ஊருக்கு வெளியே தனிமையில் வசிக்கும் சோனியா அகர்வால் மனதில் பலவிதமான குழப்பங்களுடன் வாழ்கிறார் என்பது படத்தின் ஆரம்பமாக இருக்கிறது.
ஊருக்குள் தனது இரண்டு பேரன்களை வைத்துக்கொண்டு படாத பாடுபட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பாட்டியம்மா.
இன்னொரு பக்கம் சற்றே வசதியான குடும்பத்தில் ஆதிக்க சாதியை சேர்ந்த அண்ணன் ஜாதி வெறி கொண்டவராகவும் தம்பி சமத்துவத்துடன் வாழ்பவராகவும் இருக்கிறார்கள்.
சமத்துவ விரும்பியின் மகளும் பாட்டியம்மாவின் இரண்டாவது பேரனும் ஒரே பள்ளியில் படித்து வருவதுடன் நட்புடனும் முளைவிடும் காதலுடனும் பழகி வருகிறார்கள்.
இந்த மூன்று கதைகளுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகள்தான் ஒட்டுமொத்தப் படமும்.
சோனியா அகர்வால் படத்துக்குள் இருந்தாலும் அவரைச் சுற்றியே கதை நகரவில்லை. இன்னும் சொல்லப்போனால் முதல் பாதியில் அங்கங்கே அவர் வந்து போவதோடு சரி… இரண்டாவது பாதியில்தான் அவரது கதை என்ன என்பது சொல்லப்படுகிறது.
ஆனால், பாட்டியின் இரண்டாவது பேரனாக வரும் பதின் பருவ திலீப்ஸ்தான் கதையை நகர்த்திச் செல்கிறான்.
மாற்றுத் துணி கூட இல்லாத வாழ்க்கையை கஷ்டப்பட்டு வாழ்வது முதல், தன்னுடன் உண்மையாக பழகும் வர்ஷிதா சுகன்யாவுடன் இருக்கும்போது மட்டும் கவலைகளை மறந்து வாழ்வது, தனிமையில் வாழும் சோனியா அகர்வால் மீது பச்சாதாபம் கொள்வது, அவர்தான் தனது தாய் என்று அறிந்து மருகுவது என்று அனைத்து நிலைகளிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் திலீப்ஸ்.
அதே பருவத்தில் வரும் வர்ஷிதா சுகன்யாவுக்கு திரைக்கு ஏற்ற அழகான முகம். இன்னும் சில வருடங்களில் இந்த சிறுமியை ஹீரோயினாக பார்க்க முடியும்.
பேரன்களை வளர்க்கும் பாட்டிதான் படம் முழுக்க நிறைந்து இருக்கிறார். அவரது நடிப்பும் சரி ஆதிக்க சாதி அண்ணன் தம்பிகளின் அம்மாவாக வரும் பாட்டியும் சரி கிராமத்து பாத்திரங்களாகவே மாறி இருக்கிறார்கள்.
ஆதிக்க வெறி பிடித்த அண்ணன் சாதி வெறியால் தனது மகனையே விஷம் கொடுத்து கொல்லும் காட்சி கொடூரம்.
நல்ல மனமும் சமத்துவ குணமும் கொண்ட தம்பி ஏன் பொசுக்கென்று இறந்து போகிறார் என்று தெரியவில்லை.
குட்டிப்புலி சரவணன் மற்றும் ஆதவன் இருந்தும் அவர்களுக்கான பங்களிப்பு சரியாக பயன்படுத்தப்படவில்லை.
ராஜேஷின் ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கிறது, ரஞ்சித் வாசுதேவன் பின்னணி இசை பல இடங்களில் வசனங்களை விழுங்கி விடுகிறது.
படம் முடிவதற்குள் அடுத்தடுத்து மூன்று சாவுகள் விழுந்து படமே சோகமயமாகி விடுகிறது.
கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை கொண்டு கதையை அமைத்திருக்கும் இயக்குனர் குரு.ஏ கிராமத்தில் இருக்கும் வலுவான பிரச்சனைகளைத் தொட்டிருந்தும் அவற்றுக்கு சரியான முடிவு கொடுக்க முடியாமல் திணறி இருக்கிறார்.
அதற்கு பட்ஜெட் உட்பட பல காரணங்கள் இருக்கலாம்.
இருந்தாலும் தெளிவான முடிவு ஒன்றைச் சொல்லி இருந்தால் பாராட்டுகள் குவிந்திருக்கும்.
பருத்தி – பறக்கும் பஞ்சு..!
– வேணுஜி