கொரோனா முன் எச்சரிக்கை காரணமாக மாநிலம் முழுவதும் நாளை மாலை முதல், 144 தடை உத்தரவு அமலாகிறது.
இதனால் சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளால் கோயம்பேடு பேருந்து நிலையம் நிரம்பி வழிகிறது. பயணிகள் பலரும் பஸ்களில் இடம் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி விபரம்:
“சென்னையில் இருந்து நாளை மாலை வரை, வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். ஆகையால் பயணிகள் கவலைப்பட தேவையில்லை.
சென்னை மாநகரப் பேருந்துகளையும் திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய ஊர்களுக்கு இயக்கவுள்ளோம்.
ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், பஸ்களில் கூட்டம் அதிகரித்து விட்டது. ஆம்னி பேருந்துகளையும் போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்த உள்ளோம்.
அதே நேரத்தில் தனியார் பேருந்துகளில் கட்டணம் அதிகரிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்.
தமிழகம் முழுவதும் மக்கள் நடமாட்டம் வெளியில் இருக்கக்கூடாது என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
மேலும், வெளிமாவட்ட பேருந்து டிப்போக்களில் இருந்து, கூடுதல் பேருந்துகள் காலியாக சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஆகையால் அனைத்து பயணிகளையும் வெளியூர்களுக்கு அனுப்ப முடியும்…”