February 16, 2025
  • February 16, 2025
Breaking News
January 22, 2025

பூர்வீகம் திரைப்பட விமர்சனம்

By 0 64 Views

இக்கரைக்கு அக்கரை பச்சை என்கிற ஆதிகால பழமொழி தான் கதைக்களம். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டு, மாறிவரும் கால சூழலில் தன் மகன் கதிர், விவசாயம் பார்க்க வேண்டாம்… நகரத்துக்குச் சென்று படித்து பெரிய அதிகாரியாக வேண்டும் என்று ஆசைப்படும் கிராமத்து பெரியவர் போஸ் வெங்கட், அதன்படி செயல்பட, அதன் விளைவு என்ன ஆனது என்பதே கதை.

கிராமத்து இளைஞரராக ஒரு முகத்தில் தந்தையின் ஆசைப்படி நடந்தும் தாய் தந்தையரை கவனிக்க முடியவில்லை என்ற ஆதங்கத்துடனும், நகரத்து குடும்பத் தலைவராக எல்லாம் இருந்தும் அடங்காத மனைவியும் பிள்ளையும் தரும் துன்பங்களுடனும்… ஆக, இரண்டு முகங்களில்  நடித்திருக்கும் நாயகன் கதிர், பாத்திரத்தின் கனம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

கிராமத்து எளிமையும், இயல்பும், அழகுமாக வருகிறார் நாயகி மியா ஸ்ரீ. 

இதுவரை ஏற்காத வேடமாக நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் போஸ் வெங்கட்டின் வயோதிக நடிப்பு அருமை. மகனைப் படிக்க வைப்பது மட்டுமல்லாமல், சொத்துகளை விற்றுப் பேரனையும் படிக்க வைப்பதில் அவரது பாசம் நெகிழ வைக்கிறது.

“ஊருக்கே சோறு போட்டது போய் இப்போ அரிசிக்காக  ரேஷன் கடை லைன்ல நிக்கிறேன்…” எனும்போது கலங்கவும் வைக்கிறார்.

அவரது மனைவியாக வரும் ஶ்ரீ ரஞ்சனிக்கும் இதுவரை ஏற்காத கிராமத்துத் தாய் வேடம். மகன் மீதான பாசத்தில் உணர்வு மேலிட நடித்திருக்கிறார்.

இவர்களுடன் சங்கிலி முருகன், இளவரசு, ஒய்.எஸ்.டி.சேகர், சூசன், சிவக்குமார் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் பாத்திரங்களில் பொருந்தி இருக்கிறார்கள்.

சாணக்யாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மண் மணத்தோடு ஒலிக்கிறது.

பச்சைப் பசேல் கிராமத்துக் கதையாக இருந்தாலும் கதையின் தன்மைக்கேற்ப வெம்மையுடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விஜய் மோகன், 

நல்ல கதை எடுபடும் என்ற நம்பிக்கையில் எழுதி இயக்கியிருக்கும் ஜி.கிருஷ்ணன் இயன்றவரை அதைக் கமர்ஷியலாக சொல்ல முயற்சித்திருக்கிறார். அத்துடன் விவசாயத்தின் பெருமையையும் உயர்த்திப் பிடித்திருக்கிறார்.

பூர்வீகத்தை மறக்கக்கூடாது என்று சொல்லி இருப்பதுடன், பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டுமென்றும்  சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது.

பாடம் சொல்வதை படம் பார்க்க வருபவர்கள் ஒத்துக் கொள்வார்களா..? என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.

பூர்வீகம் – உருப்படியான உபதேசம்..!

– வேணுஜி