April 26, 2024
  • April 26, 2024
Breaking News
September 23, 2021

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரை விமர்சனம்

By 0 459 Views

தரமான படங்களை மட்டுமே தருவது என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கி வரும் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மென்ட் தயாரித்த படம் என்பதே தரச்சான்றிதழ் ஆகிப்போகிறது.

கிராமத்து வாழ்வில் மாடுகள் தெய்வத்துக்கு ஒப்பானவை. அப்படி தன் திருமணத்துக்கு சீதனமாக வந்த இரண்டு காளை மாடுகளை தான் பெற்ற பிள்ளைகளைப் போலவே வளர்த்து வருகிறார் அறிமுக நாயகன் மிதுன் மாணிக்கம்.

எதிர்பாராமல் அவரது திருமணம் அமைந்து போக, ஒரு திடீர் பொழுதில் அவரது கைப்பிடிக்கிறார் ரம்யா பாண்டியன். அவர் ஆசையாக வளர்த்த காளைகளைத்தான் மகளோடு மிதுன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் அவரது தந்தை.

மாடுகளுக்கு வழக்கமாக அடிக்கும் லாடத்தைக் கூட அவற்றுக்கு வலிக்கும் என்று அடிக்க விடாமல் அடம்பிடிக்கும் அளவுக்கு இருக்கிறார் மிதுன். அதற்கும் மேல் குழந்தை கூடப் பெற்றுக் கொள்ளாமல் மாடுகளையே குழந்தைகள் போல இருவரும் வளர்க்க அந்த மாடுகள் ஒருநாள் காணாமல் போகின்றன. அவற்றை மிதுன் தேடிக் கண்டுபிடித்தாரா என்பதுதான் மீதிக் கதை

இந்தச் சிறிய லைனை வைத்துக்கொண்டு இரண்டு மணிநேரம் சலிப்பு ஏற்படுத்தாமல் படம் எடுப்பது பெரிய விஷயம். அத்துடன் இந்தக் கதைக்குள் சமூகப் பொறுப்புடன் தவறு செய்வது ஒன்றிய அரசே ஆனாலும் அதை இடித்துரைத்து இருப்பதும் இயக்குநர் அரசில் மூர்த்தியின் பொறுப்பையும், தைரியத்தையும் காட்டுகிறது.

முதல் படத்திலேயே ஒப்பனை இட்டுக்கொள்ள இயலாத இயல்புடன் மிதுன் மாணிக்கம் வருவதை வரவேற்கலாம் . அப்படியே ஒரு கிராமத்து இளைஞனின் வெள்ளந்தி குணம், யோசிக்காமல் எதையும் செய்யும் மனம் என்று கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.

மாடுகளைத் தாக்கினால் மந்திரியே ஆனாலும் எதிர்த் தாக்குதல் நடத்தும் வீரியத்தில் மிளிர்கிறார்.

திரையில் ரம்யா பாண்டியன் தோன்றியதும் தியேட்டரே அல்லோல கல்லோலப் படுகிறது. அதற்குக் காரணம் அவர் சமூக வலை தளத்தில் ஏற்படுத்தி வரும் பரபரப்பு. அதற்குத் தீனி போடும் ஒரு வேடம் அவருக்கு இதுவரை கிடைக்காதது அவரது துரதிர்ஷ்டம் தான். ஆனாலும் கிடைக்கும் இதைப் போன்ற கிராமத்து வேடங்களில் டிகிளாமரைஸ் செய்து கொண்டு கிராம தேவதையாகவே வருகிறார்.

தொலைக்காட்சி செய்தியாளராக வரும் வாணி போஜனும் அற்புதத் தேர்வு. அவர் கதைக்குள் வந்ததும்தான் படமே சூடு பிடிக்கிறது. ஒரு கிராமத்தில் மாடு காணாமல் போகும் சராசரி நிகழ்வுக்குள் அரசியல் குறுக்கீடு இருப்பதை ஆராய்ந்து அதை மாநிலம் தழுவிய பிரச்சினையாக மாற்றுவதில் மீடியா பவரைக் காண்பிக்கிறார்.

அதே சமயம் இன்றைய மீடியா முதலாளிகள் அனேகர் கார்ப்பரேட் கைக்கூலிகளாக மாறிப்போய் பரபரப்புக்கு மட்டுமே மீடியா பவரைப் பயன்படுத்துவதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

அப்படி வேலையைத் தூக்கி எறிந்து விட்டு யூடியூப் வழியாக பிரச்சினைக்கு தீர்வு காணும் வாணி போஜனின் செயல் பாராட்ட வைக்கிறது.

மாநில அரசியல் தொட்டு ஒன்றிய அரசு வரை விரவி இருக்கும் திட்ட தில்லு முல்லுகளை தோலுரிக்கும் அரிசில் மூர்த்திக்கு அடுத்து பெரிய படங்கள் காத்திருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். கல்வியும், அரசின் திட்டங்களும் எட்டாத குக்கிராமங்களில் கூட இந்தியின் ஆதிக்கம் பெருகி வருவதைக் காட்டுவது சரியான சூடு.

படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் நேர்த்தியாக படைக்கப்பட்டும் நடிக்கப்பட்டும் இருக்கிறது. குறிப்பாக தனி ஒருவனாக குளத்தைத் தூர் வாரும் முதியவர் நெகிழ வைக்கிறார்.

குறைகள் என்று பார்த்தால் முன்பாதிப் படத்தில் மாடுகள் மீதான மிதுனின் பாசத்தைக் காட்ட அடுத்தடுத்து வரும் ஒன்று போலான காட்சிகள்  படத்தின் வேகத்தைக் கொஞ்சம் குறைக்கின்றன. மாடுகளின் காதில் அடையாள வில்லை அடிப்பதையே பொறுத்துக்கொள்ள முடியாத மிதுன் மாடுகளுக்கு காயடிப்பதை எப்படி ஏற்றுக் கொள்கிறார் என்பதும் புரியவில்லை.

சுகுமாரின் ஒளிப்பதிவு அபாரம். பாடல்களுக்கான கிருஷ்ஷின் இசை மற்றும் பின்னணி இசை நேர்த்தியாக இருக்கிறது.

மாடுகளை ஓட்ட நினைத்த இயக்குனர் ஏன் கடைசியில் அண்ணன் சீமானையும் ஓட்டி இருக்கிறார் என்பது புரியவில்லை.

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் – மண்ணுக்கான மகிழ்ச்சிப் படம்..!

– வேணுஜி