இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். இத்தகவலை சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
“சொந்தக் காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியாவுக்குத் திரும்பி உள்ளதால் ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். இந்தச் சமயத்தில் ரெய்னாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் சிஎஸ்கே நிர்வாகம் முழுமையான ஆதரவை வழங்குகிறது… ” என்றார்.
இரு சிஎஸ்கே வீரர்கள் உள்பட 13 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அதன் காரணமாகவே ரெய்னா விலகியுள்ளதாகப் பலராலும் கருத்தப்பட்டு வந்த நிலையில், தன் குடும்பத்தில் நேர்ந்த எதிர்பாராத துயரச் சம்பவம் காரணமாகவே சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
jagran.com இணையத்தளத்தில் வெளியான தகவலின்படி, ரெய்னாவின் அத்தை தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பதான்கோட்டில் உள்ள தரியல் கிராமத்தில் வசித்த வந்த ரெய்னாவின் அத்தை, மாமா ஆகியோர் ஆகஸ்ட் 19 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்கள். வீட்டு மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த இக்குடும்பத்தினரை ஆயுதங்களைக் கொண்டு நள்ளிரவில் சிலர் தாக்கியுள்ளார்கள்.
இதில் ரெய்னாவின் 58 வயது மாமா அசோக் குமார் மரணமடைந்துள்ளார். ரெய்னா தந்தை சகோதரியான ஆஷா தேவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
ரெய்னாவின் சகோதரர்களான 32 வயது கெளசல் குமாரும் 24 வயது அபின் குமாரும் இச்சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இக்கட்டான நிலைமையில் உள்ள குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தகுந்த உதவிகளைச் செய்வதற்காக இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து ரெய்னா விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்வது சாத்தியமில்லை என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.