முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லி விட வேண்டும். இது வழக்கமான விஜய் சேதுபதி படமல்ல… புதிய கதை சொல்லலில் அமைந்த புது முயற்சி என்பதைத் தெரிந்துகொண்டு யாரும் படம் பார்க்கப் போவது நலம்.
‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்றொரு வழக்குச்சொல் உள்ளதல்லவா..? அதுதான் படத்தின் கதையும்…
கலையே உலகம் நடிப்பே உயிர் மூச்சு என்று வாழ்ந்த ‘அய்யா’ ஆதிமூலம் என்ற பழபெரும் நாடக நடிகர் இறந்தும் எப்படி வாழ்ந்தார் என்பதை சற்றே நீண்ட கதையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணீதரன்.
இதுவரை விஜய் சேதுபதி ஏற்றிராத வேடம். எழுபது வயதுகளில் தெரிய அவர் இதுவரை பயன்படுத்திப் பார்க்காத புராஸ்தடிக் மேக்கப் போட்டு வித்தியாசமாகத் தோன்றுகிறார். என்ன ஒன்று… அவரது வழக்கமான முகபாவங்கள் இதில் உள்ளேயே அமுங்கிப் போய்விடுகின்றன. என்றாலும் சேது தன் வாழ்வில் குறித்துக்கொள்ள வேண்டிய முக்கியமான பாத்திரம் இந்த ‘அய்யா’.
அவரைத் தாங்கி நிற்கும் கேரக்டரில் யாரும் எதிர்பாராத வகையில் ராஜ்குமார். அவரும் எழுதி வைத்துக்கொண்டு புளகாங்கிதப்பட வேண்டிய பாத்திரம் இந்தப்படத்தில். அந்த சுவாரஸ்யம் என்ன என்பது சஸ்பென்ஸ்.
அவர் ஒரு காட்சியில் நடிக்க முற்பட்டு 44 டேக்குகள் ஆவதும், அவரை வைத்துக்கொண்டு இயக்குநரான பகவதி பெருமாள் படும் அவஸ்தையும் ரசிக்கத்தக்கவை.
அவரை அடுத்து படத்தில் ரசிக்க வைத்திருப்பவர் வைபவ்வின் நிஜ அண்ணனான சுனில் ரெட்டி. தன்னையே ஒரு நடிகனாக்கிக்கொள்ளும் புரட்யூசரான அவர் வரும் காட்சிகள் எல்லாமே கலகலப்புக்கு உத்தரவாதம் தருபவை. மேற்படி ராஜ்குமார், சுனில் ரெட்டி வரும் காட்சிகளில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ டைப்பில் பாலாஜி தரணீதரன் அடையாளம் தெரிகிறார்.
மௌலி ஏற்றிருக்கும் பாத்திரம் அழுத்தமானது. அவரும், சேதுவின் மனைவியாக வரும் அர்ச்சனாவும் அளவாகச் செய்து மனதில் இடம் பிடிக்கிறார்கள். காயத்ரியும், ரம்யா நம்பீசனும் தலையைக் காட்டியிருக்கிறார்கள்.
பாரதிராஜா, பாரதிராஜாவாகவே வந்து அய்யாவை பாராட்டுகிறார். கடைசிக் காட்சியில் நீதிபதியாக வந்து கலை எப்படி பாதுகாக்கப்படவேண்டும், கலைஞர்கள் எப்படி மதிக்கப்பட வேண்டும் என்று இயக்குநர் மகேந்திரன் சொல்வதுதான் கதையின் முக்கிய நாடி.
சரஸ்காந்தின் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும் படத்தைக் கவிதை நிலைக்கு இட்டுச் செல்கின்றன.
இந்தியன் தாத்தா அநீதி கண்டு பொங்கி எழுந்து சம்பந்தப்பட்டவர்களைப் போட்டுத் தள்ளியதைப் போல அய்யா ஆன்மா கலையை விலைபேசுபவனைப் பழிவாங்குவது வித்தியாசமான சிந்தனை.
படத்தின் நீளத்தை மட்டும் குறைத்திருந்தால் நடுநடுவே நமக்கு ஏற்படும் அயர்ச்சியைப் போக்கியிருக்கும்.
சீதக்காதி – சீரிய(ஸ்) சினிமா ரசனைக்குத் தீனி..!
– வேணுஜி