January 26, 2022
  • January 26, 2022
Breaking News
September 14, 2018

சீமராஜா விமர்சனம்

By 0 1039 Views

‘சரவண பவனி’ல் என்ன கிடைக்கும், ‘தலப்பாக் கட்டி’யில் என்ன கிடைக்கும் என்று சாப்பிடச் செல்பவர்களுக்கு சரியாகவே தெரியும். அப்படி சிவகார்த்திகேயன் + பொன்ராம் கூட்டணியில் அமைந்த படம் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களுக்கு அத்துப்படி. அந்த கும்மாளம் ஏற்கனவே இரண்டுமுறை நிரூபிக்கப்பட்டு விட்டது.

ஆனாலும், கடந்த வேலைக்காரன் படத்தில் சமூகம் சார்ந்து ரசிகர்களை யோசிக்க வைத்துவிட்ட சிவகார்த்திகேயனின் புரிந்துணர்வும் இதில் சேர்ந்து கொள்ள கும்மாளம், கொண்டாட்டமாகவும் மாறியிருக்கிறது.

அப்படி வழக்கமான சிங்கம்பட்டி, புளியம்பட்டி சீமைகளின் மோதல், மோதலுக்கு நடுவில் காதல் என்று காமெடிக் கரகம் ஆடி உலா வரும் கதைக்குள் உற்சவ மூர்த்தியாக பிறந்த மண்ணை நேசிக்கச் சொல்லும் லைனும் விழா காண்கிறது.

அரச வம்சத்தில் வந்த கடைசி வாரிசு சிங்கம்பட்டி சீமராஜாவான சிவகார்த்திகேயன் ரெட்டை குதிரை வண்டியில் ஊரைச்சுற்றி, வணக்கம் போடுபவர்களுக்கு வாரி வழங்கும் ஊதாரியாக இருக்கிறார். அவருக்குக் கணக்குப் பிள்ளையாக வரும் சூரியும் சேர்ந்து கொள்ள அலப்பறை கொடிகட்டிப் பறக்கிறது.

இதில் ஆகாத ஊரான புளியம்பட்டியைச் சேர்ந்த சமந்தாவை சிவா காதலிக்க, அந்த ஊரில் ஜென்மப் பகையாளியாக இருக்கும் லால், அவரது ஆசை நாயகி சிம்ரன் சதியில் சிக்கி என்னென்ன பாடுபடுகிறார் எப்படி அவற்றைச் சீர் செய்கிறார், வெளிநாட்டுக் கம்பெனிகளிடம் பறிபோகவிருந்த தங்கள் கிராமத்து மண்ணை எப்படி மீட்டெடுத்து அரச வம்சப் பெருமையைக் காப்பாற்றுகிறார் என்பதைச் சிரிக்க, ரசிக்க, வியக்க வைத்துச் சொல்கிறார் இயக்குநர் பொன்ராம்.

அரச குடும்பத்து வாரிசு, ஆனால் குலப்பெருமை தெரியாமல் லந்து பண்ணித் திரியும் கேரக்டர்… சிவகார்த்திகேயனுக்கென்றே ஆர்டர் கொடுத்துச் செய்த தொப்பியாக அவருக்குச் சரியாகப் பொருந்துகிறது. ‘நல்லா’சிரியர் விருதை தன் காதலியான பி.டி டீச்சர் சமந்தாவுக்கு வழங்கி, “நல்லாதானே இருக்காங்க…” என்று காரணம் சொல்லும்போதாகட்டும், கட்டையைத் தூக்கிக் கொண்டு சமந்தா அடிக்க வர, “அதைக் கீழே போடுங்க… எது கட்டைன்னே தெரியல…” என்று லந்து பண்ணும்போதாகட்டும் சிவாவின் அலப்பறை லக… லக…

ஆனால், எதிர்பாரத இன்ப அதிர்ச்சியாக இரண்டாம் பாதியில் அவர் ஏற்றிருக்கும் கடம்பவேல்ராஜா பாத்திரம் இதற்கு நேர் எதிரான முரணானது. வழக்கமான காமெடி தவிர்த்த இப்படியொரு சீரியஸ் கேரக்டரில் முழுப்படமுமே முயன்று பார்க்கலாம் சிவா. உருவப்பொருத்தம் மாத்திரமல்லாமல் உச்சரிப்பும், குரலும் கூட அற்புதமாகப் பொருந்தியிருகிறது.

இதுபோன்ற படங்களில் வந்தோம், போனோம் என்றில்லாமல் சமந்தாவுக்கு சிலம்பாட்டப் பயிற்சியும் கொடுத்து சீற வைத்திருப்பதைப் பாராட்டலாம். சமத்தாக சமந்தாவும் அதைக் கற்றுக் கொண்டு சிலம்பம் சுற்றி சிலுப்பியிருப்பதை ரசிக்க முடிகிறது.

Seemaraja Review

Seemaraja Review

சின்ன வேடம் என்றாலும் மன்னர் வம்ச பிளாஷ்பேக்கில் வந்து மனத்தில் நிறைகிறார் கீர்த்தி சுரேஷ். மிடுக்கான அந்த நடை ஒன்று போதும் கீர்த்தியின் கீர்த்தி சொல்ல…

கொஞ்சம் மெதுவாக தொடங்கினாலும் போகப் போக பிக்கப் ஆகிறார் சூரி. ‘ஹேபியஸ் கார்ப்பஸை’ கேபிஎன் டிராவல்ஸ்’ என்பதும், சமந்தாவை சந்திக்க லால் வீட்டுக்கு சிவாவுடன் போகையில் “ஃபாதர் இன் லால்’ வீடு. வலது காலை வச்சு வாங்க..!” என்பதுமாக அவர் வாயில் வார்த்தைகள் பிழையானாலும் நகைச்சுவை மழையாகிறது.

சமந்தாவை சிவா தூக்கிப்போக வரும்போது “நான் தூக்கிப்போனதை யார் கேட்டாலும் சொல்லாதே…” என்று சூரியிடம் சொல்ல அதற்கு அவர், “நாக சைதன்யா’வே கேட்டாலும் சொல்ல மாட்டேன்..!” என்பது ஆனாலும் சேட்டை… சூரியின் அந்த சிக்ஸ் பேக் ‘ஆஸம்..!”

சிவாவின் அப்பா வேடத்துக்கு நெப்போலியன் பொருத்தம். ஆனால், அவர் கதைக்குள் ஒட்டவேயில்லை. அவர் வாயால் பரம்பரைக் கதையை சொல்லியிருந்தாலாவது அவர் கேரக்டருக்கு நியாயம் இருந்திருக்கும். அதற்காக மு.ராமசாமியின் கேரக்டர் பயன்பட்டிருக்கிறது.

எப்படி இருந்த சிம்ரன் வில்லியாகி விட்டார்..? அவர் கேரக்டரும் கூட சீமராஜாவுடன் நேரடிப் பகை கொண்டிருந்தால் இன்னும் பலமாக இருந்திருக்கும். வில்லன் லாலின் வில்லத்தனங்களும் கூட அவரது நடிப்புத் திறமையின் அளவுக்கு பயமுறுத்தவில்லை.

நான் கடவுள் ராஜேந்திரன், லொள்ளு சபா சாமிநாதன், மனோபாலா எல்லோரும் அங்கங்கே கலகலப்புக்குப் பயன்பட்டிருக்கிறார்கள். யோகிபாபு மேல் இயக்குநருக்கு என்ன கோபம்..? ஒரு பாடல் காட்சியில் மட்டும் அவரைப் பயன்படுத்தியிருக்கிறார்.

முன்பாதிப் படத்துடன் ஒப்பிடுகையில் பின்பாதிப்படம் விறுவிறுப்படைகிறது. அதற்குக் காரணம் கடம்பவேல்ராஜா எபிசோட். அந்த ‘வளரி’ ஆயுதப் பயிற்சியும், ‘வேல்’ வியூகமும் புதுச் செய்திகளாக இருப்பதுடன் ரசிக்கவும் வைக்கின்றன. போர்க்களக் காட்சிகள் முதற்கொண்டு படம் முழுதும் பிரமாண்டம் வியாபிக்கிறது.

அந்த பிரமாண்டத்தை வீணடிக்காமல் படம்பிடித்திருக்கும் பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு அபாரம். பின்னணி இசையில் ஓங்கி ஒலித்திருக்கும் இமான், பாடல்களில் மென்மையாகி ரசிக்க வைக்கிறார். அதில் ‘வாரேன் வாரேனு’ம், ‘வரும்… ஆனா வராது’ம் மாஸ் என்றால்…’மச்சக் கன்னி’ கிளாஸ்…!

சீமராஜா – செம (ட்ரீட்) ராஜா..!