வழக்கமாக படங்களில் ஒன்று நாயகனை ஆவி பிடிக்கும். அல்லது நாயகி மேல் ஆவி பீடிக்கும். ஆனால் இந்தப் பட இயக்குனர் இ.கே.முருகனுக்கு ஆவிகளை ரொம்பப் பிடிக்கும் போலிருக்கிறது. அதனால் இரண்டு ஆவிகளை நாயகன், நாயகி இரண்டு பேரின் மேலும் ஏற்றிவிட்டு அழகு (!) பார்த்திருக்கிறார்.
நாயகன் தமன் குமாரும், நாயகி ஸ்வேதா டோரத்தியும் Made for each other ஜோடியாகப் பொருந்திப் போகிறார்கள். அவர்களுக்கு இடையே பூர்வ ஜென்ம பந்தம் இருப்பது போல் அடிக்கடி அவர்கள் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வு நடக்கிறது.
பரிசுப் போட்டியில் விழுந்த பைக்கையும் ஸ்கூட்டரையும் எப்படி புரிந்துணர்வோடு மாற்றிக் கொள்கிறார்களோ, அப்படியே ஒரு கட்டத்தில் இதயங்களையும் பரிமாறிக்கொள்ள நேர்கிறது.
வீடுகளுக்கு டிடிஎச் கனெக்ஷன் கொடுக்கும் வேலை இருவரையும் கச்சிதமாக கனெக்ட் செய்து விடுகிறது.
இதற்கிடையே அந்தப் பகுதி பார்க்கில் அமானுஷ்ய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் அந்த பார்க்குக்குள் செல்ல நேரிட அங்கே இருந்த அமானுஷ்ய ஆவிகள் இவர்கள் மேல் ஏறிக் கொள்கின்றன.
ஆவிகளின் நோக்கம் என்ன… ஆவிகளிடமிருந்து இவர்கள் மீண்டு ஒன்று சேர்ந்தார்களா என்பது பின் பாதிக்கதை.
முன் பாதியில் முழுக்க சிரிக்க ரசிக்க வைத்து விட்டு பின்பாதியில் எல்லோரையும் பயமுறுத்த வேண்டும் என்று இயக்குனர் எதிர்பார்த்து இருப்பார் போலிருக்கிறது.
அதனால் தமன் குமாரும் பிளாக் பாண்டியும் சேர்ந்து அடிக்கும் டூட்டி நேர லூட்டிகளில் தியேட்டர் சிரிப்பில் மூழ்கும் என்கிற எதிர்பார்ப்பில் காமெடிக் காட்சிகளை வைத்திருக்கிறார். அதில் சிலர் சிரிப்பில் மூழ்க, சிலர் தம் கட்டி சிரிக்காமல் சீரியசாகப் பார்க்கிறார்கள்.
ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார்கள் தமன் குமாரும், ஸ்வேதா டோரத்தியும். ஆவி ஏறிய பிறகு அதில் ‘ பயங்கரமாக ‘ நடித்து விட வேண்டும் என்பதால் முன் பாதியில் இலகுவாக காதலில் கடக்கிறார்கள்.
டிடிஎச் கனெக்ஷன் கொடுக்கப் போகும் இடங்களில் எல்லாம் வதைபடுவது பிளாக் பாண்டியின் வேலையாக ஆகிவிடுகிறது.
ஹீரோ ஹீரோயினுக்குள் ஆவிகள் புகக் காரணமாக இருந்த காதல் ஜோடியும் பளிச்சென்று இருக்கிறார்கள். காதலனுக்கு கோபம் வந்தால் கன்னடத்தில் திட்டுவான் என்பதால் அவர்கள் ஆவியாக மாறிய பிறகும் ஆவி ஏறிய தமன் கன்னடத்தில் திட்டுவது ‘அடடே’ லாஜிக்..!
அமைச்சரின் மகன் என்றாலே அவன் காமுகனாகவும், கஞ்சா அடிப்பவனாகவும்தான் இருப்பான் என்கிற சினிமா விதியை யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. இதிலும் அப்படியே.
தன் உயிரைக் காப்பாற்ற வரும் பெண் காவல் அதிகாரியையே படுக்கையில் தள்ளுவதில்… என்னா ஒரு வில்லத்தனம்..?
பாண்டியன் குப்பனின் ஒளிப்பதிவும், ஹமாரா சி. வி யின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் குறை சொல்ல முடியாமல் பயணித்திருக்கின்றன.
இந்தப் பட இயக்குனர் நிறைய ஆவிகளை ஹேண்டில் செய்திருப்பார் போலிருக்கிறது. பட முடிவில் ‘ஆவிகளுக்கு என்ன தேவையோ அதை நிறைவேற்றி விட்டால் அவை வெளியேறிவிடும்’ என்ற அரிய கருத்தைச் சொல்லி நமக்கு ஆவிகளின் மேல் உள்ள பயத்தைப் போக்கி விடுகிறார்.
அந்த வகையில் இந்த…
பார்க்’ கை பயப்படாமல் பார்க்கலாம்..!