2007- ம் ஆண்டு வெளியான சிவி படத்தின் தொடர்ச்சிதான் இந்த சிவி 2.
கடந்த படத்தில் நந்தினி தன்னைக் கொன்றவர்களை பழி வாங்கியது போல் இதில் தன்னை தேடி வந்தவர்களை பழி தீர்க்கும் கதை. இதை ஒரு திரில்லர் ஹாரராக எழுதி இயக்கியிருக்கிறார் கே.ஆர்.செந்தில்நாதன்.
இந்தக் கதைக்குள் சமூக வலைத்தளங்கள் எப்படி மக்களை ஏமாற்றுகிறது என்ற மெசேஜையும் உள்ளே வைத்துச் சொல்லி இருக்கிறார் அவர்.
விஸ் காம் மாணவ மாணவிகள் ஒன்பது பேர் காணாமல் போனதாக புறநகர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுக்க, அவர்களது செல்போன் சிக்னலை வைத்து ஒரு பாழடைந்த மருத்துவமனைக்கு போலீசார் செல்கின்றனர்.
அங்கே கைப்பற்றப்பட்ட மாணவர்களின் பொருட்களை வைத்து துப்பறியும் அண்டர் கவர் ஆபரேஷன்ஸ் நிபுணர் சாம்சுக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகின்றன.
காணாமல் போன அந்த ஒன்பது பேரும் அமானுஷ்ய சக்தி பற்றி போலி விடியோ வெளியிட்டு பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு அந்த பாழடைந்த மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
பார்வையாளர்கள் அதிகரிக்கும் சமயம் அவர்களே எதிர்பாராத விதத்தில் அங்கே உண்மையான அமானுஷ்ய சக்தி இருப்பது தெரிய வர அவர்களுக்கு நேர்ந்த கதி என்ன என்பதுடன் இந்த உண்மையைக் கண்டுபிடித்த சாம்சுக்கி என்ன நேர்ந்தது என்பது மீதிக் கதை.
யோகி, தேஜ், ஸ்வாதி, சாம்ஸ், தாடி பாலாஜி, கோதண்டம், சந்தோஷ், குமரன் உள்ளிட்டவர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
பாழடைந்த மருத்துவனையை திகிலுக்கான க்ளமாகக் கொண்டு மிரட்டி அச்சத்தினைக் கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் பி.எல்.சஞ்சய்க்குப் பாராட்டுகள். பைசலின் பின்னணி இசைக்கும் படத்தில் முக்கிய பங்கு இருக்கிறது.
திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் ரசித்திருக்க முடியும். முதல் பாகத்துக்கு முதல் மதிப்பெண் என்றால் இந்த இரண்டாம் பாகத்துக்கு இரண்டாவது இடம்தான் கொடுக்க இயலும்..!
சிவி 2 – ரசிகர்களின் பயமே படத்தின் ஜெயம்..!