October 22, 2021
  • October 22, 2021
Breaking News
September 24, 2021

ஜங்கிள் குரூஸ் ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்

By 0 68 Views

படத்தின் பெயரே சொல்கிறதல்லவா..? இது ஒரு ‘ஜாலி அட்வெஞ்சர் ரைடு’தான் என்பதை. அப்படி டிஸ்னியின் தீம் பார்க்கில் இருக்கும் ஜங்கிள் குரூஸை வைத்து ஒரு ஆக்ஷன் விருந்தையே படைத்து விட்டார்கள் டிஸ்னியின் இந்தப் படைப்பில்.

ஒரே ஒரு லைன்தான் கதை. வழக்கமாக ஒரு புதையலைத்தேடி ஒரு நாயகன் போவான். கூடவே ஒரு வில்லனும் போவான். ஹீரோ எல்லா சாகசங்களையும் செய்து புதையலை அடையும் நேரம் வில்லன் குரூப் உள்ளே வந்து “ஹேன்ட்ஸ் அப்” சொல்லி புதையலை அடைய நினைக்கும் நேரம் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் வந்து புதையல் யாருக்கும் கிடைக்காமல் போக, ஆனால், அதன் நன்மை மட்டும் ஹீரோவுக்குக் கிடைக்கும் என்பதாக இருக்கும்.

அதே கதை. ஆனால், சுவாரஸ்யமான திரைக்கதை எழுதி, கதையை கொஞ்சம் அப்படி இப்படி மாற்றி அருமையாக ஒரு விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர் ஜாமி கொலேட் சேரா. திரைக்கதையை மைக்கேல் கிரீன், கிலென் பிக்காரா மற்றும் ஜான் ரெகுவா எழுதியிருக்கிறார்கள்.

கதையில் செய்த மாற்றங்கள், இதில் புதையல் இல்லை. பதிலுக்கு ஒரு அரிய மருந்து. அந்த மருந்து கையில் இருந்தால் மரணத்தை வெல்லலாம். அதை வைத்து அற்புதங்கள் படைக்க முயலும் நாயகி. ஆனால், அதே மருந்தை வைத்து சந்தைப்படுத்தி உலகைக் கைக்குள் வைக்க விரும்பும் வில்லன் என்று போகிறது கதை. 

அப்படியானால் ஹீரோவுக்கு என்ன வேலை என்கிறீர்களா..? ஒரு நாயகியால் எல்லா சாகசங்களையும் செய்ய முடியாதே..? அதனால் அவளுக்கு ஒரு டிரைவராக… அதாவது இந்த அரிய மருந்து அமேஸான் காட்டுக்குள்தான் கிடைக்கும் என்பதால் ஆபத்தான அமேஸான் நதியில் பயணம் செய்ய ஒரு படகும் மாலுமியும் தேவைப்பட, அப்படி உள்ளே வருகிறார் ஹீரோ. ஆனால், ஹீரோதான் அனைத்தையும் செய்து முடிப்பார் என்று சொல்லத் தேவையில்லைதானே..?

ஹீரோவாக ராக் ஸ்டார் ட்வைன் ஜான்ஸன். அந்த மலை உடல் நாயகனுக்கு சொந்தமாக ஒரு பழைய படகு இருக்க, அங்கே டூர் அடிக்க வரும் பயணிகளுக்கு படகை ஓட்டி காசு பார்த்து படகுக்கு வாங்கிய காசுக்கு வட்டியெல்லாம் கட்டிக் கொண்டிருக்கிறார். அவர் அடிக்கும் ஜோக்குகளுக்கு நாம் சிரிக்க, பயணிகள் ஒருவரும் சிரிக்காமல் இருப்பதே சிரிப்புதான். நம்மூர் ஹீரோக்கள் போலவே ஜான்ஸனும் துட்டுக்காக எல்லா டகால்ட்டி வேலைகளும் செய்ய, அசைன்மென்ட்டோடு வருகிறார் நாயகி எமிலி ப்ளன்ட். அவருடன் அவரது தம்பியாக ஜேக் ஒயிட்டால். வில்லனாக ஜெஸ்ஸி ப்ளேமான்ஸ்.

தக்கைப் படகு, ஜான்ஸனின் மொக்கை ஜோக் என்று வெறுப்புடன் பயணம் கிளம்பும் எமிலிக்குப் போகப் போக ஜான்ஸன் மீது மதிப்பும், ஒரு கட்டத்தில்… அதேதான்… காதலும் வருவது ஹாலிவுட் கிக். ஆனால், அது தமிழ்ப்படம் போல நான்காவது ரீலிலேயே வந்து விடவில்லை.

அந்த அரிய மருந்தின் பெயர் ‘நிலவின் கண்ணீர்’. ஒரு வறண்ட மரம் குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நாழிகையில் நிலவு வந்து செல்லும் சில கணங்களில் பூக்கும்போது அதன் மலர்களைப் பறித்து விட வேண்டும். அது தரும் மருந்துதான் நிலவின் கண்ணீர். ஆனால், மரத்தைப் பூக்க வைக்க ஒரு கீ இருக்கிறது. அதை செயல்படுத்தவும் வேண்டும். 

இப்படிப் போகிற கதையில் வழியெல்லாம் ஆபத்துகளும், ஆச்சரியங்களும். நாம் நன்றாக அறிந்து வைத்திருக்கும் நன்மை பயக்கும் டால்பின்களை இதில் அபசகுன விலங்கு ஆக்கியிருக்கிறார்கள். அதன் கண்களைப் பார்த்தால் இரவில் கெட்ட சொப்பனம் வருமாம்.

ஆனால், ஹோட்டலுக்குள் சிறுத்தை வருவதும், நரமாமிச காட்டுவாசிகள் கையில் இந்த டீம் சிக்கிக் கொள்வதும் உண்மையிலேயே எப்படித் தப்பப் போகிறார்கள் என்று எண்ண வைத்து எல்லா மேட்டர்களையும் எளிதாக்கி ரசிக்க வைக்கிறார்கள்.

ப்ளேவியோ லேவியானோவின் ஒளிப்பதிவை சொல்லவே வேண்டாம். பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதை பரபரப்புக்குள்ளாக்குகிறது ஜேம்ஸ் நியூட்டன் ஹோவார்டின் பின்னணி இசை. இதுபோல் நம் இசையமைப்பாளர்களால் ஏன் இசைக்க முடியவில்லை என்ற வினா படம் முழுவதும் எழுந்து கொண்டே இருக்கிறது.

இந்த மருந்துக்கு அலையும் கதையில் மருந்துக்குக் கூட கவர்ச்சி இல்லை என்பது ஆச்சரிய விஷயம். அதனால், குழந்தைகளின் கண்ணைப் பொத்தாமல் முழுப்படத்தையும் ரசிக்க முடியும். இந்தப்படம் தமிழ் பேசியும் வருவதால் முழ்மையாக ரசிக்க முடியும். 

ஐந்து தமிழ்ப்படம் பார்ப்பதும் சரி. இப்படி ஒரு ஆங்கிலப்படம் பார்ப்பதும் சரி. ஆனால், கிராபிக்ஸ் சூழ் சினிமா, இப்போது கம்ப்யூட்டர் கேம்ஸ் போல ஆகி விட்டதையும் மறுப்பதற்கில்லை.

அதேபோல் அமேஸான் காட்டுக்குள் மட்டும் கிடைக்கும் இந்த அரிய மருந்து இந்தக் காலத்தில் அமேஸானில் ஆர்டர் செய்தாலும் கிடைக்கலாம்..!