தமிழ் சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிக்களுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ராதாரவி தலைவராக இருந்து வருகிறார்.
அவருடைய பதவிக் காலம் பிப்ரவரி 15-ம் தேதி முடிவடைய உள்ளதால், சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் 2020 -2022 க்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இம்முறையும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ராதாரவி. அவரை எதிர்த்து ‘ராமராஜ்யம்’ என்ற அணி சார்பில் பாடகி சின்மயி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
சங்கத்திலிருந்து சின்மயியை நீக்கியது தொடர்பாக ராதாரவி மற்றும் சின்மயி இருவருக்குமே மோதல் ஏற்பட்டு வந்துள்ள நிலையில் ராதாரவிக்கு எதிராக சின்மயி களமிறங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜனவரி 30ஆம் தேதி டப்பிங் யூனியனுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த சின்மயிக்கும், ராதாரவியின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இதனால், அங்கிருந்த காவல்துறையினர் அவர்களைச் சமாதானப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து சின்மயி அவரது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் யூனியன் தலைவர் பதவிக்கு நடிகர் நாசர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மேலும் நாசர், சின்மயி இருவரும் ராதாரவியை வீழ்த்துவதற்கான வேலைகளில் சங்க உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து வருவதாக ஒரு செய்தி.
‘நிர்வாக திறமையின்மை காரணமாக விஷாலும், நாசரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தையும், நடிகர் சங்கத்தையும் அரசு கட்டுப்பாட்டில் செல்ல வழிவகுத்த நிலையில், விஷால் ஆலோசணையின் படி வந்துள்ள நாசர் அணி டப்பிங் சங்கத்தையும் அரசு கட்டுப்பாட்டில் செல்ல வழிவகுத்து விடுவார்.
எனவே சங்கத்தை பாதுகாக்க எங்கள் அணியை வெற்றி பெற செய்யுங்கள்’ என ராதாரவி அணி தேர்தலை சந்திக்க உள்ளதாம்.