கிராமத்து இளைஞரராக ஒரு முகமும், நகரத்து குடும்பத் தலைவராக இரண்டு முகங்களில் நடித்திருக்கும் நாயகன் கதிர், பாத்திரத்தின் கணம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
கிராமத்து எளிமையும், இயல்பும், அழகுமாக வருகிறார் நாயகி மியா ஸ்ரீ.
இதுவரை ஏற்காத வேடமாக நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் போஸ் வெங்கட்டின் நடிப்பு அருமை. மகனைப் படிக்க வைப்பது மட்டுமல்லாமல், சொத்துகளை விற்று பேரனை யும் படிக்க வைப்பதில் அவரது பாசம் நெகிழ வைக்கிறது.
ஊருக்கே சோறு போட்ட நாம இப்போ அரிஷிக்காக ரேஷன் கடை லைன்ல நிக்கிறேன் எனும்போது கலங்கவும் வைக்கிறார்.
அவரது மனைவியாக வரும் ஶ்ரீ ரஞ்சனிக்கும் இதுவரை ஏற்காத கிராமத்துத் தாய் வேடம். மகன் மீதான பாசத்தில் உணர்வு மேலிட நடித்திருக்கிறார்.
இவர்களுடன் சங்கிலி முருகன், இளவரசு, ஒய்.எஸ்.டி.சேகர், சூசன், சிவக்குமார் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் பாத்திரங்களில் பொருந்தி இருக்கிறார்கள்.
சாணக்யாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மண் மணத்தோடு ஒலிக்கிறது.
பச்சைப் பசேல் கிராமத்துக் கதையாக இருந்தாலும் வெம்மையுடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விஜய் மோகன்,
நல்ல கதை எடுபடும் என்ற நம்பிக்கையில் எழுதி இயக்கியிருக்கும் ஜி.கிருஷ்ணன் இயன்றவரை அதைக் கமர்ஷியலாக சொல்ல முடிவெடுத்திருக்கிறார். அத்துடன் விவசாயத்தின் பெருமையையும் உயர்த்திப் பிடித்திருக்கிறார்.
பூர்வீகத்தை மறக்கக்கூடாது என்று சொல்லி இருப்பதுடன், பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டுமேன்றும் சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது.
பாடம் சொல்வதை படம் பார்க்க வருபவர்கள் ஒத்துக் கொள்வார்களா..? என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.
பூர்வீகம் – உபதேசம்..!