பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரியாகவும் திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ்.
கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிக்கிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு சிகிச்சை பலனின்றி தன் 67வது வயதில் சுஷ்மா சுவராஜ் காலமானார்.
அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுஷ்மா மறைவின் காரணமாக டெல்லியில் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
சுஷ்மா டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். இந்தியாவின் பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை மந்திரியாக 26 மே 2014 முதல் 29 மே 2019 வரை பதவியில் இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினராக ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். மூன்று முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியின் ஐந்தாவது முதலமைச்சராக 1998-ம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி பதவி ஏற்றார்.
இந்திரா காந்திக்குப் பிறகு வெளிவிவகார மந்திரி பதவி வகித்த இரண்டாவது பெண்ணான சுஷ்மா சுவராஜ், 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான இந்திய-இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டார்.
மேலும் அவரது சிறப்புகள்…
குறிப்பாக, வெளிநாடுகளில் சிக்கலில் சிக்கிய இந்தியர்களுக்கு தேவையான உதவியை சுஷ்மா சுவராஜ் செய்து வந்தார். சமூக வலைதளங்களில், இந்தியர்கள் எழுப்பிய கேள்விக்கு உடனுக்குடன் பதிலளித்து வந்தார். இதனால், பலரது பாராட்டுகளையும் பெற்றார்.