இதில் சரண்டர் என்பது கைதியின் சரண்டர் இல்லை. ஒரு துப்பாக்கியின் சரண்டர். அதுவும் யாருடைய துப்பாக்கி தெரியுமா?
மன்சூர் அலிகானின் துப்பாக்கி. அதுவும் அவர் நடிகர் மன்சூர் அலி கானாகவே வருகிறார். தேர்தல் வருவதை ஒட்டி அவருடைய துப்பாக்கியை போலீசில் சரண்டர் செய்து விட்டுப் போக, அது காணாமல் போகிறது.
அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு பயிற்சி எஸ்.ஐ யாக இருக்கும் நாயகன் தர்ஷனிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இதற்கிடையே ஒரு பக்கம் தேர்தல் செலவுகளுக்காக உள்ளூர் தாதா சுஜித், பத்து கோடி ரூபாய் பணத்தை அரசியல்வாதி ஒருவரிடம் ஒப்படைக்க, இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் கொடுத்தனுப்ப, விபத்துக்குள்ளாகும் அவரது ஜீப்பிலிருந்த பணம் மாயமாகிறது.
இன்னொருபக்கம் தர்ஷன் பயிற்சி பெறும் போலீஸ் ஸ்டேஷனில் நேர்மையே உருவான ஏட்டாக இருக்கிறார் லால். அவரது பொறுப்பில்தான் மன்சூர் துப்பாக்கி காணாமல் போனது. அவருக்கும் மேற்படி தாதா சுஜித்தின் தம்பிக்கும் ஒரு உரசல் இருக்க, அதன் காரணமாக லால் அவமானப்படுத்தப்படுகிறார்.
அதில் தர்ஷனுக்கு அவன் மீது ஏகக் கோபம் இருக்க, காவல் அதிகாரிகளே பயப்படும் அந்த தாதாவின் கூட்டத்தை தர்ஷனால் அடக்க முடிந்ததா, மன்சூர் துப்பாக்கி என்ன ஆனது, தாதாவின் காணாமல் போன பணம் மீட்கப் பட்டதா? என்பதெல்லாம் மீதிக் கதை.
எந்த ஹீரோவுக்குரிய அறிமுகமும் தர்ஷனுக்கு இல்லை. சொல்லப்போனால் முதல்பாதியில் அவருக்குப் பெரிய வேலையும் இல்லை. பின்பாதியில்தான் டேக் ஆஃப் ஆகிறார்.
அவர் மட்டுமல்லாமல் தாதா சுஜித், அவர் தம்பி, உடனிருக்கும் சதிகாரர்கள் எல்லோருமே இயல்பாக நடித்திருப்பதால் படத்துடன் ஒன்ற முடிகிறது.
லால் நடிப்பு பற்றி சொல்லவே வேண்டியதில்லை. “எனக்கு ஒரு மகன் இருந்தா எனக்கு நேர்ந்த அவமானத்துக்கு தட்டிக் கேட்க மாட்டானா..?” என்று அவர் கேட்கும்போது தர்ஷன் மோட்டிவேட் ஆவது நம்பகமாக இருக்கிறது.
இன்ஸ்பெக்டராக வரும் அரோல் டி.சங்கர் போலீசுக்காகவே படைக்கப்பட்டவராக மிடுக்கு காட்டுகிறார்
மன்சூராகவே வரும் மன்சூர், தான் துப்பாக்கியுடன்தான் மணிப்பூர் செல்ல முடியும் என்பது அவரது சொந்த லந்து என்று புரிகிறது.
மெய்யேந்திரன் ஒளிப்பதிவும், விகாஸ் பாடிஷா இசையும் படத்தின் தன்மைக்குப் பொருத்தமாக இருக்கின்றன
படத்தைத் தொய்வின்றி இயக்கியிருக்கும் கௌதமன் கணபதியைப் பாராட்டலாம். இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் பெரிய வெற்றி பெற்றிருக்கும்.
சரண்டர் – துப்பாக்கியும், துப்பும்..!
– வேணுஜி