வாரா வாரம் ஐந்து வருடங்கள் என்று ஐந்து தொகுதிகளாக விரிந்து பரந்த கடலாக இருந்த கல்கியின் பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களுமாக சேர்த்து ஆறு மணி நேரத்துக்குள் கொடுக்க வேண்டும் என்பது அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டும் சாதனைதான்.
அதை இயக்குனர் மணிரத்னம் சாதித்துக் காட்டியிருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.
இதில் இருந்த நெருக்கடிகள்…
1. கல்கியின் கதையை அப்படியே எடுத்தால் எழுதியது போலவே எடுப்பதற்கு மணிரத்தினம் எதற்கு என்பார்கள். மாற்றி எடுத்தால் எழுதியதை விட்டுவிட்டு எதையோ எடுத்து இருக்கிறார் என்பார்கள். எப்படி எடுத்தாலும் யாரோ சிலருக்குப் பிடிக்காமல் போகும்.
2. பாத்திரங்களுக்கு மிகப் பொருத்தமான புதுமுகங்களை வைத்து எடுத்தால் டிவி சீரியல் போலாகும். பட்ஜெட் கிடைக்காது.
3. பெரிய ஸ்டார்களை உள்ளே கொண்டு வந்தால் பட்ஜெட் கிடைக்கும். ஆனால் அவர்களது தேதிகளை ஒதுக்குவதில் படு சிரமம் ஏற்படும். தங்கள் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்று அவரது ரசிகர்கள் சாடுவார்கள்.
4. கதை நடந்த காலகட்டத்திற்கு ஏதுவாக அரங்கம், இசை இவை எல்லாம் அமைந்தால் இளைஞர்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது. (பெரிசுகள் பாராட்டினாலும் ஒரு தடவை பார்த்து விட்டு ஓய்ந்து விடுவார்கள்).
அத்துடன் பெரிய பட்ஜெட்டைக் கையில் வாங்கிக் கொண்டு ‘ சுத்தி ‘ விட்டார் என்பார்கள்.
5. பரபரவென்று கதை சொன்னால் ஒன்றும் புரியவில்லை என்பார்கள். புரியும்படி கதை சொன்னால் நத்தை வேகத்தில் கதை நகர்கிறது என்பார்கள்.
6. எப்படியும் கையில் வாங்கிய பட்ஜெட்டுக்கு மேல் வசூல் ஆகி தயாரிப்பாளர் கையைக் கடிக்காமல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் படம் படுதோல்வி என்று கூவுவதற்கு ஒரு கூட்டமே தயாராக இருந்தது… இன்னும் இருக்கிறது…
என்ற நிலையில் போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனநிலையில் உலகையே அச்சுறுத்திய இரண்டு கொரோனா லாக் டவுன்களைக் கடந்து இந்தப் படத்தை முடித்து வெளியிட்டிருப்பது மணிரத்னத்தின் அசுர சாதனை என்றால்…
தமிழின் முதல் நிலை நடிகர்களாக இருக்கும் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி போன்றோரை முக்கிய பாத்திரங்களில் வைத்திருப்பது மட்டுமல்லாமல் சரத்குமார், பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, கிஷோர், திரிஷா என்று முக்கிய நடிக, நடிகையர்களை பாத்திரங்களில் பொருத்தி இருப்பதுடன் பொறுத்திருந்து வேலை வாங்கியதும் தேவ சாதனை என்று சொல்லலாமா..?
மேற்படி அத்தனை நட்சத்திரங்களும் ஒரே கூரைக்குள் ஒளிர ஒத்துக் கொண்டது மணிரத்னம் என்ற ஒற்றை மந்திரச் சொல்லால் மட்டுமே சாத்தியம்.
பொன்னியின் செல்வனை ஒரு முறைக்கு மேல் படித்தவர்களை விட்டு விடுங்கள் படிக்காதவர்களுக்கும் இந்த படத்தின் மூலம் கதையைப் புரிந்து கொள்ள முடிந்தது என்பதுதான் ஆகப் பெரிய விஷயம்.
சோழ ராஜ்ஜியத்தை சக்கரவர்த்தியாக ஆண்டு கொண்டிருந்த சுந்தர சோழன் நோய்வாய்ப்பட்டிருக்க மூத்த மகனான பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் வடக்கே சோழ எல்லையை விரிவுபடுத்த போர் தொடுத்துக் கொண்டிருக்க, தெற்கில் இலங்கை சென்று அதே வேலையை கச்சிதமாக முடித்துக் கொண்டிருந்தான் அவரது இளைய மகனான அருண்மொழி வர்மன்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சிற்றரசரகளின் துணையுடன் சுந்தர சோழருக்கு முன்பு சோழ ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டிருந்த மகன் அரியணை ஏற்ற பெரிய, சின்ன பழுவேட்டரையர்கள் ஒரு திட்டம் தீட்ட, அதை சுந்தரச் சோழரின் வாரிசுகளால் முறியடிக்க முடிந்ததா என்பதே கதை.
இதற்கிடையில் ஆட்சி சக்கரத்தை கையில் ஏந்தி சுந்தர சோழரின் புதல்வி குந்தவையாக வரும் திரிஷா சுற்றிக்கொண்டிருக்க, சக்கரவர்த்தி நாற்காலிக்கு ஆசைப்படும் பெரிய பழு வேட்டரையரின் இளைய மனைவி நந்தினிக்கு ஒரு கண் இருக்கிறது
ஆதித்த கரிகாலனாக வரும் விக்ரமின் ஆரம்பக் காட்சியே ஹாலிவுட் படம் பார்க்கும் பிரமையைத் தருகிறது. அந்தக் காட்சியிலேயே சட்டென்று கதைக்குள் தாவுகிற பாங்கில் தோழன் வந்திய தேவனாக வரும் கார்த்தியிடம் தங்கள் ராஜ்யத்திற்கு எதிராக சதி நடப்பதை தன் தந்தையிடம் சொல்ல தூது அனுப்பும் காட்சி அங்கேயே நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
தூது செல்லும் வந்தியத் தேவன் எப்படிப்பட்டவர் என்பதை சொல்லும் பாடலிலேயே சோழ வள நாட்டுச் சிறப்புகளையும் விஷுவலாகச் சொல்லிக் கொண்டே வருவதும் வரும் வழியிலேயே சிற்றரசர்கள் கூடி பெரிய பழு வேட்டரையர் தலைமையில் சதியாலோசனை செய்வதுமாக பத்து நிமிடத்துக்குள் நம் சிந்தைக்குள் கதை சிறப்பாகக் கடத்தப்படுகிறது.