August 8, 2022
  • August 8, 2022
Breaking News
September 24, 2021

சூ மந்திரக்காளி திரை விமர்சனம்

By 0 132 Views

தலைப்பை பார்த்தவுடனேயே புரிகிறது அல்லவா, இது ஒரு மந்திரவாதக் கதை என்று. ஆனால் அதனை சீரியஸாக சொல்லாமல் சிரிப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு கற்பனை கிராமத்தில் வாழ்பவர்கள் அனைவரும் பங்காளிகள். இருந்தாலும் ஒருவர் மேல் ஒருவர் பொறாமை குணம் கொண்டவர்கள். யாராவது நன்றாக வாழ்ந்தால் இன்னொருவர் கெடுத்து விடுவார்.

படத்தில் ஒருவருடைய வீடு பற்றி எரிகிறது. அதை அணைக்க முயல்வது போல் ஒவ்வொருவரும் நடிக்கிறார்களே அன்றி ஒருவருக்கும் அதை அணைப்பதற்கு மனது கிடையாது. கடைசியில் அந்த வீடு எரிந்து சாம்பலாகிப் போக மற்றவர்கள் திருப்தி அடைகிறார்கள்.

இந்த ஊர் மனிதர்களை திருத்த எண்ணம் கொண்ட கதாநாயகன் அந்த வழக்கத்தில் இருந்து ஊர் மக்களைத் திருத்த பக்கத்து ஊருக்கு சென்று மாந்திரீகம் தெரிந்த ஒருவரை அழைத்துவர முயற்சிக்கிறான்.

அந்த ஊர் இதைவிட மோசம். அங்கிருக்கும் எல்லோருமே மந்திரவாத வித்தை தெரிந்தவர்கள். ஆனால் ஒரு காதல் ஜோடியின் சாபத்தால் அந்த ஊரில் ஒருவருக்கும் கர்ப்பம் தரிக்காமல் இருக்கிறது. அந்த சாபம் தீர வேண்டுமானால் ஒரு ஜோடி காதலர்களை அவர்கள் சேர்த்து வைக்க வேண்டும்.

இந்த உபாயத்தை வைத்து ஹீரோ தன் நண்பன் ஒருவனுக்கு பெண் வேடம் போட்டு தங்களை காதலர்களாக அந்த ஊரில் அறிமுகப்படுத்திக்கொண்டு அடைக்கலம் ஆகிறான். அங்கே பழகி அங்கிருக்கும் யாராவது ஒரு மந்திரவாதியை தன்னுடைய ஊருக்கு அழைத்துப் போவது அவன் திட்டம். ஆனால் அந்த ஊரைவிட்டு ஒருவரும் வர மறுக்கிறார்கள்.

இந்நிலையில் அந்த ஊரில் அழகான பெண் ஒருத்தி மந்திரவாதம் புரிய அவளைக் காதலித்து அதன் காரணமாக அவளைத் தன் ஊருக்கு அழைத்து வர முயற்சிக்கிறான் நாயகன். காதல் என்றாலே வெறுக்கும் அவளை நாயகனால் காதலில் வீழ்த்த முடிந்ததா என்பது மீதிக் கதை.

நாயகனாக கார்த்திகேயன் வேலு. இயல்பான இளைஞனாகத் தெரிகிறார். அவரை முருகன் அவதாரம் என்று மென்டல் பூசாரி அவிழ்த்துவிட, அதை வைத்து அவர் மீது நாயகிக்குக் காதல் அரும்புவது நல நகைச்சுவை. தாயத்து ஒட்டப்பட வீரனாக மாறுவதும், அதை முருகன் அவதார லீலையாகவே நாயகி பார்ப்பதும் கூட ரசிக்க வைக்கிறது.

ஸ்ரீதிவ்யாவை நினைக்க வைக்கும் நாயகி சஞ்சனா புர்லி அழகாக இருக்கிறார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்தால் தமிழில் ஒரு ரவுண்டு வரலாம். 

நாயகனின் நண்பனாக படம் முழுவதும் பெண்ணாகவே வருபவரும் ரசிக்க வைக்கிறார். மந்திரவாத ஊருக்குள் திருட வந்து அங்கேயே மாட்டிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் திருடன் கேரக்டரும் ரசிக்க வைக்கிறது. எல்லா மந்திர வாதங்களும் தெரிந்த அவர்களுக்கு ஒரு ஆண்தான் பெண்ணாக மாறி வந்திருக்கிறான் என்ற உண்மை மட்டும் தெரியவில்லையா என்று நாம் நினைக்க அதை ஒருவர் கண்டுபிடித்துவிட…வசமாக மாட்டிக்கொண்டார்கள் என்று நினைத்தால் அவரோ என்னைப் பார்த்ததை யாரிடமும் சொல்லி விடாதீர்கள். என்னை ஊரை விட்டுத் தள்ளி வைத்திருக்கிறார்கள்…” என்பதும் இன்னும் காமெடி.

ஸ்கிரிப்ட் வரையில் ஓகே. ஆனால், அதற்கான பட்ஜெட் மட்டும் கிடைத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக்கி இருக்க முடியும் இயக்குநர் ஈஸ்வர் கொற்றவையால். பட்ஜெட்டுக்குத் தோதாக உழைத்திருக்கிறார்கள் இசையமைப்பாளர்கள் சதிஷ் ரகுநாதன் – நவிப் முருகன் மற்றும் ஒளிப்பதிவாளர் முகம்மது பரான்.

எதையும் எதிர்பார்க்காமல் போனால், ஏமாறாமல் வரலாம்..!