கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள போதை வஸ்து கடத்தலில்… பணத்துக்காக பெண்ணைக் கடத்தும் நாயகன் புகுந்து என்ன செய்கிறார் என்கிற லைனைக் கதையாக்கி சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏகே என்கிற அருண்கார்த்திக்.
நாயகன் துருவா, தன் மாமன் ஷாராவுடன் சேர்ந்து நாயகி இந்துஜாவை பணத்துகாகக் கடத்துகிறார். அழகான பெண்ணைக் கடத்தும்போது ஏற்படும் ஈர்ப்பில் இந்துஜா மீது துருவா காதல் வயப்பட, அதற்காக இந்துஜாவின் குடும்பம் இருக்கும் போராட்ட சூழலுக்குள் பயணிக்கிறார். அதன் மூலம் இந்துஜாவுக்கே தெரியாத அவர் குடும்பத்து ரகசியங்கள் வெளியே வருகின்றன. அதில் மேற்படி போதை மருந்துக் கடத்தலும் உள்ளே வர என்ன ஆகிறது என்பது கதை.
தான் ஏற்றுக்கொண்ட கேரக்டரை இயல்பாகச் செய்வதே துருவாவை ரசிக்க வைக்கிறது. காதல் காட்சிகளில் மிடுக்கும், சண்டைக் காட்சிகளில் சுறுசுறுப்புமாக… பெரிய படங்களில் ஹீரோவாகும் சாத்தியம் இருக்கிறது அவருக்கு.
‘காந்தக் கண்ணழகி’ இந்துஜா இருப்பதாலேயே இந்தப்படம் கவனிக்கப்பட்டிருக்கிறது எனலாம். கடந்த படங்களில் குடும்பக் குத்து விளக்காக வந்த இந்துஜாவுக்கு இதில் மேல்தட்டு நடுத்த வர்க்கக் கேரக்டர் என்பதால் கொஞ்சம் மாடர்னாகவும் வருவது கவர்கிறது.
துருவாவின் கூடவே வரும் ‘ஷாரா’வைக் காமெடிக்குப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அவரும் அதை உணர்ந்து வசனக் காமெடியில் கலகலக்க வைக்கிறார். கடைசியில் ஒரு போலீஸ் அதிகாரியாகவும் ஷாராவே வர, அவர் இவரா… இவர் அவரா… என்ற குழப்பம் நமக்கு வர, கடைசியில் இருவரும் வேறென்று தெரிகிறது.
ஆனால், இருவரும் ஏன் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்வதானால் இன்னும் கொஞ்சம் கதை சொல்லவேண்டியிருக்கும் என்று வாய்ஸ் ஓவரில் அவர்களே சொல்லி, “ஐயோ வேண்டாம்…” என்று அவர்களே முடித்தும் வைப்பது ஆகப் பெரிய காமெடி.
வில்லன்களாக நடித்திருக்கும் ஆதித்யாஷிவ் மற்றும் ஸ்ரீனி நல்ல தேர்வு.
கதைக்கேற்ப பின்னணி இசையைக் கொடுக்க முயன்றிருக்கும் திவாகராதியாகராஜன் இசையில் பாடல்கள் சுமார். தளபதி ரத்னம் சுந்தர்ராம் ஆகிய இருவர் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது.
‘டார்க் ஹியூமர்’ என்ற ஜேனரில் க்ரைம் கலந்து சொல்லப்படும் நகைச்சுவைக் கதையானதால் சட்டென்று சீரியஸாகவும், சட்டென்று காமெடியாகவும் பயணிக்கிறது திரைக்கதை.
சூப்பர் டூப்பர் என்றால் என்னவென்று குழப்பிக் கொள்ளவே வேண்டாம். மேற்படி போதை வஸ்துவேதான். படமும் அப்படி இருக்கும் என்று வருவார்கள் என்று இயக்குநர் எதிர்பார்த்திருக்கலாம்… ரசிகர்களும் அப்படிச் சொல்லியிருக்க வேண்டுமென்றால் இன்னும் ஸ்டஃப் தேவைப்படும்.
என்றாலும் எடுத்துக்கொண்ட கதையை முடிந்த வரையில் கொடுத்திருப்பதையும், பெரிய ஹீரோக்களின் படங்களுடன் வெளியிட்டிருக்கும் ‘தில்’லையும் பாராட்டலாம்..!