மும்மதங்களைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் சினிமா அகராதிப்பாடி நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும். அப்படி மேல்நிலை வகுப்பில் படிக்கும் ராம் என்கிற அஜய் அர்னால்டு, அப்துல்லாவாக வரும் அர்ஜுன், ஆண்டனியாக வரும் பூவையார் மூவரும் நண்பர்கள்.
ஆனால், படிக்கும் வயதில் பள்ளிக்கு கட் அடித்துவிட்டு… சினிமாவுக்குப் போகிறார்களா என்று கேட்கிறீர்களா? அது பரவாயில்லையே..? பெரும் பணக்காரர் வேல ராமமூர்த்தியின் பேரனைப் பள்ளியிலிருந்து கடத்தி வெட்டிக் கொல்கிறார்கள்.
அதற்கு ஒரு நியாயம் பின் பாதியில் சொல்லப்படும் என்றாலும் இது கொஞ்சம் ஓவர் என்று நாம் நினைப்பதுடன் முன்பாதி முடிவடைகிறது.
தலைப்பில் கடைசியாக வந்தாலும் நடிப்பில் முதலாவதாக வருகிறார் பூவையார். அவருடன் வரும் சிறுவர்கள் அஜய் அர்னால்டு, அர்ஜுன் இருவரும் கூட கேமரா பதட்டம் இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
படு பாதகக் கொலையைச் செய்துவிட்டு மூவரும் போடுவது ‘கெட்ட ஆட்டம்..!’
ஆனால், அவர்களின் நட்பு நமக்குப் புரியவைக்கப் படும்போது நெகிழ வைக்கிறார்கள்.
எப்படியோ போகும் படத்துக்கு திருப்புமுனையாகிறது சௌந்தரராஜன் பாத்திரம். அவர் தவெக அபிமானி என்பதற்காக அவர் வீட்டில் விஜய் படம் இடம் பெற வேண்டுமா என்ன?
ரவுடியாக இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டராக ஆனதால் லாக் அப்புக்குள் சென்று சிந்திக்கும் சாய் தீனா, எந்நேரமும் ரத்தம் பட்ட கத்தியைக் கழுவும் வேல ராமமூர்த்தியுடன் தலைவாசல் விஜய், சாம்ஸ், கிச்சா ரவி, வினோதினி வைத்யநாதன், ஹரிதா, ரமா உள்ளிட்டோர் பிற பாத்திரங்களை நிரப்புகிறார்கள்.
இசையமைப்பாளர் டி.ஆர்.கிருஷ்ண சேட்டன் இசையில் பாடல்கள் ஓகே. ஆனால், பின்னணி இசை அநியாயத்துக்கு ஓவர். எதற்குதான் பதற்றப் படுத்த வேண்டும் என்பதற்கு எல்லை இல்லையா..? எல்.கே.விஜயின் ஒளிப்பதிவும் ஓகே ரகம்.
எழுதி இயக்கியிருக்கும் ஜெயவேல், திரைத்துறைக்கு சம்பந்தம் இல்லாதவர். ஆனாலும் சினிமா ரசிகராக இருந்து பரபரப்பான ஒரு படத்தை இயக்கி, சமூகத்துக்கு செய்தியும் சொல்லி முடித்திருப்பதில் கவனம் பெறுகிறார்.
ராம் அப்துல்லா ஆண்டனி – ரத்தமும் கண்ணீரும்..!
– வேணுஜி