நன்றாக வைத்தார்கள் ரவுடி பிக்சர்ஸ் என்று தங்கள் நிறுவனத்துக்கு பெயர் – நயன்தாரா விக்னேஷ் சிவன் நடத்தும் சினிமா கம்பெனியைத்தான் சொல்கிறோம். பெயரில் என்ன இருக்கிறது… நல்ல படம் எடுத்தால் சரிதான் என்று அவர்கள் எடுத்த படங்களை ஆதரிக்கவே செய்தோம்.
கடைசியாக ‘கூழாங்கல்’ படத்தைக் கையில் எடுத்து அதை ஆஸ்கர் தூரத்துக்கு வீசியதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஆனால், இப்போது அவர்கள் பேனரில் வெளியாகி இருக்கும் ‘ராக்கி’ அவர்கள் கம்பெனிப் பெயரின் பசுத்தோலை உரித்திருக்கிறது.
நாம் சரியான சமுதாய கட்டமைப்பில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என்ற பயத்தையும், பதற்றத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியிருக்கிறது படம். ‘சைக்கோ’ என்ற பெயரில் இந்தப்படத்தை எடுத்திருந்தால் கூட நியாயப்படுத்த முடியாத அளவில் கொடூரங்களை குருதி கொப்புளிக்க காட்சிப்படுத்தி இருக்கிறது ராக்கி.
இந்தப்படத்தின் நோக்கம் என்ன என்பதே முற்றாகப் புரியவில்லை. இலங்கையிலிருந்து போர் நிமித்தம் தமிழ் மண்ணில் தஞ்சமடைந்த தமிழ் இளைஞன் இங்கே குற்றச்செயல்களில் ஈடுபட்டு, ஒரு அன்டர் கிரவுன்ட் தாதாவிடம் வேலை பார்க்க அவர் மகனுக்கும், அவனுக்கும் நடந்த உரசலில் தாதாவின் மகன் அந்த இளைஞனின் தாயைக் கொலை செய்து விடுகிறான். பதிலுக்கு இளைஞன் அந்த தாதாவின் மகனைக் கொலை செய்து விடுகிறான்.
இதில் என்ன தவறு என்கிற அளவுக்கு கொலைகளுக்கு நாம் சினிமாவில் பழக்கப்பட்டு விட்டோம் என்பது ஒரு புறமிருக்க, எப்படிக் கொலை செய்கிறான் என்பதில்தான் ஈரல் குலை நடுங்குகிறது.
ஒரு நாற்காலியில் அவனை அமரவைத்துக் கட்டிப்போட்டு துருப்பிடித்த ஒரு ரம்பத்தை வைத்து அவன் கழுத்தைக் கறகறவென்று இருபது முறைக்கு மேல் அறுப்பது காட்டப்படுகிறது. அதுவும் அவனது தந்தையின் கண்முன்னே நடக்கிறது. அவர் கத்திக் கதறுகிறார். அறுக்கப்படுபவன் வலி அவன் உடலில் நரம்புகள் துடிப்பதன் மூலம் நமக்குக் காட்டப்படுகிறது. அத்துடன் விடாமல் அவன் வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி அவன் கழுத்தில் மாலையாகப் போட்டு விட்டுச் செல்கிறான். இது முழுவதுமாகக் காட்சிப்படுத்தப் படுகிறது. இவன்தான் படத்தின் ஹீரோ.
அதன் காரணமாக ஜெயிலுக்குப் போகிறானாம். 17 வருடங்கள் கழித்து தன் தங்கையைத் தேடி வருபவனைப் பழிவாங்க அந்த தாதா அவன் கண்முன்னே கர்ப்பிணியாக இருக்கும் அவன் தங்கையையும் கொலை செய்கிறார். அவனைக் கொலை செய்தால் அவன் செத்து விடுவான். ஆனால், மகனை இழந்து தவிக்கும் தன் வலி தெரிய அவன் தங்கையை அவன் கண் முன்னே கொல்கிறாராம்.
ஏற்கனவே மிருகமாக… அல்ல… எந்த மிருகமும் இப்படித் திட்டமிட்டு கொடூரக் கொலைகள் செய்யாது. கொடூர சைக்கோவான அவன் தங்கையைக் கொலை செய்தவர்களைக் கொல்கிறான். எப்படி தெரியுமா..? கையில் ஒரு கத்தியும், சுத்தியும் எடுத்துக்கொண்டு போய் அவர்களை கத்தியால் ஒரு புறமும், இன்னொரு புறம் சுத்தியலால் மண்டையில் அடித்து… சுக்கு நூறாக்கி. ஒருமுறை அல்ல… கிட்டத்தட்ட நாற்பது ஐம்பது முறை அவன் எதிரியின் தலையில் கொடூரமாக அடித்து உடைப்பது நமக்குக் காட்டப்படுகிறது. அந்த அடிகளுக்கு ஒரு கான்கிரீட் தூணே உடைந்திருக்கும். மென்மையான மனித மண்டை என்ன ஆகியிருக்கும்..?
கூடவே ஒரு வசனம்… “உன் அம்மா உன்னை ஏன் பெத்தா தெரியுமா..? எங்கிட்ட அடி வாங்கி சாகத்தான்..!”
ஹீரோவே இப்படி என்றால்..? வில்லன் எப்படி இருக்கிறார் தெரியுமா..? ஒரு கட்டத்தில் அவர் மகனுக்கு தண்டனை தர எண்ணுகிறார். அதற்கு தன் ஆட்களை விட்டு அவனை மேசையில் அழுத்திப் பிடிக்க வைத்து அவன் விரலை வெட்டச் சொல்கிறார். ஒருவன் வெட்ட முற்பட… அவனை நிறுத்தும் அவர், நல்ல கத்தியில் வெட்டினால் அவனுக்கு வலி கொஞ்சமாக இருக்கும். துருப்பிடித்த கத்தியை எடுத்து வா… என்று ஒருவனை அனுப்புகிறார். அவனும் எடுத்து வந்து வெட்ட முற்படுகிறான்.
அதேபோல் அந்த வில்லனைச் சந்திக்கும் ஒருவர் அவருக்கு உடன்படாத விஷயத்துக்கு சமரசம் பேசிக் கொண்டிருக்க, அவர்களின் பின்னணியில் ஒருவர் ரோடு ரோலரை முன்னும் பின்னும் ஓட்டிக் கொண்டிருக்கிறார். அதைக் காட்டி அந்த தாதா தரும் விளக்கம்… “நிறைய பிணங்கள் தங்கிடுது. அதையெல்லாம் டிஸ்போஸ் பண்ணக் கஷ்டமா இருக்கு. அதனால அதையெல்லாம் கவர்ல போட்டுக் கட்டி இப்படி ரோடு ரோலரை வச்சு அரைச்சு… அதை மீனுக்குப் போட்டுடறோம்…”
அடுத்த காட்சியில் அந்த ரோடு ரோலரை இயக்கிக் கொண்டிருப்பவர் அந்த சமரசம் பேசிக்கொண்டிருப்பவர் மண்டையில் ஓங்கி ஒரு போடு போட்டு அவரையும் கவரில் கட்டி ரோடு ரோலரில் வைத்து ‘கட முட…’ என்ற சத்தத்துடன் கூழாக்குகிறார். அந்த ரோடு ரோலரைச் சுற்றி நிறைய கவர்கள் அப்படிக் கிடப்பதைக் காட்டுகிறார்கள்.
நாயனுக்கு உதவி செய்த ஒருவரை முக்கிய நரம்பை வெட்டி விட்டு துடிக்கச் செய்யும் அந்த ரோடு ரோலர் பார்ட்டி, வேலை முடிந்ததும் ஒரு பயிற்சி (?) இளைஞனை அழைத்து “அவனை அறுத்துப்போடு…இன்னும் உயிர் போகாததால நடுவில நரம்பு துடிக்கும். பயந்துடாத…” என்று ஆணையிட அவன் ஒரு கத்தியை எடுத்துப்போய் கரகரவென்று கழுத்தை அறுக்க ஆரம்பிக்கிறான். ரோடு ரோலர் பார்ட்டி கையோடு கொண்டு வந்த கவர்களில் அவனைத் தூக்கிப் போய் அரைக்க ரெடி ஆகிறார்.
அந்த ரோடு ரோலர் பார்ட்டி ஒரு கட்டத்தில் வில்லனின் ஆணைப்படி நாயகனைப் பின் தொடர்ந்து வந்து தாக்க, பதிலுக்கு நாயகன் துருப்பிடித்த ஆணியைக் கொண்டு அவன் கண்ணில் குத்தி, அவன் துடிக்கும் நேரம் அவனை இழுத்துப்போய் கார் பேனட்டைத் திறந்து அதில் அவன் கழுத்தை வைத்து ஒரு முறை இரு முறை அல்ல… பத்து இருபது முறை நங் நங்கென்று பேனட்டால் கழுத்தில் அடித்துக் கொல்கிறார்.
அதையெல்லாம் ஐந்து வயது பெண் குழந்தை ஒன்று பார்த்துக்கொண்டிருப்பதாகக் காட்சிப் படுத்தப்படுகிறது.
இதையடுத்து அவனைத்தேடி அந்த தாதாவே ஐம்பது நூறு ஆட்களுடன் வந்து விட, நாயகன் பெரிய சைஸ் ரோலிங் துப்பாக்கியால் படபடவென்று அனைவரையும் சுட்டுத் தள்ளுகிறார். கதை நடக்கும் தனுஷ்கோடி செல்லும் சாலை எங்கும் ஐம்பது அறுபது பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன.
இதுவும் அந்த சிறுமியின் கண் முன்தான். அவள் நாயகனின் சகோதரி மகள். இத்தனைக் கொலைகளையும் செய்து விட்டு இனி தமிழகத்தில் வாழ முடியாதென்று கள்ளத் தோணியில் இலங்கை பயணப்படுகிறான் நாயகன்.
ஒரு இலங்கைத் தமிழனையும், தமிழக மக்களையும் இதைவிடக் கேவலமாகவும், கோரமாகவும் சித்திரிக்கவே முடியாது.
படத்தின் முடிவுக் காட்சியில் அந்த சிறுமியிடம் தகாத செயலில் ஈடுபட நினைத்த ஒரு வயசாளியின் ஆண் உறுப்பை நாயகன் அறுத்துப்போட்டு ரத்த விளாராக ஆகியிருக்க, அந்தக் காட்சியில் ஒரு பேரீச்சம்பழம் விற்பவர், “கொட்டை எடுத்த பேரீச்சம் பழம்…” என்று கூவிக்கொண்டு போகிறார். இத்துடன் படம் முடிகிறது.
நாயகன், முதல் படத்திலேயே கிட்டத்தட்ட சைக்கோவாக அறியப்பட்ட வசந்த் ரவி. அந்த தாதா, இயக்குநர் இமயம் பாரதிராஜா.
இந்தப்படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரனையும் இந்தப் படைப்பில் ஈடுபட்டவர்களையும் கண்டிப்பாக உளவியல் சோதனைக்கு உட்படுத்த முடியும்.
சென்சார் என்ற அமைப்பு உயிர்ப்புடன் இருக்கிறதா..? அவர்கள் பார்த்துதான் இந்தப்படத்தைத் தணிக்கை செய்தார்களா..? பாரபட்சத்துடன் சென்சார் நடந்து கொள்கிறது என்கிற சந்தேகத்தை இன்னொரு முறை கிளப்பி இருக்கிறது ‘ராக்கி.’
கொடூரக் கொலை புரிந்தவனுக்கு ஆதரவாக வழக்காட ஆஜராகும் வக்கீல் போல நயன்தாரா விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் இந்தப்படத்தை ஆவலுடன் வெளியிட்டு, ரத்த வாடையைப் பூசிக் கொண்டிருக்கிறது.
இவர்கள் உள்ளே வந்ததாலேயே இந்தப்படம் விமரிசனங்களுக்கு ஆளாகாமல் தப்பிக்க, முன்னணி மீடியாக்களும், மேற்படி ரத்த சமாச்சாரங்களை எல்லாம் ரோடு ரோலர் கவரில் கட்டி வைத்துவிட்டு “இந்தப்படம் தமிழின் அடுத்த கட்டம்…” எனவும் “இந்தப்படத்தை வேறு மொழியில் எடுத்திருந்தால் கொணடாடி இருப்பார்கள்…” எனவும், “கொலைகளைக் கூட அழகியலுடன் எடுத்திருக்கிறார் இயக்குநர்…” எனவும், “இது ஒரு ஆர்ட் ஃபார்ம்…” எனவும் அவர்கள் ஒருபக்கம் புகழாரம் சூட்டிக் கொண்டிருப்பதுதான் உச்சபட்ச அதிர்ச்சி.
அந்தக் கலைரசிகர்களிடம் ஒரு கேள்வி. உங்கள் குடும்ப உறுப்பினர்களை அழகியலுடன் ஒருவன் கொலை செய்தால் அதைத் தடுப்பீர்களா… ரசிப்பீர்களா..?
சமுதாயத்தின் கடைசிக்கட்ட நம்பிக்கை நீதி மன்றத்தின் முதல் படியாக ஊடகத் துறைதான். ஆனால், முன்னணி சினிமாக் கம்பெனி வெளியிட, அதில் இமயம் நடித்துவிட்ட காரணத்துக்காக, முன்னணி ஊடகங்களும் விலை போய் இப்படிக் கூவுவது அடுத்த தலைமுறைக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என்று தோன்றவில்லையா..?
இந்தப் படத்தைக் கண்ணுறும் இள வயதுக்காரர்களை உளவியல் ரீதியாக மோசமான வன்முறைக்கு இந்தப்படம் இட்டுச் செல்லும் என்பதில் எந்த வித அய்யமும் இல்லை. அதுவும் கொஞ்ச நஞ்ச சைக்கோத் தனத்துடன் இருப்பவர்களுக்கு முழு நம்பிக்கை தந்து விடும் இதைப் போன்ற படங்கள். வழக்கமான சினிமா ரசிகனுக்கும் அடுத்த படத்தில் வழக்கமான கொலையைக் காண நேர்ந்தால் ‘இதெல்லாம் போதாது…’ என்ற வக்கிரத்தையும் கொடுத்துவிடும்.
இந்தப் படத்துக்கு எதிர்மறையான கருத்துகள் தீயாகப் பரவ ஆரம்பித்த நிலையில் “இந்தப்பட இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் நான் நடிக்கவிருக்கிறேன்…” என்று தனுஷ் ஒரு ட்வீட் போட்டு அதை ‘அணைக்க’ முற்படுகிறார். படத்தின் டீமை அழைத்து ரஜினி பாராட்டுவதைப் பகிர்ந்து அமைதியாக இருக்கும் அவரையும் சிக்கலுக்குள் இழுக்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள் சினிமா..?
அடுத்து இயக்குநர் செல்வராகவனை நடிக்க வைத்து இந்த அருண் மாதேஸ்வரன் ஒரு படத்தை எடுத்து முடித்தே விட்டாராம்.
‘இனம்’ என்று ஒரு படம் இங்கே வெளியாக இருந்தபோது அது ஈழத்தமிழர்களுக்கு எதிரான கருத்தைக் கொண்டிருப்பதாக எதிர்த்து அதை வெளியாகாமல் தடுத்து நிறுத்திய இன உணர்வாளர்கள், ஒரு ஈழத்தமிழன் தமிழகத்தில் நிழல் வேலைகள் செய்து அறுபது எழுபது கொலைகளை கொடூரமாகச் செய்து விட்டு இலங்கைக்குத் தப்பி ஓடும் இந்தப்படத்தைக் கண்டார்களா..?
ஈழத் தமிழர்களைப் பற்றிய எத்தகைய மோசமான புரிதலை இந்தப்படம் ஏற்படுத்தும்..?
‘ஃபேமிலிமேன்’ என்ற வெப் தொடர் ஈழப் போராளிகளைப் பற்றிய தவறான செய்தி சொன்னதற்காக உலகத் தமிழர்களை ஒன்றிணைத்துப் போராட்டம் அறிவித்த இயக்குநர் இமயம் பாரதிராஜா, இப்படி ஈழத் தமிழர்களைக் கொலைகாரர்களாகக் கொச்சைப்படுத்தும் ஒரு வன்முறை சொல்லும் படத்தில் நான் நடிக்க மாட்டேன் சொல்லியிருக்க வேண்டாமா..? அவனைத் துரத்தித் துரத்தி வேட்டையாடும் ‘மணிமாறன்’ என்ற தமிழனாக நடிக்க அவர் எப்படி உடன்பட்டார்..?
இதெல்லாம் சினிமாதானே என்றால் இனம் படத்தையும், ஃபேமிலிமேன் தொடரையும் அதே விதத்தில் நியாயப் படுத்தியது போலாகாதா..?
இப்படியான மோசமான செய்தியும், உளவியல் ஊனம் சொல்லும் கொடூரப் படங்களின் மூலம்தான் தமிழ் சினிமா அடுத்த கட்டத்துக்கு நகரும் என்றால் அது வளர்ச்சியல்ல… தமிழ் சமூகத்தின் மாபெரும் வீழ்ச்சி..!
“ஒரு படத்தைப் பார்க்காதீர்கள்…” என்று சொல்வது விமர்சகனின் வேலை அல்ல. ஆனால், “இந்தப்படத்தை… உங்கள் குடும்ப உறுப்பினர்கள்… முக்கியமான வயதுக்கு வந்த பதின்பருவத்தினர் பார்ப்பதற்குத் தடை விதியுங்கள்…” என்று தமிழ்ச் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எவரும் சொல்ல முடியும்.
இல்லாவிட்டால் எத்தனை திறமையான ‘சைலேந்திர பாபு’க்கள் அவதரித்து வந்தாலும் எதிர்கால சமூகத்தில் சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் வைக்க முடியவே முடியாது..!
ராக்கி – ரத்தச் சகதி..!
– வேணுஜி
Related