‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் ஸ்ரீனிதி சாகர் தயாரிக்க, சந்துரு கேஆர் இயக்கியிருக்கும் படம் ‘போதை ஏறி புத்தி மாறி’.
தீரஜ், துஷாரா மற்றும் பிரதாயினி சுர்வா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, கே.பி இசையமைத்திருக்கிறார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
அதில் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் பகிர்ந்து கொண்ட விஷயம் நெகிழ வைத்தது.
“உதயநிதி சார் மூலம் தான் எனக்கு தீரஜ் அறிமுகம். அவர் ஒரு மருத்துவர். என் மனைவி மிகவும் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது உயிரை கொடுத்து காப்பாற்றியவர் தீரஜ். அந்த நன்றிக்கடனுக்கு நான் செய்த படம் தான் இது. இயக்குனர் ஜெட் ஏர்வேஸில் பணிபுரிந்தவர். நல்ல கதையுடன் வந்தார். மிகச்சிறந்த படமாக வந்திருக்கிறது..!” என்றார் அவர்.
தொடர்ந்து நாயகிகளும், நாயகன் தீரஜும் பேசியதிலிருந்து…
“சின்ன வயதில் இருந்தே நடிகையாகும் கனவு மட்டுமே எனக்கு இருந்தது. படத்தில் நான் திரையில் தோன்றும் நேரம் மிகக்குறைவு தான், ஆனாலும் இந்த மாதிரி ஒரு நல்ல படத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது..!” என்றார் நடிகை துஷாரா.
“இதற்கு முன் நான் எந்த கதையையும் கேட்டதே இல்லை. ஏனெனில் நான் சினிமாவில் நடிப்பேன் என நினைத்ததே இல்லை. இயக்குனர் சந்துரு நடிக்க கேட்டபோது, ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்ற உணர்வு ஏற்பட, உடனே ஓகே சொல்லி விட்டேன். மைம் கோபி சாரிடம் கொஞ்சம் நடிப்பு பயிற்சி எடுத்தேன். படப்பிடிப்பு எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. அடுத்து என்ன, அடுத்து என்ன என யோசிக்க வைக்கும் படமாக இருக்கும். எனக்கு பிடித்த மாதிரியே உங்களுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்..!” என்றார் நடிகை பிரதாயினி.
“சிறுவயதில் இருந்தே நடிக்கும் ஆசை எனக்கு இருந்தது. என் ஆசைக்காக நேரம் கிடைக்கும்போது நடிக்க ஆசைப்படுகிறேன். அதே நேரத்தில் நான் படித்த மருத்துவத்தை கை விடாமல், தினமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தான் இருக்கிறேன். ஸ்கூல் பசங்க எல்லாம் சேர்ந்து படம் எடுத்திருக்கோம்னு நண்பர்கள் சொன்னாங்க. எங்களுக்கு ஹெட் மாஸ்டராக இருந்தவர் பாலசுப்ரமணியம் சார் தான். அவர் இல்லையேல் இந்த படம் சாத்தியமாகி இருக்காது, வரும் ஜூலை 12ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது..!” என்றார் நடிகர் தீரஜ்.
இந்த சந்திப்பில் பாடலாசிரியர் முத்தமிழ், நடன இயக்குனர் ஷெரிஃப், நடிகர்கள் அர்ஜூனன், செந்தில், ரோஷன், சரத் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.