2013 ஆம் ஆண்டு கமல்ஹாசன் டிஜிட்டல் தளத்தில் ‘விஸ்வரூபம்’ படத்தை நேரடியாக திரையிடும் முயற்சியில் இறங்கினார். ஆனால், அதற்கு எதிராக ஒட்டுமொத்த திரையரங்குகளும் எதிர்ப்பு தெரிவித்து கமலஹாசனின் முயற்சியை முறியடித்தனர். தயாரிப்பாளர் சங்கமும் அப்போது கமலுக்கு உதவி செய்யவில்லை.
அங்கே ‘கட்’ செய்து இங்கே வந்தால் இப்போது சூர்யாவிற்கு சொந்தமான 2Dநிறுவனத்தின் தயாரிப்பில் மார்ச் மாதம் வெளியாக இருந்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று (ஏப்ரல் 25) வெளியானது.
ஜேஜே ஃபெரடரிக் இயக்கியுள்ள இப்படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரையரங்கு உரிமை தவிர்த்து டிஜிட்டல் உரிமை மற்றும் தொலைக்காட்சி உரிமை விற்பனை செய்யப்பட்டிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ நேரடியாக மே முதல் வாரம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் எம்.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
“இன்று ஊடகங்களில் வெளியான செய்தி ஒன்று திரையரங்கு உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
2D நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளிவர இருந்த பொன்மகள் என்ற திரைப்படம் திரைக்கு வராமல் நேரடியாக OTT தளத்தில் வெளிவரப்போவதாக செய்தி வந்தது. மொத்த திரையுலகமும் நெருக்கடியில் இருக்கும்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடைமுறையில் உள்ள பழக்கத்தை தகர்த்து 1000 திரையரங்க உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
இது சம்பந்தமாக தயாரிப்பாளரை நாம் தொடர்பு கொண்ட போது தயாரிப்பாளர் நமது கோரிக்கைகளை ஏற்பதாய் இல்லை. ஆதலால் இனி அந்த தயாரிப்பாளர் மற்றும் அவரை சார்ந்தோர் வெளியிடும் அனைத்து படங்களையும் OTT தளத்தில் மட்டுமே வெளியிட்டு கொள்ளட்டும் என்பது அனைத்து திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக இருக்கிறது..!” என்று அவர் தெரிவித்தார்.
2013-ல் கமல் முயற்சி தோல்வியடைந்ததைப் போல் இப்போது சூர்யாவின் முயற்சியும் தோல்வி அடையுமா..? என்று ஆலோசித்தால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா கமலுக்கு எதிராக நின்றதால் அவருக்கு எதிராக எந்த கருத்தையும் கூறாமல் கமலுக்கு ஆதரவு கொடுக்காமல் அனைத்து திரைப்பட சங்கங்களும் மௌனம் காத்ததில் திரையரங்கு உரிமையாளர்கள் விருப்பம் எளிதாக நிறைவேறியது.
ஆனால், இப்போது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர் சங்கம் இல்லை என்பதுடன் இந்த விஷயத்தில் சூர்யாவுக்கு ஆதரவான சூழல் இருக்கிறது என்பதை ஒரு தயாரிப்பாளரின் குரல் உறுதி செய்வதாய் இருக்கிறது.
“ஒரு படத்தை தயாரித்து முடித்து விட்டு போட்ட பணத்தை முடக்கி வைக்க தயாரிப்பாளரால் எப்படி முடியும். ஊரடங்கு அமலில் இருந்தாலும் தயாரிப்பாளர் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த வேண்டும்.
அதேபோன்று திரையரங்கு திறக்கின்ற போது படத்தை வெளியிட வேண்டும் என்று கூறுகின்ற திரையரங்கு உரிமையாளர்கள் முன்கூட்டியே படத்தை விலைபேசி முன்பணம் கொடுப்பதற்கு தயாராக இருக்க மாட்டார்கள். ஏனென்றால் ஏற்கனவே ஓடிய திரைப்படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கவேண்டிய பங்குத் தொகையை படம் ஓடி முடிந்தும் கொடுக்காமல் மாதக்கணக்கில் தாமதப்படுத்தி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு தயாரிப்பாளரின் படத்தை எப்படி ரிலீஸ் செய்வது, எப்போது ரிலீஸ் செய்வது என்பதை எப்படி தீர்மானிக்க முடியும்..?” என்கிறார் அந்தத் தயாரிப்பாளர்.
இதற்கிடையில் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ படம் வெளியாகவிருந்த சூழலில் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அப்படம் வெளியாகவில்லை. அந்தப்படத்தையும் திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்பதை நேரடியாகக் கூறாமல் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார் திரையரங்கு உரிமையாளர் சங்கபொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் என்று உணர முடிகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகமே தனது இயக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டிய சூழலுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய நிலையில் திரைப்பட தயாரிப்பு, திரைப்பட வெளியீடு இவை இரண்டிலும் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ் நிலைக்கு திரையுலகம் தள்ளப்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் புதிய தொழில்நுட்பங்களையும், புதிய வியாபார அணுகுமுறைகளையும் அறிமுகப்படுத்துவதில் முனைப்பு காட்டும் கமலஹாசனின் வழியில் நடிகர் சூர்யா இப்போது களமிறங்கியிருக்கிறார்.
‘பொன்மகள் வந்தாள் படம் போன்று வேறு சில படங்களும் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடுவதற்கான வியாபாரம் பேசி முடிக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு காரணமாக அடிப்படையில் விநியோகஸ்தரான டிரைடண்டு நிறுவன உரிமையாளர் ரவீந்திரன் OTT தளத்தில் படத்தை வெளியிட வழங்கிய உரிமையை திரும்பப் பெற்று விட்டாராம்.
YNot ஸ்டுடியோ நிறுவனமும் OTT தள வியாபார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறதாம். இதுவரை ஒப்பந்தத்தை அவர்கள் ரத்து செய்யவில்லை’ என்கின்றனர்.
கமல்ஹாசன் 2013 ஆம் ஆண்டு டிஜிட்டல் தளத்தில் ‘விஸ்வரூபம்’ படத்தை நேரடியாக திரையிடும் முயற்சியில் தோல்வி அடைந்திருந்தாலும் அவரது கனவு ஏழாண்டுகள் கழித்து நடிகர் சூர்யா மூலம் நிஜமாகியிருக்கிறது என்பது மட்டும் உண்மை. இதனால் இந்த முயற்சிக்கு கமல் ஆதரவு தெரிவிப்பார் என்று நம்பலாம்.
அத்துடன் இப்படி வெளியிடுவதன் சாதக, பாதகங்களை சூர்யா கவனத்தில் வைத்தே இப்படி காயை நகர்த்தியிருப்பார் என்பது தெளிவு. அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..!