கும் ஹரிஷ் உத்தமன். அவருக்கும் நிறைய புகைச்சல் இருந்தவரை முதலாளிகளின் கைக்கூலியாக செயல்படுவதாக இன்ஸ்பெக்டர் ஸ்ரேயாவை நினைக்கிறார் பார்த்திபன். சப்-இன்ஸ்பெக்டராக கதிர் நடித்திருக்க இவர்களுக்குள் புகைச்சல் போய்க்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் தொழிற்சாலை ஒருநாள் பற்றி எரிகிறது அதைத் தொடர்ந்து பார்த்திபனின் இளைய மகளை காணவில்லை. மனைவியை பிரிந்து வசிக்கும் பார்த்திபன் இளைய மகளுடன் மட்டும் வாழ்ந்து வருகிறார் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ராஜேஷ் தனியாக வசிக்க, தங்கை காணாமல் போன விஷயத்தை கேள்விப்பட்டு அவரும் வந்து தேடிக் கொண்டிருக்கிறார்.
பார்த்திபனின் மகள் காணாமல் போன தினம் இன்ஸ்பெக்டர் ஸ்ரேயாவின் மகன் சுற்றுலா சென்று இருக்க அவர் தான் அவளை கடத்தி கொண்டு போனதாக பார்த்திபன் தரப்பு நம்புகிறது.
பகைமை இன்னும் அதிகமான சூழலில் யாரும் எதிர்பாராத திடுக்கிடும் சம்பவம் ஒன்று நடக்க இந்த பிரச்சனைகள் எப்படி தீர்வுக்கு வந்தன என்று சொல்லும் கதைதான் சுழல்.
இரண்டு பெண்களின் தந்தையாக நடித்திருக்கிறார் பார்த்திபன். தொழிற்சங்க தலைவராக ஸ்ரேயாவுடன் அடிக்கடி சண்டை பிடிப்பதும் , மகள் நிலாவை நினைத்து அழுது புலம்புவதும், தன் தவற்றை உணர்ந்து மனைவியிடம் சரணடைவதும் என்று நேர்த்தியான நடிப்பை வழங்கி நடிப்பில் முன்னிலை வகிக்கிறார் அவர்.
துடிப்பான மிடுக்கான சப் இன்ஸ்பெக்டர் சக்கரையாக தன் திறமையையும், உணர்ச்சிகளையும் எளிதாக காட்டி சிறப்பாக செய்திருக்கிறார் கதிர். ஸ்ரேயாவே தப்பு செய்திருந்தாலும், தான் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று அவர் நினைப்பது சிறப்பு.
தங்கையைக் கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகளிலும், அப்பாவுக்கும் இன்ஸ்பெக்டருக்கு மான பகையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளிலும் மிளிர்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இன்ஸ்பெக்டர் ரெஜினாவாக கம்பீரமான தோற்றத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரேயா ரெட்டி. மகன் மீது பாசத்தை பொழியும் அம்மாவாக, கண் கலங்க வைத்து விடுகிறார்.
அவரது மகனாக நடித்திருக்கும் எஃப் ஜேவையும், காதலி நிலாவாக கோபிகா ரமேஷையும் சுற்றியே கதை சூழல்வதால் அதற்கேற்ற பங்களிப்பை கச்சிதமாக கொடுத்துள்ளனர்.
வில்லனாக இருப்பார் என்று நம்பப்படும் ஹரீஷ் உத்தமன் இறுதியில் பரிதாபத்தை சம்பாதிக்கிறார்.
நிவேதிதா சதிஷ், சந்தானபாரதி, எஸ்.பிரேம்குமார், நித்தீஷ் வீரா, ஈ.குமாரவேல், எம்.இந்துமதி, லதா ராவ், எம்.பழனி, எஸ்.ஜீவா, யூசுப் உசேன் ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
முகேஸின் ஒளிப்பதிவே இந்தத் தொடரின் பழம். மயான கொள்ளை திருவிழா, சிமெண்ட் தொழிற்சாலை தீ விபத்து, மலைப்பிரதேசங்கள், வீடுகள், கொலைகள் என்று இரவில் நடக்கும் சம்பவங்களை யதார்த்தமாகக் கொடுத்து மிரள வைத்துள்ளார்.
சாம் சிஎஸ்ஸின் சிறப்பான இசையும் தன் பங்களிப்பை சரியாகக் கொடுத்திருக்கிறது.
எடிட்டர்-ரிச்சர்ட் கெவின், சண்டை- திலீப் சுப்புராயன், தினேஷ் சுப்புராயன் உள்ளிட்ட தொழில்நுட்பத் துறையினர் தங்கள் வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
ஒன்பது இரவுகளில் நடக்கும் மயான கொள்ளை தொடரின் பின்புலமாக அமைந்திருப்பது சிறப்பு.
இந்த சிக்கலான கதையை திறம்பட தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு பாராட்டுக்கள்.
இன்றைய சமுதாயத்தில் நிகழும் அத்தனை சிக்கல்களையும் இந்த சின்ன கதைக்குள் கொண்டு வந்து திறம்பட அவற்றை கையாண்டிருக்கும் புஷ்கரும் காயத்ரியும் பாராட்டுக்குரியவர்கள்.
பாதி தொடரைப் பார்த்துவிட்டு இதுதான் முடிவாக இருக்கும் என்று எவரும் கருதிவிட முடியாத அளவில் கடைசி வரை தொடரை பார்த்தால் மட்டுமே எல்லா உண்மைகளும் தெரியவரும் என்பது தொடரின் ஆகச் சிறப்பு.
சுழல் – சூழும் மர்மம்..!