November 12, 2025
  • November 12, 2025
Breaking News
November 6, 2025

பரிசு திரைப்பட விமர்சனம்

By 0 106 Views

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிறைய நடந்து வரும் இந்தக் காலகட்டத்திற்குத் தேவையான படம். 

ஆண்கள் என்றால் நாட்டுக்கு… பெண்கள் என்றால் வீட்டுக்கு… என்கிற தத்துவத்தை மாற்றி பெண்களால் வீட்டையும், நாட்டையும் ஒரு சேரக் காக்க முடியும் என்ற கருத்தைக் கொண்டு பெண்மணியான கலா அல்லூரி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரித்தும் இருக்கும் படம் இது. 

கல்லூரியில் படிக்கும் புதுமுகம் ஜான்விகாவை அவரது தந்தை ஆடுகளம் நரேன் பல வித்தைகளையும் கற்பித்து வீரமுள்ள பெண்ணாக வளர்க்கிறார். 

காலை எழுந்ததும் ஓட்ட பயிற்சி, பின்னர் துப்பாக்கி சுடும் பயிற்சி என்று ஒரு ராணுவத்தில் சேர எல்லா தகுதியுடனும் ஜான்விகாவை அவர் வளர்க்க, ஆசிய அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் வென்று தாய்நாட்டுக்கும் தங்கள் கல்லூரிக்கும் பெருமை சேர்க்கிறார் ஜான்விகா.

அவரது காதலை பெற கல்லூரியில் பல மாணவர்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தனிக் கதை.

இன்னொரு பக்கம் மருத்துவமனை ஒன்றில் சட்டத்துக்குப் புறம்பான காரியங்கள் நடப்பதைக் கண்டுபிடிக்கிறார் அங்கே இருக்கும் மருத்துவர். அதை விடியோ எடுத்து ஒரு மெமரி கார்டில் ஏற்றி போலீசிடம் புகார் செய்யக் கொண்டு செல்லும்போது அவர் மீது விபத்தை ஏற்படுத்திக் கொல்கிறார்கள்.

அதன் பின்னால் காரில் வந்து கொண்டிருக்கும் ஜான்விகா அவரை மருத்துவமனையில் சேர்ப்பதோடு அந்த மெமரி கார்டை கைப்பற்றுகிறார். 

அதன் பின் நடந்தது என்ன… அந்த மருத்துவமனையில் நடைபெற்ற குற்றங்கள் என்ன… இதனால் ஜான்விகாவின் லட்சியப் பயணம் என்ன ஆனது என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் படத்தின் பின்பகுதி பதில் சொல்கிறது.

ஒரு புதுமுகம் என்று தெரியாத அளவில் ஜான்விகா இந்த பாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருக்கிறார். அழகைவிட உடல் மொழியும் ஆற்றலும் முக்கியம் என்பதால் ஓட்டப் பயிற்சி சண்டை பயிற்சி என்று எல்லா வித்தைகளையும் கற்றுத் தேர்ந்து அவற்றை ஒரு சேர பயன்படுத்தி ஒரு ஆக்சன் ஹீரோயினாக காட்சியளிக்கிறார் ஜான்விகா. 

அந்த கால விஜயசாந்தியை நினைவுபடுத்தும் அளவில் இருக்கும் ஜான்விகா, வைஜயந்தி ஐபிஎஸ் போன்ற ஆற்றல் மிக்க படங்களில் நடித்தால் தனிக் கவனம் பெறுவார்.

வழக்கமாக ஒரு ஹீரோ இரண்டு ஹீரோயின் என்கிற அளவில் கதை இருக்கும். ஆனால் இதில் ஹீரோயின் முக்கிய பாத்திரத்தை ஏற்றிருப்பதால் ஜெய் பாலா, கிரண் பிரதீ சுதாகர் என்று இரண்டு ஹீரோக்கள் வருகிறார்கள்.

அதில் ஒரு ஹீரோவை மலையில் இருந்து தவறி விழுந்து விடாமல் இருக்க ஜான்விகாவே கை கொடுத்து காப்பாற்றுவதெல்லாம் பெண்ணிய லந்து.

பெண்ணைப் பெற்ற தந்தை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வருகிறார் ஆடுகளம் நரேன். இப்படிப்பட்ட தந்தைகளுக்கு இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்யலாம்.

காமெடி ஏரியாவில் மனோபாலா, சின்னப் பொண்ணு, சென்றாயன் வருகிறார்கள். ஆனால் காமெடி வந்திருக்கிறதா என்று கேட்கக் கூடாது. 

ஒளிப்பதிவை ஏற்று இருக்கும் சங்கர் செல்வராஜ் பரிசுக் களத்தை பதமாகப் படமாக்கி  இருக்கிறார்.

பாடல்களுக்கு இசையமைத்திருக்கும் ரஜீஷ், மற்றும் பின்னணி இசையை அமைத்திருக்கும் ஹமரா சி.வியும் பக்குவமாக வேலை பார்த்திருக்கிறார்கள். 

சினிமாவில் ஒரு பொறுப்பை ஏற்க ஆண்களே அஞ்சும் நிலையில், திரைப்படக் கல்வியில் தேர்ச்சி பெற்று படத்தின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்று இருப்பதுடன் இன்னொரு தயாரிப்பாளரை நம்பாமல் சொந்த தயாரிப்பாகவும் இந்தப் படத்தைத் திரைக்குக் கொண்டு வந்திருக்கும் ‘கலா அல்லூரி’ யை ஒரு ‘ கலைக் கல்லூரி ‘ என்று அழைத்தாலும் தப்பில்லை. 

பரிசு – பெண்ணின் பெருமை..!

– வேணுஜி