January 23, 2026
  • January 23, 2026
Breaking News
July 2, 2019

ஆராய்ச்சி மாணவர் அதர்வாவின் காதல் ஆராய்ச்சி

By 0 845 Views
Anupama Parameswaran

Anupama Parameswaran

இன்றைய சினிமாவுலகில் இரு கலைஞர்கள் அடுத்தடுத்து இணைவது என்பது ஆகப் பெரும் அதிசயம். அப்படி இணைவதிலிருந்தே அவர்களின் புரிந்து கொள்ளலை நாம் புரிந்து கொள்ளலாம்.

அப்படி ‘பூமராங்’ படத்தில் இணைந்து ஒரு சமூக விழிப்புணர்வுப் படத்தைக் கொடுத்த ஆர்.கண்ணனும், நாயகன் அதர்வாவும் அடுத்தும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்பதுதான் கோலிவுட்டின் இன்றைய முக்கிய செய்தி.

கடந்த படத்தில் முக்கிய சமுதாயப் பிரச்சினையை முன்வைத்த கண்ணன் இப்போது அதர்வாவுடன் கைகோர்த்து இனிய காதல் கதை ஒன்றைச் சொல்லவிருக்கிறார்.

இது குறித்து இயக்குனர் கண்ணன் கூறும்போது, “பார்வையாளர்களுக்கு இடைவிடாமல் தீவிரமான கதைகளைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறோம், அதில் எனது படங்களும் அடங்கும் என்பதை நான் உணர்ந்தேன். இதிலிருந்து சற்றே விலகி ஒரு காதல் கதையைக் கொடுக்க விரும்பினேன். இதே எண்ணம் அதர்வா முரளிக்கும் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படம் அவரை ஒரு இளமையான கதாபாத்திரத்தில் சித்தரிக்கும். இதில் அவர் பிஎச்டி மாணவராக நடிக்கிறார்.

நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இது குறித்து இயக்குனர் கண்ணன் கூறும்போது, “நாங்கள் உண்மையில் கண்களால் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஒரு நடிகையை விரும்பினோம். அனுபமா அதற்குப் பொருத்தமானவராக இருந்தார்.

படத்தில் பரத நாட்டியத்தில் ஈர்க்கப்பட்ட ஒரு மருத்துவ மாணவியாக நடிக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, அதர்வா மற்றும் அனுபமா இருவரையும் ஒன்றாக ஒரு ஃபிரேமில் கற்பனை செய்து பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கிறது. இந்த படம் குடும்ப உணர்வுகளை கொண்ட ஒரு ஜாலியான படமாக இருக்கும்..!” என்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 முதல் சென்னையில் தொடங்க உள்ளது. மேலும் வெளிநாட்டில் ஒரு பகுதியை படமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

‘96’ படத்தில் காட்சி மொழி மூலம் நம் மனதை ஈர்த்த சண்முக சுந்தரம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதுகிறார். மேலும் முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, இது குறித்த முறையான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனத்திலிருந்து விரைவில் வெளியாகும்.

ஆர்.கண்ணன் எழுதி, இயக்குவதோடு எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இன்னொரு ‘கண்டேன் காதலை’ பட அனுபவத்துக்கு நாம் தயாராகலாம்..!