எப்போதுமே உண்மைக் கதைகளைத் தழுவி எடுக்கப்படும் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் இந்த ராஜா கிளி படமும் அமைகிறது.
நாம் நன்கறிந்த பெரும் தொழிலதிபர், பெண்கள் மீது கொண்ட சபலத்தினால் எந்த அளவுக்கு சமுதாயத்தில் மதிப்பு இழந்து சிறைக்குச் சென்று பின்னர் உயிர் விட்டார் என்பதை அடி நாதமாக வைத்துக் கொண்டு அதில் பாதிக்கு மேல் கற்பனையைச் சேர்த்து ஒரு சுவாரசியமான கதையை நமக்கு தந்து இருக்கிறார் இயக்குனரும் நடிகருமான தம்பி ராமையா.
படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் பாடல்களுக்கான இசை அபைப்பை கவனித்திருப்பதுடன், கதை நாயகனாகவும் நடித்திருக்கிறார் தம்பி ராமையா.
இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் நடிகராக நாம் அறிந்து வைத்திருக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா.
ஃப்ளாஷ் பேக்கில் சொல்லப்படுகிற கதையின் ஆரம்பத்தில் தம்பி ராமையா குப்பை மேட்டில் மனநலம் குன்றியவராக கண்டெடுக்கப்பட, அவரை மீட்கிறார் மனநலம் குன்றியவர்களுக்கான ஒரு தன்னார்வ அமைப்பை நடத்தி வரும் சமுத்திரக்கனி.
தம்பி ராமையாவிடமிருந்து பெறப்பட்ட ஒரு டைரியின் மூலம் அவர்தான் கொஞ்ச காலம் முன்பு கொடி கட்டிப் பறந்து பின் சிறைக்குச் சென்ற தொழில் அதிபர் முருகப்பன் என்பது தெரிய வருகிறது. அவர் ஏன் அந்த நிலைக்கு ஆளானார் என்பதை ஃப்ளாஷ் பேக் சொல்கிறது.
பெரும் முருக பக்தரான அவருக்கு பெண்கள் மீதான லயிப்பு ஏற்பட்டதிலிருந்து பிரச்சனை தொடங்கி, அதன் நீட்சியாக கொலைக் குற்றம் சாட்டப்படுகிறார். சிறையில் இருப்பதால் அவரது பல கோடி சொத்துக்களைக் காப்பாற்றும் பொருட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்து சொத்துக்களுக்கான ஒரு காப்பாளராக நினைக்கிறார் அவரது மகன்.
எந்த கேள்வியுமின்றி அவர் தன் மகனுக்கு சொத்துக்களைப் பாசத்துடன் எழுதிக் கொடுக்க, மனம் மாறும் அவரது மகன் எதிர்பாராத அதிர்ச்சியாக அவரைக் கொல்லச் சொல்லிவிட, அதற்குப் பின் என்ன ஆனது என்பது மீதி.
படம் முழுக்க வியாபித்து நடிப்பில் பன்முகம் காட்டியிருக்கிறார் தம்பி ராமையா. அழுக்குப் படிந்த உடையுடன் கிட்டத்தட்ட ரத்தக்கண்ணீர் எம் ஆர் ராதா போன்று தோற்றமளிக்கும் அவர், செல்வந்தராக இருந்தபோது காட்டும் மிடுக்கும், ஜொலிப்பும் அபாரம்.
அதேபோன்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கையில் அப்படியே கூனிக் குறுகி செல்வந்தராக இருந்ததற்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் அப்படி ஒரு அப்பாவியாக நடித்து மனதை நெகிழ வைக்கிறார். ஒரு வாய் சோற்றுக்காக வலுக்கட்டாயமாக போதை ஏற்றப்பட்ட அவர் போடும் ஒரு குத்தாட்டம்… அடடா… என்ன ஒரு எனர்ஜி..?
இந்தப் படத்தின் மூலம் அவருக்கு இன்னொரு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அவரது மனைவியாக நடித்திருக்கும் தீபாவின் நடிப்பும்… குறிப்பாக கிளைமாக்சில் சிறப்பாக இருக்கிறது.
தம்பி ராமையாவின் இரண்டாவது மனைவியாக நடித்திருக்கும் சுபா, இள வயது காதலியாக நடித்திருக்கும் ஸ்வேதா ஷ்ரம்ப்டன், அவரை வசமாக சிக்க வைக்கும் காவல்துறை அதிகாரி அருள்தாஸ் மற்றும் பழ கருப்பையா, டேனியல் அனி போப், பிரவீன் குமார்.ஜி, ரேஷ்மா உள்ளிட்டோர் சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
சமுத்திரக் கனியின் பங்கும் சிறப்பாக இருக்கிறது. நேர்மையான நடிப்பால் அந்தப் பாத்திரத்துக்குப் பெருமை சேர்க்கிறார் கனி.
வழக்கு சிக்கலுக்கு மேல் சிக்கலாக போய்க்கொண்டிருக்கையில் உள்ளே வரும் வழக்கறிஞர் சுரேஷ் காமாட்சியின் திறமையால் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வருவது நல்ல விஷயம்.
சபலம்தான் ஒரு பெரிய மனிதரை சிக்கலுக்கு உள்ளாக்கியது என்றாலும் அவரது நல்ல பக்கங்களையும் காட்டி இருப்பது இந்தப் படத்தின் நடுநிலைமை.
பாடல்கள் மற்றும் பாடல்களுக்கான இசை என்று தம்பி ராமையாவின் பங்களிப்பும், பின்னணி இசையமைத்திருக்கும் சாய் தினேஷ் பணியும் சிறப்பு.
கேதார்நாத் – கோபிநாத்தின் ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு கச்சித்மாக அமைந்திருக்கிறது.
ராஜா கிளி – ஒரு கைதியின் டைரி..!
– வேணுஜி