October 10, 2025
  • October 10, 2025
Breaking News
September 23, 2025

சரீரம் திரைப்பட விமர்சனம்

By 0 165 Views

இயற்கையில் நாம் எப்படி படைக்கப்பட்டிருக்கிறோமோ அப்படியே வாழ்வதுதான் சிறந்தது என்ற கருத்தைச்  சொல்லி இருக்கும் படம். இதை ஒரு கோர்ட்டே சொல்லும் அளவுக்கு என்ன நடந்தது என்பதுதான் கதை. 

புதுமுகங்கள் தர்ஷன் பிரியனும், சார்மி விஜயலட்சுமியும் காதலிக்கிறார்கள். சார்மி பணக்கார வீட்டுப் பெண் என்பதால் வழக்கம் போல் இந்த காதலுக்கு எதிர்ப்பு இருக்கிறது. சார்மியின் தந்தை புதுப்பேட்டை சுரேஷ், அவளைத் தன் மனைவியின் தம்பி மனோஜ்க்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். 

எனவே தர்ஷனுடன் வீட்டை விட்டு ஓடிப் போகிறார் சார்மி. வெகுண்டு எழுந்த அவளது மாமன் தர்ஷனை கொலை செய்ய முயல்கிறான். தர்ஷன் இறந்து விட்டதாக நினைத்து சார்மியும் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார். 

இருவரும் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்புகிறார்கள். இனிமேல் சாகக்கூடாது – ஆனால்  எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டும் என்ற நிலையில் ‘ பால் மாறாமல்’ ஒரு வினோத முடிவு எடுக்கிறார்கள். அது ‘பால் மாறுவது’ தான்.

அதாவது தர்ஷன் பெண்ணாகவும் சார்மி ஆணாகவும் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். அதன் மூலம் எப்படி எல்லாம் துன்பங்கள் வந்து சேர்ந்தன, கடைசியில் இந்த பிரச்சனை எப்படிதான் முடிவுக்கு வந்தது என்பது மீதிக் கதை.

தர்ஷனும் சார்மியும் பால் மாறாமல் இருந்தபோது பொருத்தமான ஜோடியாக இருக்கிறார்கள். பால் மாறிப் போகும்போது சார்மி மிகவும் சிறிய உருவத்துடன் இருப்பதால் அவரை ஆணாக பார்ப்பதற்கும், ஓங்குதாங்காக இருக்கும் தர்ஷனை பெண்ணாக பார்ப்பதற்கும் ‘பொருத்தம் இல்லாமல்’ இருக்கிறது.

இந்த கொடூர ஆபரேஷனை செய்யும் டாக்டராக வருகிறார் ஷகீலா. இப்படிப்பட்ட ஆப்ரேஷனை யார் வந்து கேட்டாலும் செய்து விடுவார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

போலீஸ் இன்ஸ்பெக்டராக இயக்குனர் ஜி.வி.பெருமாள் நடித்திருப்பதுடன் படத்தைத் தயாரித்தும் இருக்கிறார். அவரது துணிச்சலுக்கு பாராட்டுகள்.

எடுத்துக்கொண்ட விஷயம் என்னவோ வித்தியாசமானதுதான். ஆனால் அதைக் காரண காரியங்களுடன் லாஜிக் மீறாமல் செய்திருந்தால் இன்னும் ரசித்திருக்க முடியும். தமிழில் குறிப்பிட தகுந்த படமாகவும் இது இருந்திருக்கும். 

திருநங்கைகளைப் பெருமைப்படுத்தும் விதத்தில் இந்தப் படத்தை வரவேற்கலாம். அதுவும் கோர்ட்டில் இவர்களுக்காக வாதாடும் திருநங்கை மிலா மேல் மதிப்பு கூடுகிறது.

ஆனால் ஒரு அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்து கொண்டு திருநங்கைகளை கேவலமாக நடத்தும் மதுமிதாவின் நடவடிக்கை ரசிக்கும்படியாக இல்லை.

இளையராஜாவை முன்மாதிரியாகக் கொண்டு இசையமைத்திருக்கும் பாரதிராஜா அந்தக் காரணத்தாலேயே கவனம் பெறுகிறார்.

கே.டோர்னலா பாஸ்கர், பரணிகுமாரின் ஒளிப்பதிவு நியாயமாக இருக்கிறது.

சரீரம் – ஆபரேஷன் ஷகீலா..!

– வேணுஜி