October 17, 2025
  • October 17, 2025
Breaking News
May 14, 2019

ராகவா லாரன்ஸ் முன்னெடுத்துள்ள தாய் அமைப்பு

By 0 887 Views

தன் அன்னைக்கு கோவில் கட்டியதோடு, கடந்த அன்னையர் தினத்தன்று ‘தாய் அமைப்பு’ என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய தெய்வங்களைக் காக்கும் பொருட்டு சில பலமான முன்னெடுப்புகளை துவங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

அதைப்போலவே தன்னை நாடி வரும் மக்களுக்கு மட்டும் அல்லாமல் தான் தேடிச் சென்றும் நல்லுதவி செய்வதற்காக தற்போது ராகவா லாரன்ஸ் ஒரு திட்டத்தையும் வகுத்திருக்கிறாராம். 

இதைப்பற்றி ராகவா லாரன்ஸ் கூறும்போது,

“என்னுடைய ஒவ்வொரு படிகளுக்கும் அடிநாதமாக இருப்பது இளைஞர்கள் தாய்மார்கள் அடங்கிய ரசிகர்களும் முக்கியமாக குழந்தைகளும்தான். அவர்களுக்கு வெறும் நன்றி சொல்வதோடு என் கடமை முடிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஒவ்வொரு முயற்சிகளாக செய்து வருகிறேன். தற்போது ‘தாய் அமைப்பு’ ஒன்றை நிறுவி இருக்கிறோம்.

Raghava Lawrence

Raghava Lawrence

மக்களுக்கு சேவை செய்ய இனி எனது ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்குப் பிறகும் 15-நாட்கள் மக்களை நேரடியாக சந்திக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். காஞ்சனா சீரிஸ் படங்கள் தொடர்ந்து 100 கோடிகளுக்கும் மேல் வசூல் குவிக்கிறது என்றால் அதற்கு குழந்தைகள்தான் பெரிய காரணம்.

அதனால் இந்த சேவையை குழந்தைகளிடம் இருந்தே துவங்க விருப்படுகிறேன். குடும்பச் சூழல் காரணமாக கல்வி கிடைக்கப் பெறாத குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நோக்கம். மேலும் பல நல்ல யோசனைகள் உள்ளன. அவை அனைத்தையும் நடைமுறைப் படுத்த நல்லோர்கள் வாழ்த்தும் ஆண்டவன் அருளும் கிடைக்கும் என்று நம்புகிறேன்..!” என்றார்.

இதன் துவக்கமாக கஜா புயலால் வீட்டை இழந்த சமூக சேவகர் கணேசனுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டி அதன் கிரகபிரவேசத்தை இன்று நேரில் சென்று நடத்தியுள்ளார் லாரன்ஸ். 

லாரன்ஸின் நல்ல மனம் வாழ்க..!