தனது அறக்கட்டளை மூலம் நடிகர் சிவகுமார் கடந்த 39 ஆண்டுகளாக , ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார்.
இந்த ஆண்டுகான, ‘ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 39 ஆம் ஆண்டு நிகழ்வு, சென்னை வடபழனி பிரசாத் லேப்-பில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 21 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ. 2,05,000 (இரண்டு லட்சத்து ஐந்தாயிரம்) பரிசளிக்கப்பட்டது. சிவகுமாரும், சூர்யாவும் பரிசுகளை வழங்கினார்கள்.
இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர்களுக்கான ’தாய்தமிழ் பள்ளிக்கு’ 1 லட்சமும், முதல் தலைமுறையாக படிக்கும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் ‘வாழை’ இயக்கத்திற்கு 1 லட்சமும் வழங்கப்பட்டது. மேலும் அறிவியல் துறையில் சிறந்த விளங்கி வரும் மாணவர்களுக்கும், விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு பரிசளித்த நடிகர் சூர்யா பேசியதிலிருந்து…
“அகரம்’ இப்படியொரு நிலைக்கு வரும் என எதிர்பார்க்கவில்லை. 2500 மாணவர்களுடன் இந்தாண்டு தொடர்கிறது. 1979-ல் ஒருவருடைய சிறிய எண்ணத்தால், இப்போது தமிழக மக்கள் பலருடைய ஆசிர்வாதம் கிடைக்கிறது. விளையாட்டு மற்றும் அறிவியல் சார்ந்து அடுத்தாண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்தப்படும் என்பதை அகரம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வியில் எங்கோ பின் தங்கி விட்டோமோ, கல்வித்தரம் சரியாக இல்லையோ என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்க்கின்றன. எல்லாவற்றையும் தாண்டி ‘நான் படித்தே தீருவேன்’, என்ற வைராக்கியமிருந்தால் எதுவுமே தடை கிடையாது. ‘இந்த இலக்கை அடைந்தே தீருவேன்…’ என்று கங்கணம் கட்டிக் கொண்டால் நிச்சயமாக அந்த இலக்கை அடைந்தே தீருவீர்கள்.
நான் இந்த மேடையிலிருக்கும் அளவுக்கு வளர்வேன் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. 1997-ல் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்பாவின் ஆசிர்வாதத்தால் நானும் தமிழ்நாட்டில் நடிகனாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறேன். எனது ஆரம்பம் இடத்தை யோசித்துப் பார்த்தால், எப்படி இந்த இடத்துக்கு வந்தேன் என்று பயமாக இருக்கிறது. பாரதியார் கவிதைகள், நண்பர்களின் ஊக்கம், இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவராலும் மட்டுமே இந்த இடம் கிடைத்திருக்கிறது.
அந்த இடத்தைத் தாண்டி, அகரம் மூலமாக செய்து வரும் உதவிகளை உயர்வாகப் பார்க்கிறேன். நடிகராகப் பார்ப்பதை விட, அகரம் மூலம் ஏதோ செய்துகொண்டு இருக்கிறேன் என்பதை பல மடங்கு உயர்வாகப் பார்க்கிறேன். அதில்தான் பெரிய நிறைவு கிடைக்கிறது.
வீட்டில் அப்பா – அம்மாவுக்கு, குழந்தைகளுக்குத் தேவையான விஷயங்கள் எல்லாம் பண்ணியாயிற்று. இனிமேல் நினைக்கிற, செய்கிற ஒவ்வொரு விஷயமும் அகரமுக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்பது என் ஆசை. அகரம் மூலமாக செய்ய வேண்டியது கடல் அளவுக்கு இருக்கிறது. அதைச் செய்வதற்கு யாரை எல்லாம் பார்க்க வேண்டுமோ, எந்தக் கதவுகளை எல்லாம் தட்ட வேண்டுமோ அனைத்துமே தட்டப்படும்.
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். அகரத்தில் இருப்பவர்கள் மாணவர்கள் வேலைக்குச் செல்லும் வரை அண்ணாக்களாகவும், அக்காக்களாகவும் கூடவே இருப்பார்கள். உதவிக் கேட்டு வருபவர்களை விட, அகரத்தில் போய் தேடிப் பிடித்து படிக்க வைக்கிற மாணவர்கள் அதிகம்.
கிராமப்புறத்திலுள்ள மாணவர்களுக்கு இன்னும் நிறைய ஆதரவு தேவைப்படுகிறது. நகர்ப்புறத்தில், வெளிநாடுகளில் இருப்பவர்கள் கிராமப்புறத்திலுள்ள பள்ளிகளுக்கு அவர்களால் முடிந்த ஏதாவது ஒரு உதவி செய்தாலே பெரிய மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்கள் நடைபெற்றால், ஏற்றத்தாழ்வுகள் இருக்காது..!”