சந்தானம் என்றாலே காமெடிக்கு கியாரண்டி. ஆனால், அதில் கொஞ்சம் எல்லை மீறிப் போய் கடந்த படத்தில் சிறப்புத் திறனாளியை நக்கல் பண்ணப்போய் நிறைய விமர்சனங்களைப் பெற்றார்.
அதற்கு பிராயச்சித்தமாக இந்தப்படத்தில் அவரே சிறப்புத் திறனா லிளி யாக வந்து காமெடியை தாண்டிய குணச்சித்திர நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு சபா(ஷ்)பதி என்று முதலில் பாராட்டி விடலாம்.
பிறவியில் இருந்தே வாய் திக்குவதால் பல பிரச்சினைகளையும், அவமானங்களையும் சந்திக்கிறார் சபாபதி என்ற சந்தானம். அவருக்கு சிறிய வயதில் இருந்தே ஆதரவான தோழமையுடன் நிற்கிறார் சாவித்திரி என்கிற ப்ரீத்தி வர்மா.
தமிழாசிரியரான சந்தனத்தின் தந்தை எம்எஸ் பாஸ்கர் தான் ஓய்வு பெற்று விட்டதால் மகனை வேலைக்கு போகச் சொல்லி கட்டாயப் படுத்த அவர் செல்லும் நேர்காணல்களில் எல்லாம் அவமானமே அவருக்கு மிஞ்சுகிறது.
இதனால் ஏற்படும் மன உளைச்சலில் ஒரு நாள் மது அருந்திவிட்டு வரும் சந்தானம் ஏகப்பட்ட ரகளை செய்து போதையில் கிடக்க, அவருக்கே தெரியாமல், ஒரு சம்பவம் நடக்கிறது. அதற்குப் பின் அவரை ஆட்டி வைக்கும் விதியின் விளையாட்டை சந்தானம் எப்படி எதிர்கொண்டார் என்பதுதான் கதை.
ஆரம்பத்திலேயே சொன்னது போல் நகைச்சுவையை மட்டும் நம்பாமல், உணர்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்த சந்தானம் முயற்சி செய்திருப்பது அவருக்கான நடிப்புலக வெற்றி. தான் ஏற்ற பாத்திரத்துக்கு நியாயம் செய்வதற்காக அவர் பட்டிருக்கும் கஷ்டங்களும் பாராட்டுக்கு உரியதே.
அவருக்கு அப்பாவாக வரும் எம்.எஸ். பாஸ்கரும் சிறப்பாக நடித்திருக்கிறார் என்பதை சொல்லத் தேவையில்லை. அவரது முகம் ஒரே உணர்ச்சியில் நகைச்சுவையையும், சீரியஸான உணர்வையும் வெளிப்படுத்துவது அவருக்கு கிடைத்த வரம்.
நடிகை பிரீத்தி வர்மாவுக்குத் தமிழில் அறிமுக படம் இது. பளிச்சென்று வரும் மிஸ். வர்மாவுக்கு நடிப்பும் வருமா என்பதை இனிவரும் படங்களில் தான் பார்க்க வேண்டும்.
சந்தானம் படத்தில் அவருடன் புகழ் நடிக்கிறார் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சின்னத்திரையில் அசத்திய புகழுக்கு இந்த பெரிய திரை அறிமுகம் பெரிய வாய்ப்பை கொடுக்காதது சின்ன குறை தான். இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் புகழ் பெறுவார் புகழ் என்பதற்கான அச்சாரம் ஆகியிருக்கிறது இந்த படம்.
வில்லனாக இருக்கும் சாயாஜி ஷிண்டே நடிப்பு வழக்கம்போல்.
சந்தானத்தை வைத்துக்கொண்டு ஒரு நகைச்சுவை தோரணமாக இல்லாமல் ஒரு செய்தியையும் சொல்ல வேண்டும் என்று நினைத்த இயக்குனர் ஸ்ரீனிவாச ராவின் எண்ணம் ஈடேறி இருக்கிறது திரைக்கதையிலும் விறுவிறுப்பை சேர்த்திருந்தால் இன்னும் படத்தை ரசித்திருக்க முடியும்
சாம் சி. எஸ்ஸின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஓகே. பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு பலே போட வைக்கிறது.
காமெடியாக ஒரு கதையைச் சொல்லி காசு பார்த்தோம் என்று இல்லாமல் அதில் ஒரு கருத்தையும் சொன்ன விதத்தில் சபாபதி கவர்கிறார்.