போர் தொழில் வெற்றிப் படத்துக்குப் பின் சீரியல் கில்லர்களைப் பின் தொடர்ந்து சரத்குமார் துப்பறியும் மூன்றாவது படம். ஷ்யாம் – பிரவீண் இயக்கியிருக்கிறார்கள்.
கோயம்புத்தூர்தான் கதைக்களம். சிபிசிஐடியில் சரத்குமார் பணியாற்றும் போது ஒரு சீரியல் கில்லர் பெரும் தலைவலியை உருவாக்குகிறான். கொல்பவர்களின் முகங்களில் வாயை மட்டும் கிழித்து, சிரிப்பது போல் வைத்து விடுவது அவனுடைய ஸ்டைல். ஒரு கட்டத்தில் அவன் கொல்லப்பட்டதாக அறிவித்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் சரத்குமாரின் உயர் அதிகாரி சுரேஷ் மேனன். அவரும் கொல்லப்படுவதை நமக்கு மட்டும் காட்டுகிறார்கள்.
ஆனால் அது முடியவில்லை என்று புரிந்து கொள்ளும் சரத்குமார் அது தொடர்பான ஒரு துரத்தலில் விபத்தில் சிக்கி சிறிது காலம் ஓய்வில் இருக்கிறார். அத்துடன் அவருக்கு அல்சைமர் என்கிற ஞாபக மறதி நோயும் வந்து விடுகிறது.
ஆனால் மீண்டும் அந்த சீரியல் கில்லரின் ‘ஸ்மைல் கொலைகள்’ தொடர்கின்றன. அவன் இறந்து விட்டதாக போலீஸ் அறிவித்த நிலையில் இப்போது வந்திருக்கும் கொலையாளி அதே பாணியில் கொலை செய்யும் இன்னொரு copy cat கில்லர் என்கிறது போலீஸ்.
புதிதாக விசாரணையில் இறங்கும் அதிகாரி ஸ்ரீகுமார் ஏற்கனவே சீரியல் கில்லர் வழக்கில் சரத்குமார் சம்பந்தப்பட்டிருப்பதால் அவரது உதவியை நாடுகிறார். இது வேறு கொலையாளி என்று போலீஸ் தொடர்ந்து மறுத்துக் கொண்டிருக்க சரத்குமார் மட்டும் இவன் அதே கொலையாளிதான் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
சீரியல் கில்லர் வழக்கை விசாரிக்கும் புதிய அதிகாரி ஸ்ரீகுமார் வேறு யாரும் அல்ல – சுரேஷ் மேனனின் மகன்தான்.
கடைசியில் இரண்டு கொலையாளிகளும் ஒரே நபர்தானா? அவனை சரத்குமார் கண்டுபிடித்தாரா? சுரேஷ் மேனன் என்ன ஆனார்..? போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது பின் பாதிப் படம்.
பார்ப்பதற்கு காவல்துறை அதிகாரி போலவே மிடுக்காக இருப்பதால் சரத்குமாரைத் தேடி இது போன்ற வேடங்கள் வருகிறது எனலாம். அவரும் அலட்டிக் கொள்ளாமல் இது போன்ற வேடங்களில் நடித்து பெயரைத் தக்க வைத்துக் கொள்கிறார். அல்சைமர் தாக்கிய நிலையில் அவரது தவிப்பான நடிப்பு குறிப்பிடத் தகுந்ததாக இருக்கிறது.
சுரேஷ் மேனனை நல்லவராக அறிமுகப்படுத்துகிறார்கள். இவர் கடைசி வரை நல்லவராக இருக்க வாய்ப்பில்லையே என்று அப்போதே நமக்குத் தோன்றுகிறது.
அவரது மகனாக வரும் ஸ்ரீகுமார் அந்த வேடத்தில் மிடுக்காகப் பொருந்துகிறார்.
கதாநாயகி என்று தனியாக இல்லாத நிலையில் ஸ்ரீகுமாரின் உதவியாளர் சிஜா ரோஸ் பளிச்சென்று கவனத்தைக் கவர்கிறார். அவரைத் தவிர ஆறுதலுக்காக இனியா ஒரு பாத்திரத்தில் வருகிறார்.
இவர்களைத் தவிர கலையரசன், ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், பேபி ஆலியா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். பேபி ஆலியா கொலைகாரனிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகள் நம்மைத் தவிப்பாக வைக்கின்றன.
ஜார்ஜ் மரியான் கேரக்டரை குமாஸ்தா என்கிறார்கள். படம் முழுவதும் அவரை தமிழில் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போன வார்த்தையான குமாஸ்தா என்றே அழைப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
பிணங்களின் வாயைக் கிழித்து சிரிப்பது போல் அறுத்து வைப்பதெல்லாம் நிஜத்தில் முடியாத சமாச்சாரம்.
கொலை நடக்கும் கோவைப்புதூர் பகுதிகளில் ஆள் நடமாட்டமே இல்லாதது போல் காட்டி இருக்கும் இயக்குனர்கள் இதுவரை கோயம்புத்தூர் பக்கம் போனதில்லை போலிருக்கிறது.
இதுபோன்ற லாஜிக்குகளை முறைப்படுத்தி திரைக்கதையில் விறுவிறுப்பு சேர்த்திருந்தால் இந்தப் படம் இன்னொரு போர் தொழில் போல வந்திருக்கும்.
விக்ரம் மோகனின் அற்புதமான ஒளிப்பதிவும், கவாஸ்கர் அவினாஷின் பின்னணி இசையும் திரைக் கதையைத் தாண்டி படத்துக்கு உதவி இருக்கின்றன.
தன்னுடைய 150ஆவது படத்தை நிறைவு செய்ததற்காக சரத்குமார் தாராளமாக ஸ்மைல் பண்ணலாம்.
ஆனால்…
ஸ்மைல் மேன் சொல்ல வருவது, ‘சிரிக்கத் தெரியாதவர்கள் ஜாக்கிரதை..!’
– வேணுஜி