February 16, 2026
  • February 16, 2026
Breaking News
February 16, 2026

சீதா பயணம் திரைப்பட விமர்சனம்

By 0 76 Views

ஒரு பயணத்தில் சென்று சேர வேண்டிய தூரம் தாமதப்படுவதற்கு வழியில் பல தடைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தடைகள் எல்லாம் ஒரு பயணத்துக்கு எப்படி உதவின என்கிற வித்தியாசமான கதைக்களத்தை இந்தப் படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் அர்ஜுன். 

செல்வந்தர் சத்யராஜ், தாயின்றி வளர்ந்த தன் மகள் ஐஸ்வர்யாவை ஒரு தாய் போலவே பாசத்துடன் வளர்த்து வருகிறார். ஐஸ்வர்யாவும் அவரை “அப்பா..!” என்று அழைப்பதற்கு பதிலாக “அம்மா..!” என்று அழைத்து வருகிறார். 

இந்நிலையில் மதுரையில் நடைபெறும் ஒரு சமையல் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஐஸ்வர்யா காரில் செல்கிறார். சத்யராஜும் மகளைப் பிரிய மனமில்லாமல் பிரியாவிடை கொடுக்கிறார். 

வழியில் நாயகன் நிரஞ்சன் சுசீந்திரா, ஐஸ்வர்யாவிடம் லிஃப்ட் கேட்டு காரில் ஏறிக்கொள்கிறார். அதேபோல் மதுரை செல்லும் வழியில் ஒரு பழம் விற்கும் சிறுமி, மாடு மேய்க்கும் சிறுவன் மற்றும் தாதா அர்ஜுன் போன்றவர்களால் பயணத்துக்கு அவர் நிறைய இடையூறுகள் ஏற்படுகின்றன.

கடைசியில் அவர் நிகழ்ச்சிக்கு சற்றே தாமதமாக செல்ல நேர அந்நேரத்தில் அங்கே ஒரு வெடி விபத்து ஏற்பட்டு அனைவரும் இறந்து போகின்றனர்.

தாமதமே தன் உயிரை காப்பாற்றியது என்று புரிந்து கொள்ளும் ஐஸ்வர்யா தன் உயிரைக் காப்பாற்றிய அந்த தாமதத்திற்கு காரணமானவர்களை நன்றி கூற தேடிச் செல்வதும் அந்தப் பயண அனுபவமும்தான் இந்த படம்.

நல்ல உயரம் மற்றும் உடற்கட்டுடன் நாயகன் நிரஞ்சன் சுதீந்திரா கவர்கிறார். நடிப்பு, நடனம், சண்டை என்று எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடும் அவர் விரைவில் முன்னணிக்கு வந்து விடுவார்.

அவருக்கு ஏற்ற ஜோடியாக இருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன், படம் முழுவதும் வியாபத்து இருக்கிறார். அத்துடன் சென்டிமென்ட் காட்சிகளில் கண்கலங்க வைத்து விடுகிறார்.

அதற்கு தோதாக அவரது அப்பாவாக வரும் சத்யராஜின் நடிப்பு இருக்கிறது. அப்பாவின் மேல் மகளும் மகளின் மீது அப்பாவும் காட்டும் பாசம் நெகிழ வைத்து விடுகிறது.

நிரஞ்சனின் தாத்தாவாக வரும் பிரகாஷ்ராஜ், தனது வயது மூப்பை உடல் மொழியின் மூலமும் நடிப்பின் மூலமும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படி ஒரு நடிப்பைப் பார்த்து வெகு நாளாயிற்று.

தடாலடி தாதாவாக அறிமுகமாகும் அர்ஜுன் தானே இயக்குனராகவும் ஆனதால் அந்த பாத்திரத்தை நல்ல விதமாக வடிவமைத்து அதற்கு ஒரு முடிவைக் கொடுத்திருக்கிறார்.

இரண்டு காட்சிகளில்தான் வருகிறார் என்றாலும் துருவா சார்ஜா மிரட்டி இருக்கிறார்.

அனுப்ரூபன்ஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் நேர்த்தியைப் பெரிதுபடுத்தி இருக்கிறது.

அதேபோல் இது ஒரு பிரம்மாண்ட படம் என்பதை ஜி பாலமுருகனின் ஒளிப்பதிவு பறைசாற்றி விடுகிறது. அயூப்கான் படத்தொகுப்பும் அதற்கு தோதாக அமைந்திருக்கிறது. 

அர்ஜுன் திரைக்கதை அமைத்து இயக்கித் தயாரித்த இந்தப் படம் அவருக்கு எல்லா ஏரியாவிலும் நல்ல பெயரை பெற்றுத் தரும். 

தீமைகளையும் வன்முறை களத்தையுமே சமீப காலமாக பார்த்து வெதும்பிக் கொண்டிருக்கும் ரசிக மனங்களுக்கு எல்லா பாத்திரங்களும் நல்லவர்களாக வரும் இந்த படம் மிகப்பெரிய ஆறுதலைத் தரும். 

அத்துடன் ஒருவரை மிஞ்சி ஒருவர் நல்லவராக இருக்கும் இந்தப் படத்தை குடும்பங்கள் பார்த்துக் கொண்டாட முடியும். 

சீதா பயணம் – சிறப்பான தருணம்..!

– வேணுஜி