தீயிலிட்டு சாம்பலாக்கினாலும் அதிலிருந்து உயிர் பெற்று வரும் புராணகாலப் பறவையாக நம்பப்படுவது பீனிக்ஸ்.
அப்படி நசுக்க நசுக்க அதிலிருந்து உயிர்த்துக் கிளம்பும் ஒடுக்கப்பட்ட பிறவியாக இருக்கிறார் படத்தின் நாயகன் சூர்யா சேதுபதி.
கதையின் களம் நாம் நன்கறிந்த வடசென்னைப் பகுதிதான். அதிலும் குத்துச்சண்டை பின்னணியை இன்னும் சில படங்களில் பார்த்திருக்கிறோம்.
எனவே விஜய் சேதுபதியின் பதின்வயது மகன் இதில் நாயகனாக அறிமுகமாகிறார் என்கிற ஆச்சரியத்தைத்தவிர வேறு எந்த முக்கியத்துவமும் படத்துக்கு முந்தைய எதிர்பார்ப்பில் இல்லை.
ஆனால் இதெல்லாம் படத்தைப் பார்த்த பின்பு மாறி விடுகிறதா என்பதைப் பார்க்கலாம்.
அத்தனை சிறிய பையன் சூர்யா ஆளுங்கட்சி எம்எல்ஏ சம்பத்தை 36 வெட்டுக்களுடன் கொன்றார் என்ற செய்தியுடன் படம் தொடங்குகிறது. எனவே அவரைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.
ஆளுங்கட்சி எம்எல்ஏவைக் கொன்றால் சும்மா விட்டுவிடுவார்களா? சிறையில் இருக்கும் முக்கிய ரவுடிகளை வைத்து அங்கேயே அவரை முடிக்கப் பார்க்கிறார்கள். அத்தனை பேரையும் தனி ஒரு மனிதனாக… (பையனாக..?) சுளுக்கு எடுக்கிறார்.
அடுத்து வேறு சில மூர்க்கமான ரவுடிகளை சிறைக்குள்ளே அனுப்பி முடித்து விடப் பார்த்தால் அந்த பாச்சாவும் சூர்யாவிடம் பலிக்கவில்லை. அடி வாங்கியவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக இவரோ சிற்சில காயங்களுடன் தப்பிக்கிறார்.
எனவே எம்எல்ஏக்களின் பாதுகாவலராக இருந்தவர்களே கோர்ட்டுக்கு கூட்டி வரப்படும் சூர்யாவை வெளியில் இருந்து போட முயற்சிக்கிறார்கள். அது மட்டும் முடிந்து விடுமா என்ன..?
ஆனால் கதைக்குள் சின்ன நகர்த்தலாக போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் சூர்யா பற்றி ஒரு பக்கம் விசாரித்து கொண்டு வரும் போலீஸ் அதிகாரி ஹரிஷ் உத்தமன் இந்த இடைவேளைக் காட்சியில் சூர்யாவின் தீரத்தை நேரிலேயே பார்க்கிறார்.
அத்துடன் இடைவேளை வந்து விடுகிறது. ஆக மூன்று மேஜர் ஃபைட்டுடன் முதல் பாதி முடிந்துவிட, பாப்கார்ன் கொரிக்கப் போகிறோம்.
அதுவரை பார்த்த படத்தில் நாம் புரிந்து கொண்டது கதை அளவில் பெரிய நகர்த்தல்கள் இல்லை என்றாலும் காட்சி அளவில் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார் இயக்குனர் அனல் அரசு என்பதுதான்.
தெரிந்த களம் தெரிந்த காட்சிகள் என்றாலும் ஒரு துளியும் அலுப்பு கட்டாமல் கடந்து விடுகிறது முன்பாதி. குறை சொல்லித்தான் ஆக வண்டும் என்றால் இதில் என்ன கதை இருக்கிறது என்று இரண்டாவது பாதிப் படம் பார்க்க உள்ளே நுழைகிறோம்.
இப்போது சூர்யாவின் உக்கிரம் பற்றி அறிந்த ஹரிஷ் உத்தமன் பார்வையில் சூர்யாவின் ஃபிளாஷ்பேக் சொல்லப்படுகிறது. அங்குதான் கதையே சுவாரஸ்யம் பிடிக்கிறது. ஒரு நியாயமான நல்ல படத்தைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற நம்பிக்கை அங்கேதான் பிறக்கிறது.
பிறகு கிளைமாக்சில் இனி யாரை நம்பியும் பிரயோஜனம் இல்லை என்று எம்எல்ஏவின் குடும்பமே களத்தில் இறங்க, மேலிடத்து அழுத்தம் காரணமாக போலீஸ் கமிஷனரும், சிலை அதிகாரிகளுடன் ஓரம் கட்ட… என்ன ஆகிறது என்ற பதைபதைப்புடன் படம் முடிகிறது.
ஒரு பதின் பருவத்துச் சிறுவன் ஒரு சூப்பர் ஸ்டாருக்கு உண்டான இத்தனைப் பெரிய ஆக்ஷன் கதையைத் தாங்குவது என்பது குருவி தலையில் பனங்காய் அல்ல… பலாக்காயையே வைக்கும் முயற்சி..!
ஆனால் அதையும் அனாயாசமாகத் தாங்கி இருக்கிறார் சூர்யா. அதற்கு முழுக் காரணமும் இயக்குனரைத்தான் சேரும். ஏனென்றால் ஒரு ஆக்ஷன் படத்தை எப்படி நம்பகமாக தருவது என்பதை ஒரு ஸ்டண்ட் மாஸ்டரை விடவும் இன்னொருவர் தீர்மானித்து விட முடியாது.
அந்த வகையில் முழு கிரெடிட்டும் அனல் அரசுவைதான் சேருகிறது.
ஆனாலும் அவரது ஆளுமைக்கு ஈடு கொடுத்து அதை காட்சியில் கொண்டு வந்த சூர்யாவின் முயற்சியும் பயிற்சியும் சாதாரணமானது அல்ல.
*ஒரு சிங்கக்குட்டி வேட்டை கற்கும் முயற்சி. அதில் வெற்றி பெற்றிருக்கும் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்…* இனி அவர் நடிக்கவும் கற்கலாம்..!
சூர்யாவின் தாயாக வரும் திவ்யதர்ஷினி நடிப்பையும் சொல்லியாக வேண்டும். பெற்ற உள்ளம் அங்கங்கே பதறி எம் எல் ஏ வின் மனைவி வரலட்சுமியிடம் அடி வாங்கி… அம்மம்மா..!
“இப்படித்தான் நடிப்பேன்…” என்றில்லாமல் நடிக்க வாய்ப்பு கிடைத்த எல்லா இடத்திலும் புகுந்து புறப்பட்டு விடுகிறார் வரலட்சுமி. முழு வில்லி இல்லை என்றாலும் அரை வில்லியாக அங்கங்கே வந்து முரட்டுத்தனம் காட்டுவதும்… அதுவும் மன்னிக்கச் சொல்லி கெஞ்சும் திவ்யதர்ஷினியை ஒரு எத்து எத்த காலை தூக்குமிடம்… டெர(ர்) லட்சுமி..!
கொஞ்ச நாள் கழித்து வரும் வில்லன் சம்பத் ராஜ் தனது வழக்கப்படியே மிரட்டுகிறார். அவரை வம்புக்கு இழுக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதி முத்துக்குமாரும் வில்லனுக்கு வில்லன். சூர்யா சம்பத்தைப் போட்டு விட, அந்த சந்தோஷத்தில் சாவு வீடு என்றும் பார்க்காமல் ஒரு குத்து போடுகிறார் பாருங்கள். அவர் முத்துக்குமார் அல்ல … சரியான குத்துகுமார்..!
கமிஷனர் நரேன், சிறை அதிகாரி வேல்ராஜ் இருவரையும் நடிக்க வைக்கவில்லை..! போஸ்டிங்கே போட்டு கொடுத்து விட்டார்கள். ஹரிஷ் உத்தமனும் யூனிஃபார்ம் போலவே மிடுக்கு..!
இன்ன பிற பாத்திரங்கள் ஏற்ற அத்தனை பேரும் கனக்கச்சிதமாக நடித்திருக்கிறார்கள் என்பது இயக்குனரின் திறமைக்குச் சான்று..!
இந்தப் படத்தில் இருந்து ஒரு முன்னணி கமர்சியல் இயக்குனரும் ஆகிறார் அனல் அரசு..!
வேல்ராஜின் ஒளிப்பதிவும், சாம் சிஎஸ் கே இன் இசையும் ஒரு உச்ச நட்சத்திரத்தின் படத்துக்கு உண்டான நேர்த்தியுடன் இருக்கிறது..!
முழு திருப்தியைப் படம் தந்தும் கூட ஒரு சின்னப் பையன் எல்லா மட்டத்தினரையும் அடித்துத் துவைக்க முடியுமா என்கிற லாஜிக்கை நாம் நம்ப முடியாமலேயே வெளியே வருகிறோம். ஆனால் அந்த மேஜிக் தான் படத்தின் உயிர் நாடி..!
பீனிக்ஸ் – அக்கினிக் குஞ்சு..!
– வேணுஜி